என் மலர்
நாகப்பட்டினம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா சார்பில் நாகை மாவட்டம் சீர்காழியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஈழவேந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவனை கண்டித்து பேசினர்.
அப்போது அங்கு விடுதலை சிறுத்தைகள் ஆத்திரம் அடைந்து ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜனதாவினர் மீது கல்வீசினர். இதனால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த அன்புசெல்வன், கனகசபை, மாசிலாமேரி உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் தாக்குதலை கண்டித்து சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் பா.ஜனதாவினரிடம் மறியலை கைவிட கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கல்வீசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பிறகே பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.
இதைதொடர்ந்து பா.ஜனதாவினர் மீது கல்வீசிய சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், வக்கீல்கள் குணவேந்தன், ராஜேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், கனிவண்ணன், தொகுதி செயலாளர் தாமு இனியவன் உள்பட 21 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பா.ஜனதா- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதலால் சீர்காழி பகுதியில் நேற்று இரவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.
இந்து கோவிலை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று காலை 10.30 மணியளவில் பா.ஜனதா சார்பில் தமிழிசை மூவர் மணி மண்டபம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு நாகை மாவட்ட பா.ஜனதா எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் இளவேந்தன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு 70-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனை கண்டித்து பா.ஜனதாவினர் கோஷமிட்டதால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ஜனதாவினர் மீது கல்வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கல்வீச்சில் பா.ஜனதாவை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர். இதனால் பா.ஜனதா கட்சியினரும் பதிலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது கல்வீசினர்.
பா.ஜனதாவினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் மோதி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டது.
இதையடுத்து அங்கு போலீஸ் டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேல், செல்வம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். அப்போது பா.ஜனதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தினர். இதனால் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசி தாக்கிய சம்பவத்தை கண்டித்து பா.ஜனதாவினர் சீர்காழி பஸ் நிலையம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கல்வீச்சு சம்பவத்தில் காயம் அடைந்த பா.ஜனதா கட்சியை சேர்ந்த 6 பேர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜனதாவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதி கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள நீடுர் வந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் நாகரீகத்தை கடை பிடிக்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் இணக்கமாக பழகி வருகிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தகட்சிக்கும் ஆதரவு இல்லை. இரட்டைஇலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றாலும் அதற்கு நாங்கள் அடிமையில்லை. எங்கள் கட்சிக்கு என்று கொள்கை, கோட்பாடுகள் உள்ளது.
ஜெயலலிதா ஆட்சிக்கும் தற்பொழுது நடைபெறும் ஆட்சிக்கும் அதிக வித்தியாசம் உள்ளது, நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களுக்காக தொண்டாற்றி, பல சேவைகள் செய்தபின்புதான் மக்கள் அவர்களை அங்கீகரிப்பார்கள்.
மத்திய அரசு தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்குவதற்காக வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை பயன் படுத்துகிறது. பா.ஜ.க.விற்கு குஜராத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட உள்ளனர், இது இந்தியாமுழுவதும் எதிரொலிக்கும், முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு திசைதிருப்புகிறது, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து என்பது உடனடியாக கிடைப்பதில்லை.
திருமாவளவன் பேசாத ஒன்றை பேசியதாக சித்தரித்து அவரது தலைக்கு விலைவைத்து பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. சங்பரிவார் அமைப்பின் தீவிரவாதம் எவ்வாறு தலை விரித்தாடுகிறது என்பதற்கு இதுவே உதாரணமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஷாஜகனர் மற்றும் கட்சியினர் உடனிருந்தார்.
