என் மலர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை:
சென்னை வடபழனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சந்திரமோகன் (வயது 20). என்ஜினீயரிங் மாணவர். கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினருடன் விடுமுறையையொட்டி வேளாங்கண்ணிக்கு வந்தார்.
இந்த நிலையில் சந்திரமோகன் நேற்று மயிலாடு துறை சீனிவாசபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் சந்திரமோகன், தனது நண்பர் சத்திய நாராயணனுடன் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றார்.
அப்போது முகத்துவாரம் அருகே சென்றபோது சந்திரமோகனின் செருப்பு கடல் அலை இழுத்து சென்றது. இதனால் செருப்பை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சந்திரமோகனை கடல் அலை இழுத்து சென்றது.
இதில் அவர் அலறிய சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சந்திரமோகனை கடலில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தரங்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் சரியாக மீன் கிடைக்காததால் கேரளாவில் தங்கி மீன் பிடித்தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கி இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் பலர் மாயமாகினர்.
கடல் சீற்றம் தணிந்துள்ள நிலையில் தீவுகளில் கரை ஒதுங்கிய சிலர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் மகன் விமல்ராஜ்(28),மதியழகன் மகன் ராஜேஷ்(27), ஆகிய 2 மீனவர்களும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களும் கடந்த அக்டோபர் 23-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து சுதர்சன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்றனர். 30 நாட்களில் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் 60 நாட்கள் ஆகியும் இதுவரை கரை திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 15 நாட்களாக கேரளாவில் தங்கி தேடி வந்தனர் ஆனால் இவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒக்கி புயலில் சிக்கி படகுடன் மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என படகின் உரிமையாளர் கொடுத்த தகவலால் உறவினர்கள், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையடுத்து திருமுல்லை வாசல் கிராமத்தை சேர்ந்த 2 மீனவர்களின் குடும்பத்தினர்கள் மீனவர்களின் படத்தினை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் மற்றும் மீனவ கிராமத்தினர் மக்கள் அமைதி ஊர்வலம் சென்று கடலில் பால் தெளித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மீனவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரிகளை பெற்றுக்கொண்ட கேரள மருத்துவமனை நிர்வாகம் பலியான மீனவர்களின் டி.என்.ஏ பரிசோதனைக்கு பின்னர் ஏதேனும் தகவல் கிடைத்தால் கூறுவதாக உறுதியளித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இது கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணியதலமாகவும், வேளாங்கண்ணி விளங்குகிறது.
கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். மேலும், வேளாங்கண்ணி பேராலயம் மோர்க்கார சிறுவனுக்கு அன்னை மரியாள் காட்சி தந்த தலமாகவும் விளங்குகிறது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசுகிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். இதையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடந்தது.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு கிராமம் இளந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மீனாட்சி (வயது 16). இவர் திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீனாட்சி பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வாலிபர் மீனாட்சியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டி வந்ததாத தெரிகிறது.
இதனால் மாணவி மீனாட்சி மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து மீனாட்சியின் தந்தை ரமேஷ் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் திருமணம் செய்ய மிரட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்ய சம்பவம் சீர்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வீடியோ காட்சியை தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் நேற்று வெளியிட்டார்.
ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த வீடியோ வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர அவை தலைவர் அலி தலைமையில் அ.தி.மு.க.வினர் தினகரன், வெற்றிவேல் ஆகியோர் பட பேனருக்கு செருப்பு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தினகரன், வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரபல உப்பு வணிகர் எஸ்.கே.சுப்பையா பிள்ளை-சின்னம்மாள் ஆச்சி ஆகியோரின் ஒரே மகள் வேதாம்பாள் ஆச்சி. இவருக்கு நேற்றுடன் (20-ந் தேதி) அன்று 100 வயது பூர்த்தியானது. இவரது உறவினர்கள் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
வேதாம்பாள் ஆச்சி சிறு வயதிலிருந்தே தந்தை சுப்பையாபிள்ளையுடன் இணைந்து உப்புத்தொழில், விவசாயம், புகையிலை சாகுபடி போன்றவற்றை நேரடியாக கவனிப்பது வழக்கம். இவர் சைவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தற்போது தனது 100-வது வயதிலும் சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொள்கிறார். இவர் ஜாங்கிரி, ஓமப்பொடி ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டு வருகிறார். காலை தயிருடன் 2 இட்லியும், மதியம் கீரை காய்கறிகளுடன் சாதமும், இரவு இட்லி, சாம்பாருடன் சாப்பிட்டு வருகிறார். இடையில் காப்பி மட்டும் அருந்தி வருகிறார். இன்றும் பத்திரிகை, தபால்கள் ஆகியவற்றை படித்து வருகிறார்.
