என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மதுக்கடையை மூடி வைக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மூடி வைக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    திருவள்ளுவர் தினம் (15-ந்தேதி), குடியரசு தினம் (26-ந்தேதி), வள்ளலார் நினைவு தினம்(31-ந்தேதி) ஆகிய நாட்களில் தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகள் படியும், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதியின்கீழ் தஞ்சை, நாகை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி மதுபானம் விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews

    அடகு கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 48). அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய தம்பி சீனிவாசன். அண்ணன் தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று சீனிவாசன் தனது தாய்- மனைவியுடன் மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த 35 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை பாபு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து அவர் கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். கொள்ளையடித்து சென்ற கும்பலை பிடிக்க சம்பவ இடத்துக்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    பாபு அடகு கடை வைத்திருப்பதை நோட்ட மிட்ட கும்பல் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன நகைகள் அவருடையதா? இல்லை அடகு வைப்பதற்காக வந்த நகைகளா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடகு கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    பயிர் காப்பீட்டு தொகை வருகிற 12-ந் தேதிக்குள் வழங்காவிட்டால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்தரிபுலம், மருதூர் தெற்கு - வடக்கு, ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், மணக்குடி, துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அந்தந்த இடங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் முன்பு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதில் விவசாயிகள் துண்டு ஏந்தி பிச்சை எடுத்தும் , மண் சட்டி ஏந்தியும், அரை நிர்வாண போராட்டமும் நடத்தினர். ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    கத்தரிபுலத்தில் விவசாயிகளின் போராட்டம் 24-வது நாளாகவும், ஆயக்காரன் புலத்தில் 15-வது நாளாகவும், மருதூர் தெற்கில் 12-வது நாளாகவும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே வேதாரண்யம் தாசில்தார் விஜயகுமார், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதனால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற 12-ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். #TamilNews
    நாகூரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகூர் புதுதெருவைச் சேர்ந்தவர் அபுசாலி (வயது 60). இவர் நாகூர் தர்காவில் பக்தர்களுக்கு மந்திரித்து தாயத்து கட்டுவார். அபுசாலி இன்று காலை நாகூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கத்தரிபுலம், மருதூர், ஆயக்காரன்புலம், தகட்டூர், பஞ்சநதிகுளம் ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 2016-17க்கான பயிர் காப்பீட்டுத் தொகை 100 சதவீதம் கேட்டு விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காத்திருப்பு போராட்டம் கத்தரிப்புலத்தில் 21-வது நாளாகவும், தகட்டூரில் 13-வது நாளாகவும் ஆயக்காரன்புலத்தில் 12-வது நாளாகவும் மருதூர் தெற்கில் 10-வது நாளாகவும் மருதூர் வடக்கில் 6-வது நாளாகவும் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

    மருதூரில் தட்டு எந்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    இந்த நிலையில் விவசாயிகள் பொங்கலுக்குள் பயிர் காப்பீடு வழங்காவிட்டால் பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
    கள்ளத்தனமாக வீட்டில் 2544 மதுபாட்டில்களை பதுக்கி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் நாகை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சஞ்தேஷ்முக் உத்தர வின் பேரில் மது விலக்கு தனிப்படை அமைக்கப்பட்டு நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையொட்டி இன்று காலை தனிப்படை போலீசார் சீர்காழியில் ரோந்து பணியில் இடுபட்டனர். அப்போது திருக்கோலக்கா என்ற தெருவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சென்று சோதனையிட்டனர். அங்கு 53 அட்டை பெட்டிகளில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 2544 எண்ணிக்கையில் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

    இந்த மதுபாட்டில்களை அப்பகுதியில் கள்ளத்தனமாக விற்பதற்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த வீட்டில் இருந்த தோப்புத்துத் தெருவை சேர்ந்த தமிழரசி(வயது45) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் அந்த வீட்டிலிருந்து தப்பியோடிய ரவி என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் மது பாட்டில்களையும், கைது செய்த தமிழரசியையும் சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டி கொன்ற நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    கீழ்வேளூர்:

    நாகை பாரதி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு பக்கிரி மகன் மதியழகன் (வயது24). நாகை காடம்பாடி சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (26), தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த விஜய் என்ற அப்துல்காதர் (23), அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (26), பாப்பாகோவில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சிவா (24), ஜெயராமன். இவர்கள் 6 பேரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் சரண்ராஜ், விஜய் என்ற அப்துல்காதர், மாரியப்பன், சிவா, ஜெயராமன் ஆகிய 5 பேரும் கடந்த மாதம் 31-ந்தேதி இரவு நாகை பாப்பான் சுடுகாடு பகுதியில் மது அருந்தினர்.

    அப்போது அங்கு வந்த மதியழகன், என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் மது அருந்துகிறீர்களா? என்று கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ஜெயராமனை குத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து அவர்கள் வைத்திருந்த அரிவாளால் மதியழகனை வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் மதியழகனின் தலையை தனியாக வெட்டி எடுத்து உடலையும், தலையையும் அருகில் சாக்கடை ஓரத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதற்கிடையே மதியழகனின் தாய் மலர், மகன் காணாமல் போனதால் இதுபற்றி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே மதியழகனை கொலை செய்தது குறித்து 5 பேரும் மற்ற நண்பர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் மதியழகன் கொலை பற்றிய தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சரண்ராஜ், விஜய் என்ற அப்துல்காதர், மாரியப்பன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மதியழகனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து மதியழகனை புதைத்த இடத்திற்கு 4 பேரையும் போலீசார் அழைத்து சென்று உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதியழகனின் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும், தலைமறைவாக உள்ள ஜெயராமனை வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews

    வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கி நின்ற பைபர் படகு இலங்கை சேர்ந்ததாகவும் போதை பொருள் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    இலங்கையில் இருந்து மர்ம கும்பல் போதை பொருட்களை நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனால் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இருப்பினும் கடத்தல் கும்பல் தீவிர கண்காணிப்பையும் மீறி படகு மூலம் வேதாரண்யத்துக்கு வருகிறார்கள்.

