என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கார் டிரைவரை அடித்து கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான 2 பேரை தேடி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு, மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் முருகசேன் (வயது 35) கார் டிரைவர். இவர் கடந்த 23-ந் தேதி மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி அவரது தம்பி ராமச்சந்திரன் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நடராஜன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். போலீசாரின் விசாரணையில் முருகேசனை 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

    இந்நிலையில் கொலையில் தொடர்புடைய தகட்டூர் இந்திராசலம் என்பவர் மகன்கள் மோகன்(32), குணசேகரன்(26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பலராமன் (26) வாய்மேடு பகுதியை சேர்ந்த பெயிண்டர் குணசேகரன் (35) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 4 பேரும் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரி கடலோர காவல் படை, மாவட்ட கலெக்டர் சுரேசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் கேரளாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 நாட்களுக்கும் மேல் கேரள கடல் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்வது இவர்களின் வழக்கம்.

    இந்த நிலையில் ஒக்கி புயல் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் பலர் மீட்கப்பட்டு வரும் நிலையில் கொள்ளிடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேரின் கதி என்ன? என்பது மர்மமாக உள்ளது.

    கொள்ளிடம் அருகே உள்ள கூழையார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், கலைமணி, தமிழ்பாலன், ஏழுமலை, வானகிரி கிராமத்தை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த ரவி, விமல்ராஜ், தினேஷ், விக்னேஷ், ராஜேஷ், ரகு, காளியப்பன், தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாயவன், கலைச்சந்திரன், விஜயநாதன், தரங்கம்பாடியை சேர்ந்த பார்த்திபன் ஆகிய 16 மீனவர்கள் கடந்த மாதம் 25-ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களின் கதி என்ன ஆனது? என்பது பற்றி தெரியவில்லை. இதனால் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மீனவ கிராம மக்கள் கண்ணீரில் மூழ்கி உள்ளனர். கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரி கடலோர காவல் படை, மாவட்ட கலெக்டர் சுரேசுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உள்ளனர்.

    நாகை மாவட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவ கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் மாயமான மீனவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினரிடம் சீர்காழி தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அதிகாரி மோகன் மற்றும் அதிகாரிகள் மீனவ கிராமங்களில் விசாரணை நடத்தினர். 



    அதிராம்பட்டினம் அருகே விவசாயி நிலத்தில் பயிரிடுவதற்காக உழவு செய்தபோது பழமையான நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருக்குச் சொந்தமான விவசாயநிலம் அதே பகுதியில் உள்ளது. இந்நிலையில் அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக உழவு செய்தபோது அந்த இடத்தைச்சுற்றி சுமார் முக்காலடி ஆழத்தில் மன்னர் காலத்து செங்கற்கள் தென்பட்டது.

    இதுபற்றி ராஜேந்திரன் தனது தந்தை சின்னத்தம்பியிடம் கூறினார். அதற்கு சின்னத்தம்பி நான் சிறுபிள்ளையாக இருக்கும் போதே அதே வயலில் நந்தி வடிவில் சிலை ஒன்று இருந்தது என்று கூறி ராஜேந்திரனை வயலுக்கு அழைத்து சென்றார்.
    அப்போது அவர் அந்த இடத்தை சுற்றி ஒன்றரை அடி ஆழத்தில் மண்ணை வெட்டிய போது கருங்கல்லாலான நந்தி வடிவ சிலை தெரிந்தது. இதையடுத்து ராஜேந்திரன் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். 

    உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இந்த நந்தி இருந்த இடத்திற்கு எதிரே வெள்ளை ஏரி கன்னி என்ற குளம் உள்ளதோடு அந்தக்கால செங்கற்கள், நந்தி என உள்ளதால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மிகப்பெரிய கோவில் இருந்திருக்கலாம். நாளடைவில் இந்த இடம் புதையுண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கருங்குளம் பகுதியில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு பெருமாள் சிலையும், முடுக்குக்காடு பகுதியில் அம்மன் சிலை, விநாயகர் சிலை மற்றும் முருகன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

    அது போன்று பழஞ்சூர் கிராமத்தில் சிவன் கோவில் திருப்பணி வேலைக்காக போர்வெல் அமைப்பதற்கு மண்வெட்டிய போது அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக சிலைகள் கண்டெடுக்கப்படுவதால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்தால் மேலும் பல விலை மதிப்புள்ள பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்து கோவில்களை நிர்வகிக்க எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றோர், ஆன்றோர் தனித்து இயங்கும் வாரியத்தினை அமைக்க வேண்டும் என எச்.ராஜா கூறினார்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே எருக்கூரில் உள்ள தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் 128-வது ஜெயந்தி விழா அவர் வாழ்ந்த இல்லத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு, நீலகண்ட பிரம்மச்சாரியின் திருஉருவபடத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் போன்று நீலகண்ட பிரம்மசாரி ஆகியோர் சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து பாடுப்பட்டவர்கள். இது போன்று சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரலாறுகளை பாடத்திட்டங்களில் தமிழக அரசு சேர்க்க வேண்டும்.

