என் மலர்
செய்திகள்

பாதுகாப்பு குறைப்பாட்டால் கோவில்களில் சிலை திருட்டு: ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கடலங்குடி, நாராயணமங்கலம், கல்யாணசோழபுரம், புத்தமங்கலம், கொற்கை ஆகிய ஊர்களில்சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.
நாராயணமங்கலம் வரதராஜபெருமாள் சிலை, கல்யாணசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், புத்தமங்கலம் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், ஆத்தூர் லட்சுமி நாராயணபெருமாள் சிலை ஆகிய 7 சிலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலங்குடி ரத்தினபுரீஸ்வர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த சிலைகள் கடந்த 2012-ம் ஆண்டு மே 12-ம் தேதி மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு கொற்கை வீரட்டேஸ்வரர் கோவிலில் நடராஜர் சிலையும் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கொற்கை நடராஜர் சிலையை தவிர வேறு எந்த சிலையும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப் படவில்லை.
இந்நிலையில் சிலைகள் கொள்ளைபோன கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஆய்வு செய்தார். கோவில்களில் பாதுகாப்பு முறைகளை குறித்து நிர்வாகிகளிடம் அவர் விளக்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலைகள் திருட்டுப் போன கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். தொன்மையான கோவில்கள் சரியாக பராமரிக்கப்படாமல் புறக்கணிப்பட்டுள்ளது. பாதுகாப்பு முறைகள் குறித்து கிராம மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிலைகள் திருட்டு நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது டி.எஸ்.பி. கலிதீர்த்தான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






