search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் ஆய்வு"

    உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி காரணமாக இன்று ஊசுடு ஏரிக்கு ஆய்வு சென்ற கவர்னர் கிரண்பேடியுடன் அதிகாரிகள் செல்லாமல் புறக்கணித்தனர்.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு தனி அதிகாரம் இல்லை என ஆம் ஆத்மி கட்சி தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் அமைப்பு பெஞ்ச் வழங்கிய இந்த தீர்ப்பு நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    அதோடு இனி புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகளை பார்வைக்காக மட்டுமே அனுப்புவோம். மேலும், கவர்னருக்கு புதுவை மாநிலத்தின் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உரிமை உண்டு. ஆனால், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு கவர்னர் தரப்பில் யூனியன் பிரதேசமான புதுவையும், டெல்லியும் ஒன்றல்ல என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் இருவேறு பிரிவுகளின் கீழ் 2 யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றுள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஏற்கனவே புதுவையில் நிலவி வந்த கவர்னர், முதல்- அமைச்சர் இடையிலான மோதல் முற்றி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கவர்னர் கிரண்பேடி மதிப்பளிக்கவில்லை என்றால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வார இறுதி நாளான இன்று கவர்னர் கிரண்பேடி ஊசுடு ஏரிக்கு ஆய்வுக்கு சென்றார். கவர்னருடன் வழக்கமாக அரசு துறையின் முக்கிய அதிகாரிகள் உடன் செல்வது உண்டு.

    ஆனால், இன்றைய தினம் ஏரிக்கு சைக்கிளில் சென்ற கவர்னருடன் பெரும்பாலான அதிகாரிகள் உடன் செல்லவில்லை. வனத்துறை அதிகாரி குமார் மற்றும் வழக்கமாக செல்லும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எதிரொலி காரணமாகவே அதிகாரிகள் கவர்னருடன் செல்லாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

    ஊசுடு ஏரியை சுற்றிப் பார்த்த கவர்னர் கிரண்பேடி அங்கு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மீண்டும் சைக்கிளிலேயே ராஜ்நிவாஸ் திரும்பினார். #Kiranbedi
    ×