    ஒக்கி புயலால் கடலில் மாயமான 122 மீனவர்கள் மத்திய பேரீடர் பாதுகாப்பு குழுவினர், கடலோர காவல் படையின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மீனவர்களும் மீட்கும் முயற்சியில் மத்திய அரசின் கடலோர காவல்படை தீவிர மாக ஈடுபட்டுள்ளது.

    கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் ரூ.900 கோடி மதிப்பிலான சுவாமி விக்கிரகங்களுக்கு பதிலாக போலி விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். விலையுயர்ந்த சுவாமி விக்கிரகங்களை பாதுகாக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. இதுபோன்று சீர்காழி வட்டம் திருக்குறவலூர் கோவிலில் திருடப்பட்ட சுவாமி சிலைகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


    இந்து கோவில்களை நிர்வகிக்க எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றோர், ஆன்றோர் தனித்து இயங்கும் வாரியத்தினை அமைக்க வேண்டும்.

    திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில் தான் தமிழகத்தின் எழுச்சியுள்ளது. 50 வருட திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆர்.கே நகர் தேர்தலில் தி.மு.க , அ.தி.மு.க.விற்கு மக்கள் ஓட்டு போடாமல் பா.ஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மயிலாடுதுறையில் பஸ்சில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததில் வாலிபர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
    மயிலாடுதுறை:

    சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கணபதி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது36). சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    மயிலாடுதுறை அருகே குடவாசல் பகுதி திருமங்கலத்தில் வசித்து வந்த இவரது சித்தி நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள மகேந்திரன் தனது மனைவி டெல்சியுடன்(30) நேற்று மயிலாடுதுறை வந்தார்.

    பின்னர் நேற்று இரவு சென்னை திரும்ப மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு பஸ்சிற்காக காத்திருந்தார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் ஒன்று பஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. இதில் இடம் பிடிப்பதற்காக மகேந்திரன் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறமுயன்றபோது தவறி கீழே விழுந்தார்.

    இதில் பஸ்சின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் படுகாயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் அக்கம்பக்த்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே மழைநீர் வடியாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளும் படகில் சென்று வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்டது வண்டல் குண்டுரான்வெளி கிராமங்கள். இந்த 2 கிராமத்திலும் சுமார் 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி அடப்பாறு, நல்லாறு, வெண்ணாறுஆகிய 3 ஆறுகளின் வடிகால் பகுதி ஆகும். பெரும்பாலும் மீன்பிடி தொழிலையும், விவசாயத்தையும் நம்பியே இப்பகுதிமக்கள் வாழ்கின்றனர்.

    கடந்த மாதம் 10 நாட்கள் பெய்த மழையாலும், ஆற்றுநீர் சூழ்ந்துள்ளதாலும் இந்த கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அந்த 10 நாட்களாக இப்பகுதி மக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் படகில் தான் வண்டலிருந்து தலைஞாயிறு சென்று வந்தனர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு தண்ணீர் வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த நாட்களில் 22 செ.மீ மழை பெய்ததால் மீண்டும் மழைநீர் சூழ்ந்து கிராமம் துண்டிக்கப்பட்டது. மழைநீரால் சாலையின் மேல் 2 அடி முதல் 3 அடி வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் சாலையில் நடந்து வர முடியாத சூழ்நிலையில் மீண்டும் வண்டலிலிருந்து தலைஞாயிறுக்கு பொதுமக்களும், மாணவ- மாணவிகளும் படகு பயணத்தை துவங்கியுள்ளனர்.

    ‘ஒக்கி’ புயலில் சிக்கிய நாகை மீனவர்கள் 27 பேர் மட்டும் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால், அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள் ஆகாஷ் (வயது20), வினிதன் (21), பிரகாஷ் (23), விஜய் (19), சங்கீதவேல் (22), மதன் (23), மணிகண்டன் (25), விஜயகுமார் (29), குமார் (43), வெற்றிசெல்வம் (28), ஜெயக்குமார் (25) உள்பட 35-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றனர்.

    இந்தநிலையில் ‘‘ஒக்கி’’ புயலால் ஒரு சில மீனவர்கள் கேரளாவில் இருந்து நாகைக்கு திரும்பி வந்து விட்டனர். ஆனால் 27 மீனவர்கள் மட்டும் இதுவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 27 மீனவர்களின் நிலை குறித்து தெரியாததால், அவர்களது உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து நம்பியார்நகர் மீனவ பஞ்சாயத்தார்கள், நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் லீனாசெல்வி மற்றும் உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் லீனாசெல்வி, கேரளாவிற்கு சென்ற மீனவர்கள் குறித்து கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    ×