என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் அரியவகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி வகை ஆமைகள் கடற்கரை மணல் பகுதிக்கு வந்து குழிதோண்டி முட்டையிட்டு பின்பு அதை மூடிவிட்டு கடலுக்கு சென்றுவிடும். அந்த முட்டைகள் இயற்கையாக குஞ்சு பொரித்து தானாகவே கடலுக்குள் சென்றுவிடும்.
இந்த ஆமை முட்டைகளை சிலர் திருடி உணவிற்காக எடுத்துச் சென்று விடுவார்கள். இதை தடுக்க வனத்துறையினர் ஆங்காங்கே ஆட்களை நியமித்து ஆமை முட்டைகளை சேகரித்து ஆறுகாட்டுத் துறை, கோடியக்கரை ஆமை முட்டைகள் பொரிப்பகம் அமைத்து குஞ்சுகளை பொரிக்க வைத்து அதை கடலில் விடுவது வழக்கம்.
பருவ கால மாற்றம், கடல் நீரோட்டம், படகு மற்றும் கப்பல்களில் அடிபட்டு இந்த அரியவகை ஆமைகள் அவ்வப்போது வேதாரண்யம் கடற்பகுதியில் இறந்து கரை ஒதுங்குவது வழக்கம்.
தற்போது ஆலிவர் ரெட்லி ஆமை ஒன்று வேதாரண்யம் கடல் பகுதியில் இறந்து கரை ஓதுங்கியது. இதை அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் வந்து இறந்த ஆமையை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
இந்த ஆமை படகில் அடிபட்டு இறந்ததா? அல்லது வேறெதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சி தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. மயிலாடுதுறை அருகே கிளியனூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு செயல்பாட்டில் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வது மாநில உரிமையை பறிக்கும் செயல் ஆகும். பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் கவர்னர் ஆய்வு செய்வதில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியாததால் தேர்தல் ஆணையம் தோற்றுப் போய் விட்டது. நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும். எத்தனை சட்டம் இயற்றினாலும் பணப்பட்டுவாடாவை ஒழிக்கவே முடியாது.
வாக்களிக்க பணம் வாங்க மாட்டேன் என்று பொது மக்கள் சபதம் செய்ய வேண்டும். அதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்யும் வரை பணப்பட்டுவாடாவை ஒழிக்க முடியாது.
தமிழகத்தில் பா.ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதல் என்பது வடஇந்தியாவில் பா.ஜனதா தோற்றுவித்த சாதி மோதலை தமிழகத்திலும் நடத்தும் செயலாகும். சாதி மோதலை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் சீர்காழியில் கடந்த 11-ந்தேதி நடந்த பா.ஜனதா ஆர்ப்பாட்த்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசி தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதனை கண்டித்து நேற்று நாகையில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்து எச்.ராஜா உள்பட கட்சியினரை கைது செய்தனர்.
இந்நிலையில் நாகை அருகே பால்பண்ணைச்சேரி பகுதியை சேர்ந்தவர் பா.ஜனதா பிரமுகர் செல்வம்(வயது40). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக வீட்டிலிருந்து நாகூருக்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் தாங்கள் வைத்திருந்த இரும்பு குழாயால் செல்வத்தை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து நாகை அரசு மருத்துவமனை மற்றும் புதிய, பழைய பஸ் நிலையங்கள் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பதட்டம் நிலவுகிறது.

வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கள்ளிமேடு ஊராட்சியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த ஊராட்சியின் வடக்கு பகுதியான பழங்கள்ளி மேட்டில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் மூன்று நாட்களுக்கு ஓரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. நேற்று குடிநீர் வராததால் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு ஒன்றிய ஆணையர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜலெட்சுமி கூறியதாவது:- நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. அதனை பிடித்து வைத்துவிட்டு நாங்கள் வேலைக்கு சென்று வந்து பார்க்கும்போது டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு வருபவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் நாங்கள் தண்ணீர் பிடிக்க சென்றுவர அரை நாள் ஆகிறது. இதனால் நாங்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் தண்ணீர் கிடைக்காமலும் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே தினந்தோறும் எங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மெயின் ரோட்டில் வசிப்பவர் குலோத்துங்கன் (வயது 58). பெயிண்டர்.
இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து கடைத் தெருவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் சாலையை கடந்த போது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குலாத்துங்கன் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் பலியான குலோத்துங்கனுக்கு சகாயமேரி என்ற மனைவியும், ஸ்ரீதர் இன்பன்ட் என்ற மகனும் உள்ளனர். இதுகுறித்து குத்தாலம் போலீசில் சகாயமேரி புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து பேசிய கருத்தை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் கடந்த 11-ந் தேதி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென பா.ஜனதாவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர்.
இதைதொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜனதாவினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம் (வயது 50) பேசினார். அப்போது அவர் மதநல்லிணத்தை சீர்குலைக்கும் வகையிலும் மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மன் சீர்காழி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ஜனதா பிரமுகர் அகோரத்தை நள்ளிரவில் திருவெண்காட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பா.ஜனதா - விடுதலை சிறுத்தைகள் மோதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பாண்டூர் வடக்கு வெளியை சேர்ந்த சங்கர் மகன் சுந்தர்(வயது20). இவர் தனியார் தொழிற் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மயிலாடுதுறை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று தனது நண்பர்கள் வருகைக்காக காத்திருந்தார்.