ஓக்கி புயலில் சிக்கி நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதுவரை அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதைதொடர்ந்து நாகை நம்பியார் நகரை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் ஊர்வலமாக நாகை கலெக்டர் அலுவலகம் நோக்கி இன்று காலை வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பெண்கள், புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. மத்திய- மாநில அரசுகள் இதுவரை மீட்பு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாயமான மீனவர்களை கண்டு பிடிக்கும் வரை நாங்கள் யாரும் வீட்டுக்கு செல்ல மாட்டோம்’ என்று ஆவேசத்துடன் கூறினர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள், போலீசார் ஆகியோர் போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மீனவ பெண்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மீனவபெண்களின் முற்றுகை போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வாய்மேடு, மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் முருகேசன் (வயது 35). தே.மு.தி.க. பிரமுகர். இவர் கடந்த 23-ந்தேதி மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி முருகேசனின் தம்பி ராமச்சந்திரன் வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகட்டூரை சேர்ந்த மோகன், குணசேகரன், பலராமன், வாய்மேடு பகுதியை சேர்ந்த பெயிண்டர் குணசேகரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய 2 பேரை தேடிவந்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் தலைமறைவாக இருந்த 2 பேர் திருச்சியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சத்திய நாராயணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் புஷ்வனம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணன் என்ற குணசேகரன் (வயது 25), திருச்சியை சேர்ந்த ஜம்புநாதன் மகன் பரணிதரன் (30) என்பதும், அவர்கள் இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்கள் எதற்காக முருகேசனை கொலை செய்தனர்.? அவர்களை கொலை செய்ய தூண்டியவர்கள் யார்? எனபது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி பகுதியில் மழையினால் சேதமடைந்த நெற் பயிர்களை பார்வையிட்ட தமிழக காவிரி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த பகுதியில் விவசாயிகள் ஒன்றிணையாவிட்டால் விவசாயம் வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும். இந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களை அபகரிக்க பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து விட்டார்கள். இதற்கு ஆதரவாக பாசன கட்டுமானங்களை கொண்டு வர தமிழக அரசு தயங்குகிறது. காவிரி பகுதிகளை மத்திய அரசு வேளாண்மண்டலமாக அறிவிக்க கோரினால், பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துதுள்ளனர். அதனை தடுத்து நிறுத்தும் வரை விவசாயிகளை திரட்டி போராடுவோம்.
கடல் முகத்துவாரங்களில் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இறால் பண்ணைகள் அகற்றபட வேண்டும். மத்திய அரசு இறால் பண்ணைகள் அதிபர்களுக்கு ஆதரவாக சட்டதிருத்தங்கள் கொண்டு வந்ததன் விளைவாக இறால் பண்ணைகளை அடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார். அப்படி சட்டதிட்டங்கள் கொண்டு விளைநிலங்களை அபகரிக்க எண்ணினால் அந்த சட்டத்திற்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.
அண்டை மாநில அரசியல் லாப நோக்கோடு தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆர்.கே நகரில் போட்டியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவர்களுக்கு எதிரான பிரசாரத்தை நாங்கள் அடுத்தவாரம் ஆர்.கே நகரில் தொடங்க உள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழகத்தில் களம் இறங்குவோம். தமிழக அரசு மின்சார வாரியத்தில் தட்கல் முறையில் ரு.2.50லட்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக அறிவித்துள்ளது. இதனால் உண்மையான விவசாயிகள் பயன்பெற போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விவசாய சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாசம், விஸ்வ நாதன், பாஸ்கர், சீனுவாசன், பன்னீர்செல்வம், சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இலங்கை யாழ்பாணம் சாப்னா பகுதியை சேர்ந்த கடாத்கஜன் (வயது 27). முருகன் (32), விஜேந்திரன் (40). ஆகிய 3 மீனவர்களும் பருத்திதுறை பகுதியில் நேற்று மதியம் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்தது. இதில் கடலில் விழுந்த 3 மீனவர்களும் கரையை நோக்கி நீந்தி வந்தனர். அவர்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நீந்தி இன்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் என்ற இடத்தில் கரையேறினர்.
மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர்களை அப்பகுதி மீனவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். உயிர் தப்பிய இந்த 3 மீனவர்களும் இலங்கையில் வசிக்கும் தமிழ் மீனவர்கள் ஆவார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் இந்து கோவில் குறித்து சொன்ன கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலித் இஸ்லாமிய எழுச்சி நாள் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்தியாவில் உள்ள இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், காஞ்சி காமாட்சிம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களை இடித்து தள்ளிவிட்டு புத்த விகாரைகள் கட்ட வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது.

புத்தருக்கு கோவில் இருந்ததையெல்லாம் இடித்து விட்டுத்தான் சிவன், விஷ்னு, கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, எனவே இந்து கோவில்களை தரைமட்டமாக்கிவிட்டு புத்தருக்கு கோவில் கட்ட வேண்டும் என உண்மைக்கு புறம்பான தவறான வரலாற்றினை பதிவு செய்யும் நோக்கில் பேசியுள்ளார். பொது அமைதியை கெடுத்து, மத கலவரத்தை தூண்டிவிட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடும் வகையில் பேசியுள்ள திருமாவளவன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீஸ் நிலையத்தில் இந்து மகாசபை மண்டல அமைப்பாளர் லட்சுமி நரசிம்மன் என்பவரும் புகார் மனு கொடுத்துள்ளார்.