இவர் தகப்பனார் பெயரில் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தானமாக அளித்தும், கட்டிடங்களும் கட்டி கொடுத்துள்ளார். வேதாரண்யம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில் அதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகையை தானே முன்வந்து செலுத்தியும், பள்ளி கட்டிடமும் கட்டி கொடுத்துள்ளார்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கொடி மரம் உள்ளிட்ட பல்வேறு கோவில் பணிகளை செய்து கொடுத்துள்ளார்.
மேலும் வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி புரிந்து வருகிறார். இது மட்டு மல்லாது வேதாரண்யம் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவிற்காக கட்டிடம் கட்டு வதற்கு உதவி செய்துள்ளார். உப்பு சத்தியாகிரகம் நினைவாக நினைவு தூண் அமைக்க, அந்த இடத்தை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி உள்ளார். வேதாரண்யம் நகர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி உதவி செய்துள்ளார். இவரை உறவினர்கள் அத்தை என்றும், பொதுமக்கள் ஆச்சி என்றும் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (57). விவசாயி. இவர் கடந்த மாதம் 29-ந்தேதி அருகில் உள்ள மரத்தில் ஏறி கால்நடைகளுக்கு தழை பறித்தபோது தவறி விழுந்து விட்டார். இவரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பால சுப்பிரமணியன் இறந்தார்.
இது குறித்து அவரது மகன் முனியப்பன் (24) கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் நடராஜன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மதுரா நகர் குப்பன் குளம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கன்(வயது52). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரியை டிரைவர் பின் பக்கமாக நகர்த்தியுள்ளார்.
அப்பகுதி இருட்டாக இருந்ததால் லாரியின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த ரெங்கன் இதனை கவனிக்கவில்லை. இதேபோல் டிரைவரும் சாலையோரம் நடந்து வந்த ரெங்கனை கவனிக்காமல் இருந்துள்ளார். இதில் பின்பக்கமாக வந்த லாரி மோதி அடியில் சிக்கிய ரெங்கன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக்கண்ட டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த லாரி அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே மூன்று ஐம்பொன் சிலைகளை 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள நல்லத்துக்குடியில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. நாளடைவில் இக்கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இடிந்து விழுந்துள்ளது.
இதனால் இக்கோவிலை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் சேர்ந்து கோவிலில் இருந்த 2 வரதராஜ பெருமாள் சிலைகள், ஒரு மகாவிஷ்ணு சிலை ஆகிய 3 ஐம்பொன் சிலைகளை அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவிலில் வைத்து பூட்டி விட்டனர். இந்த சம்பவம் கடந்த 1957-ம் ஆண்டில் நடந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த கோவிலில் அதிக சிலைகள் இருப்பதாகவும் அவைகளை மீட்க வேண்டி அறநிலையத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதேபோல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுவுக்கும் புகார் வந்தது. இதனால் அவர் நாகை மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை அறநிலையத் துறை அதிகாரிகள் நல்லத்துக்குடி சென்று ஆய்வு நடத்தினர். செல்லியம்மன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் அங்கிருந்த 3 ஐம்பொன் சிலைகளையும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இதை தொடர்ந்து 3 ஐம்பொன் சிலைகளையும் திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தற்போது மீன்பிடி சீசன் காலமாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மீனவர்கள் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார கடலோர கிராமங்களுக்கு வந்து அங்கு தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசன் காலங்களில் ஏராளமான மீன்கள் சிக்கும். அதன் மூலம் மீனவர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு சீசன் காலத்தில் கனமழை, ஒக்கி புயல், கடல் சீற்றம் காரணமாக பல நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையும் மீறி மீன்பிடிக்க சென்றால் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கின்றன
மேலும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது மட்டுமின்றி ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. மேலும் சூறைக்காற்று வீசிவருகிறது.
வேதாரண்யம், ஆறுகாட்டுத் துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்றும் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
பருவ நிலை மாற்றம் ஏற்பட்டால் தான் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
கீழ்வேளூர்:
நாகை வெளிப்பாளையம் பெருமாள் கோவில் மேலவீதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன். இவரது மனைவி பொன்மலர் (வயது30). இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி செல்ல பஸ் ஏற நாகை புது பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். ஜெகன் நாதன் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் தனியாக நின்றிருந்த பொன்மலரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொன்மலர் இதுபற்றி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காடம்பாடி சுனாமி குடியிருப்பு புதிய நம்பியார் நகரை சேர்ந்த காத்தலிங்கம் (28), கோகுலன்(18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் மைனர் என்பதால் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற 2 பேரையும் நாகை கிளை சிறையிலும் அடைத்தனர்.






