என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமங்களான மடவாமேடு சுனாமி நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று காலை மீனவர் குடியிருப்பு பகுதியில் மழை பெய்தது. அப்போது மீனவர்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் தேங்கியிருந்த மழைநீர் கருப்பு நிறமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கருப்பு நிறமான மழைநீரை கீழே ஊற்றிவிட்டு மீண்டும் பாத்திரங்களை வீட்டின் மாடி பகுதியில் வைத்தனர்.
10 நிமிடத்துக்கு பின்னர் மீண்டும் சென்று பார்த்த போது அனைத்து பாத்திரங்களிலும் தேங்கியிருந்த மழைநீர் கருப்பாகவே இருந்தது. இதை பார்த்து மீனவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். மழைநீர் கருப்பு நீராக மாறிய சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் மீன்பிடி சீசனையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து மீனவர்கள் வந்து தங்கியிருந்து மீன் பிடித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த தங்கமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்களும், இன்னொரு விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணி அளவில் பருத்திதுறை பகுதியில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் சுற்றி வளைத்து 20 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் கூறி அவர்கள் மீது குற்றம்சாட்டினர். பின்னர் அவர்களை காங்கேசன் துறை முகத்துக்ககு அழைத்து சென்றனர். அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் நாகை அக்கரைபேட்டையில் உள்ள மீனர்வர்களின் உறவினர்களும் காரைக்காலை சேர்ந்த மீனவர்களின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கடலோர காவல்படை போலீசாரிடம் முறையிட்டு தங்கள் குடும்பத்தினரை மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.
நாகை பகுதியில் கடல் சீற்றம் காரணமாக சில நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இயற்கை சீற்றங்களை தாண்டி வருமானத்துக்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கை மீனவர்கள் தாக்குவதும் அடிக்கடி நடந்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதான மீனவர்களை மீட்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை:
நாகை கொத்தான்குளம் கீழ்கரையை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 76). ஓய்வுபெற்ற ரெயில்வே போலீஸ்காரர்.
நாகை அலிமரைக்காயர் தெருவை சேர்ந்தவர் அமீர் அலி (50), ஆட்டோ டிரைவர்.
நேற்று துரைராஜ் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் அமீர் அலி வந்தார். திடீரென ஆட்டோ துரைராஜ் மீது மோதுவது போல் ஓட்டி சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ், அமீர் அலியிடம் ஆட்டோவை மெதுவாக ஓட்டி செல்ல வேண்டியது தானே? என்று கூறினார். இதில் கோபம் அடைந்த அமீர் அலி, ஆட்டோவை விட்டு இறங்கி துரைராஜை தாக்கினார். அப்போது அவர் திடீரென அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் அமீர் அலியை கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் ரெயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தினகரன், தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம் மற்றும் காவலர்கள் சுரேஷ்குமார், நவநீதன், சதிஷ்குமார் ஆகியோர் நேற்று இரவு ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வந்த பயணிகள் ரெயிலில் ஏறி சோதனையிட்டபோது ஒரு பெட்டியில் 15 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை சோதனையிட்டபோது ரேஷன் அரிசி என்பதும் 20 கிலோ வீதம் 15 மூட்டைகளில் 300 கிலோ அரிசியை கடத்தி வந்தவர்கள் போலீசார் சோதனையை கண்டு அதனை விட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று இரவு திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வந்த பயணிகள் ரெயிலில் சோதனையின்போது கேட்பாரற்று கிடந்த 20 குவார்ட்டர் மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கீழ அகனி தெற்கு தெருவில் வசிக்கும் கார்த்திகேயன் மகன் கலையரசன் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவிதாவுக்கும் அதே தெருவில் வசிக்கும் கார் டிரைவர் கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நெருங்கி பழகியதில் அவர்களுக்கிடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கண்ணன் கவிதாவை சென்னைக்கு அழைத்து சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். கலையரசன் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கண்ணன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக நேற்று முன் தினம் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டார். இதனை அறிந்த கலையரசன், கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டார். அவர் அரிவாளுடன் கண்ணன் வீட்டுக்கு சென்று பதுங்கி இருந்தார். அவர் வெளியே வந்ததும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசனையும, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை கார்த்திகேயனையும் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழஅகனி சலவை தொழிலாளர் தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவர் மகன் கண்ணன் (வயது 32). கார் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அதே பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் எதிரெதிர் வீடு என்பதால் கண்ணனுக்கும், கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதனால் மனைவியின் கள்ளக்காதலை கலையரசன் கண்டித்தார். கண்ணனுடன் உள்ள தொடர்பை கைவிடும் படி கூறினார். இது தொடர்பாக கலையரசனுக்கும், அவரது மனைவி கவிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்தாண்டு கண்ணன், கள்ளக்காதலி கவிதாவை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். பின்னர் வெளியூரில் தங்கி இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதனால் கண்ணன் மீது கலையரசன் தீராத கோபத்தில் இருந்து வந்தார். மேலும் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து திட்டம் தீட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கண்ணன் கீழ அகனி கிராமத்துக்கு வந்தார். இன்று காலை 9 மணியளவில் அப்பகுதியில் கண்ணன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் மறைந்திருந்து வந்த கலையரசன் திடீரென அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கழுத்து பகுதிகளில் படுகாயம் அடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து கலையரசன் தப்பி ஓடிவிட்டார்.
இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் கலையரசனை தேடி வருகின்றனர்.
கார் டிரைவர் இன்று காலை பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுக பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து கடலில் ராட்சத அலைகள் எழுந்தது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் ஏற்றி வந்த ஒரு சிறிய கப்பல் நாகப்பட்டினம் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த கப்பல் கடல் சீற்றம் காரணமாக தத்தளித்தது. அதனை துறைமுகத்துக்கு மீட்டு வர நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் விசைப்படகில் சென்று அந்த சிறிய கப்பலை தங்கள் விசை படகுடன் கட்டி இழுத்து வந்தனர். அவர்கள் முகத்துவாரத்துக்கு வந்தபோது கப்பல் நிலை தடுமாறி பாறையின் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் மீனவர்கள் நீண்ட நேர கடும் போராட்டத்துக்கு பின் கப்பலை துறைமுக பகுதிக்கு இழுத்து வந்தனர். அங்கு கப்பல் நிலை நிறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கடலங்குடி, நாராயணமங்கலம், கல்யாணசோழபுரம், புத்தமங்கலம், கொற்கை ஆகிய ஊர்களில்சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.
நாராயணமங்கலம் வரதராஜபெருமாள் சிலை, கல்யாணசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், புத்தமங்கலம் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், ஆத்தூர் லட்சுமி நாராயணபெருமாள் சிலை ஆகிய 7 சிலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலங்குடி ரத்தினபுரீஸ்வர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சிலைகள் கடந்த 2012-ம் ஆண்டு மே 12-ம் தேதி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு கொற்கை வீரட்டேஸ்வரர் கோவிலில் நடராஜர் சிலையும் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கொற்கை நடராஜர் சிலையை தவிர வேறு எந்த சிலையும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப் படவில்லை.
இந்நிலையில் சிலைகள் கொள்ளைபோன கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆய்வு செய்தார். கோவில்களில் பாதுகாப்பு முறைகளை குறித்து நிர்வாகிகளிடம் அவர் விளக்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலைகள் திருட்டுப் போன கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். தொன்மையான கோவில்கள் சரியாக பராமரிக்கப்படாமல் புறக்கணிப்பட்டுள்ளது. பாதுகாப்பு முறைகள் குறித்து கிராம மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிலைகள் திருட்டு நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது டி.எஸ்.பி. கலிதீர்த்தான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசனையொட்டி நாகை மாவட்டம் மற்றும் வெளிமாவட்டம் மீனவர்கள் ஏராளமானோர் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் செருதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன், புவனேஷ், பாலு ஆகிய மூவரும் தனித்தனி படகில் 10க்கு மேற்பட்ட மீனவர்களுடன் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்தும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன், நண்டு உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும், திசைக்காட்டும் கருவியையும் பறித்து கொண்டனர்.
மேலும் மீனவர்களை கடுமையாக தாக்கியதோடு இது குறித்து யாரிடமும் புகார் செய்ய கூடாது என்று மிரட்டி விரட்டி அடித்துள்ளனர்.
நாகை மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் இதனால் மீன்பிடி தொழிலுக்கு மீனவர்கள் செல்வது குறைந்து வருகிறது.