அப்போது மயிலாடுதுறை கலைஞர் நகரை சேர்ந்த பிரபா தம்பி, சேந்தங்குடியை சேர்ந்த கவியரசன், கபிலன் உள்பட 14 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சுந்தரிடம் ஜாதி தொடர்பாக பேசி அவரை தாக்கியதுடன் அவரை முட்டி போட வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த பா.ம.க. பிரமுகர் வி.பி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சென்று மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். அப்போது அவர்கள் மாணவரை தாக்கிய கும்பலை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுபற்றி சப்-இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து 14 பேரையும் தேடிவருகிறார். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தழூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகள் ஆர்த்தி (வயது19) அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இவரது தோழியான வழூவூர் பகுதியை சேர்ந்த ராதிகா (20). இவர்கள் 2 பேரும் கடந்த 11-ந் தேதி கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்றனர். அதன்பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினர். அவர்கள் கிடைக்காததால் இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர் அதன் பேரில் போலீசார் மாயமான ஆர்த்தி மற்றும் ராதிகாவை தேடி வருகின்றனர்.
இதே போல் மணல்மேடு அருகே மேல மருதாந்த நல்லூர் பகுதியை சேர்ந்த செல்லையா என்பவரது மகள் விஜயலெட்சுமி (18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் சம்பவத்தன்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் மணல்மேடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அடுத்துள்ள பட்டவர்த்தியில் நடிப்பிசை புலவர் கே.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால். திறக்கப்பட்டு நல்ல லாபகரமாக செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலை படிப்படியாக அதன் அரவை குறைக்கப்பட்டது.
நிர்வாக சீர்கேடுகளால் 2016-17ம் ஆண்டுக்காண அரவை மில் ஆரம்பிக்காமல் உள்ளனர். இதில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை படிப்படியாக இடமாற்றம் செய்தனர். எஞ்சிய 210 பேரை ஒரே நாளில் இடமாற்றம் வழங்கினர். இதனால் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதில் தமிழக அரசின் கரும்புத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அதில் தாங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை வாபஸ் வாங்க வேண்டும்.
கடந்த 11 மாதமாக வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 8கோடியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச, ஐ.என்.டி.யூ.சி. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டியூசி, பணியாளர்கள் பேரவையினர் தே.மு.தி.க. பா.தொ.சங்கம் டாக்டர். அம்பேத்கர் தொ.சங்கம்,பொது தொழிலாளர் சங்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் கரும்பு உதவியாளர் சங்கம்,தொழிலாளர் கூட்டமைப்பு ஆகிய சங்க நிர்வாகிகள் தலைமையிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாநில பொதுசெயலாளர் கே.முருகன் மற்றும் அனைத்து கட்சியினர் உண்ணாவிரததில் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் கிராமம் உள்ளது. இங்குள்ள இச்சிலடி தெருவில் சிலர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து குறைவான விலையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த தெருவுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில்வரும் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இரவு- பகல் என 24 மணி நேரமும் ஆட்கள் தெருவில் நடமாட்டம் இருந்து வந்தால் அப்பகுதி பெண்கள் நிம்மதியாக வெளியே நடமாட முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் தெருவில் மதுவிற்பனையை கண்டித்து நூதன முறையில் கிராம மக்கள் போராட்டம நடத்தினர்.
இச்சிலடி தெரு முழுவதும் காலி பாட்டில்களை தோரணமாக கட்டி தொங்கவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்தனர். தெருவில் கட்டப்பட்ட மதுபாட்டில் தோரணங்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் கிராம மக்களிடம் , மதுவிற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று திரண்டு நின்ற கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
நூதன முறையில் மதுபாட்டில்களை தோரணமாக தொங்கவிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்வேளூர்:
நம்பியார் நகரை சேர்ந்த வெற்றிசெல்வன் (வயது28), மாதவன் (22), இனியன் (21), கவிமணி (24), சங்கீதவேல் (22), வினிதன் (21), கவிந்தன் (23), பிரபாகரன் (18), விஜய் (19), தர்மசீலன் (22), மதன் (23), ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த விஜயசந்துரு (29) ஆகிய 12 பேரும் கன்னியாகுமரியில் தங்கி மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கிய 12 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
இதனால் ஒக்கி புயலில் சிக்கி மாயமான 12 மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த மீனவர் விஜய சந்துரு நேற்று குஜராத் மாநில கடற்கரை பகுதியில் கரை சேர்ந்தார். இதையடுத்து இன்னும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல புயலில் சிக்கிய நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (53), கலைமணி (30), தமிழ்பாலன் (40), ஏழுமலை (33), வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த சங்கர் (40) ஆகிய 5 பேரும் மும்பையில் படகுடன் கரை சேர்ந்தனர். பின்னர் அங்குள்ள அதிகாரிகள் 5 பேரையும் மீட்டு மும்பை கடற்படை தளத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த 5 மீனவர்களும் வருகிற 15-ந் தேதி சொந்த கிராமங்களுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