நாகை மாவட்டம் கூறை நாட்டில் காமராஜ் மாளிகை கட்டிடத்தில் காங்கிரஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
நாகை மாவட்ட காங்கிரஸ் நகர தலைவராக செல்வம் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த ராமானுஜம் என்பவர் நகர தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது மாவட்ட தலைவராக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் கருத்து வேறுபாடு காரணமாக செல்வத்தை நீக்கிவிட்டு ராமானுஜத்தை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வத்தின் ஆதரவாளர்கள் புதிய நிர்வாகி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் இன்று காலை மயிலாடுதுறையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்ததால் காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு ‘பூட்டு’ போட்ட நிர்வாகிகளை படத்தில் காணலாம்.
நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த 10 மீனவர்களை கடந்த 15-ந்தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதன்பிறகு கடந்த 17-ந்தேதி கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வந்ததால் நாகை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனால் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு பகுதிகளை மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்து வருகிறார்கள்.
நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த ரவி, மூர்த்தி, செல்வகுமார் ஆகிய 3 மீனவர்கள் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு படகில் வந்த சிலர், நாகை மீனவர்கள் சென்ற படகை சுற்றிவளைத்தனர். பின்னர் நாகை மீனவர்களின் படகில் ஏறினர்.
பின்னர் அவர்கள் படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள்- வலைகளை பறித்தனர். இனிமேல் இந்த பக்கம் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று மிரட்டி விட்டு அவர்களது படகில் தப்பி சென்று விட்டார்.
இன்று காலை 9 மணியளவில் கரை திரும்பிய நாகூர் மீனவர்கள் இந்த சம்பவத்தை பற்றி சக மீனவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, ‘‘மீன்கள்- வலைகளை பறித்து சென்றது இலங்கை மீனவர்களா? அல்லது கடற் கொள்ளையர்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வந்து விட்டோம்’’ என்றனர்.
இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் படையினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே வரி என்று ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளது. அதில் திருத்தம் கொண்டுவருகிறோம். வரியை குறைக்கிறோம் என்று கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை தான். ஆன்லைன் வணிகத்தை நம்நாட்டில் வளர்ச்சி அடைய செய்தால் உள்நாட்டு வணிகத்தையும, சில்லரை வணிகத்தையும் அழித்துவிடும். அதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விற்பனை செய்ய சந்தை கிடைக்காது. உற்பத்தி சுதந்திரத்தை விவசாயிகள் இழக்க நேரிடும். நம்நாட்டின் பொருளாதாரம் அன்னியர் கையில் சிக்கி கொள்ளும்.
ஜிஎஸ்டி வரியை ரத்துசெய்ய வலியுறுத்தி வரும் ஜனவரி 1-ந்தேதி வணிகர்கள் கடைகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம். ஜனவரி 30-ந்தேதி காந்தி நினைவு நாளன்று ஜிஎஸ்டிக்கு எதிராக காந்திய கொள்கையை மக்கள் பின்பற்ற வலியுறுத்தி மாநாட்டை நடத்த உள்ளோம். அன்னிய வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதால் நம்நாட்டில் முன்னேற்றம் அடைந்துள்ளதா? நாடாளும் தலைவர்கள் நம் மக்களை பற்றி சிந்திக்கவில்லை, வெளிநாட்டுக்காரர்களுக்காக ஆட்சி நடத்துகிறார்கள்.
ஜிஎஸ்டி வரியை இந்தியர்கள் கண்டுபிடித்தார்களா? அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் கூறுவதை இவர்கள் செயல்படுத்துகிறார்கள். அது எப்படி நமதுநாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். ஆன்லைன் வர்ததகத்தை முறியடிக்க வேண்டும்.
நதிநீர் இணைப்பு திட்டம் அவசியம்தான். தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை மத்தியில் ஆட்சியாளர்கள் பெற்றுத்தரவில்லை. ஆனால் ஒரே நாடு, ஒரே வரி என்று கூறுகிறார்கள். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் முடமாக்கப்பட்டதால்தான் அன்னியநாட்டின் தனியார் வங்கிகள் அதிக அளவில் தோன்றியதால் கந்துவட்டி, மீட்டர் வட்டி கொடுமைகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் அரசு தடைசெய்த பொருட்களை விற்பனை செய்ய வணிகர் பேரவை ஊக்குவிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.