    இந்த நிலையில் வேதாரண்யம் அருகே மணியன் தீவில் இன்று காலை 6 மணியளவில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கி நின்றது. நீண்ட நேரமாக படகு நின்றதால் அங்கிருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    இதனால் படகில் ஏறி சுற்றி பார்த்தனர். அந்த படகில் என்ஜீன் இல்லாமல் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இதைதொடர்ந்து மர்ம படகு குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து மர்ம படகை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் பைபர் படகு இலங்கையை சேர்ந்தது என்றும், போதை பொருள் கடத்தல் கும்பல் வந்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

    பின்னர் தீவு அருகே உள்ள காட்டில் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது அங்கு ஒரு புதரில் படகு என்ஜீன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த என்ஜீன் 75 எச்.பி. சக்தி கொண்டதாகும்.



    பின்னர் சிறிது தூரம் தள்ளி பார்வையிட்ட போது அங்கு மண்எண்ணை கேன்களும் இருந்தன. இதையடுத்து என்ஜீன், மண்எண்ணை கேனை கைப்பற்றி மர்ம கும்பல் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம படகால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று கூறியதை முழுமையாக விளக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
    கீழ்வேளூர்:

    மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ. நாகையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியதை முழுமையாக விளக்க வேண்டும். பா.ஜனதா, சிவசேனாவை போல் இருக்கக் கூடாது.

    சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசின் முடிவு செய்து அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதில் மதம், ஜாதி பார்க்காமல் அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாகை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சீர்காழி:

    புத்தாண்டு பிறப்பையொட்டி நாகை மாவட்டம் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலு தேவி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அவர்கள் திருவெண்காடு பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தார். அவர் சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி கொண்டு இருந்தார். அவர் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் போலீஸ்காரர் அன்பரசன் அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து போலீஸ்காரை பணிசெய்ய விடாமல் தடுத்த அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் சீர்காழியை அடுத்த கீழ சட்டநாதபுரத்தை சேர்ந்த பாக்கிய சந்திரன் (வயது 24) என்று தெரியவந்தது.

    போலீஸ்காரரை வாலிபர் தாக்கி மிரட்டிய சம்பவம் திருவெண் காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பகுதியில் வள்ளலகரம் லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 46). இவர் கச்சேரி சாலையில் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல் கடை விற்பனை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகக்குடி என்ற பகுதியில் வந்தபோது சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த சுப்புராயன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்த சுப்புராயனுக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து குவிய தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்,:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் பசுமை மாறா காடுகளும், சதுப்பு நிலங்களும் அமைந்துள்ளது. இந்த காடு 36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இந்த காட்டில் மூலிகை வனமும் உள்ளது. மேலும் இந்த காட்டில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    இந்த வனவிலங்கு சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், குரங்கு, முயல், காட்டுப்பன்றி, நரி முதலிய விலங்குகளும், பறவைகள் சரணாலயத்தில் வெளிநாடு மற்றும் உள்நாடு வகையைச் சேர்ந்த 256 வகையான பறவை இனங்களும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இங்கு வந்து தங்கி சதுப்பு நிலத்தில் உள்ள புழு, பூச்சிகளை உண்டு, இன விருத்தி செய்து இங்கிருந்து தங்கள் சொந்த வாழிடங்களுக்கு திரும்புகின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக வேதாரண்யம் பகுதியில் சரியாக பருவமழை பெய்யாததால் காட்டு பகுதியில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. இதனால் பறவைகளுக்கு தேவையான உணவுவகைகள் இல்லாததால் கோடியக்கரைக்கு பறவைகள் அதிகமாக வரவில்லை.

    இந்தாண்டு வேதாரண்யம் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து குவிய தொடங்கி உள்ளன. ஈரான், ஈராக், சைபீரியா, காஸ்பியன் கடற்பகுதியில் இருந்து பிளமிங்கோ என்று அழைக்கப்படும் பூ நாரைகள் வந்துள்ளன.

    இந்த பறவைகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சியாளர் பாலச் சந்திரன் இங்கு வந்து பறவைகளை பிடித்து, முகாமிட்டு ஆராய்ச்சி செய்து வரு கின்றார். இங்கு வரும் பறவைகளில் செங்கால்நாரை, உள்ளான் வகைகள், நாரை வகைகள், நத்தைகொத்தி நாரை, கூழைக்கிடா, மயில் போன்ற வகைகள் ஏராளமாக காணப்படுகிறது. இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக வனத்துறை பல்வேறு வசதிகளை செய் துள்ளனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறியதாவது:-

    சரணாலயத்துக்கு வந்து குவிந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவை இனங்களை சுற்றுலா பயணிகள் , காட்டு பகுதியில் உள்ள பம்ப் ஹவுஸ், இரட்டை தீவு, கோவை தீவு, மணவாய்க்கால் மற்றும் கடற்கரை பகுதிகளில் பார்த்து மகிழலாம். பறவைகளின் அழகு மற்றும் பறவைகள் பறந்து செல்லும் காட்சிகளை கண்டுகளிக்க காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் பறவைகளை அதிகமாக பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆண்டு நல்ல சீதோஷ்ன நிலை நிலவுவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது.இதனால் வெளிநாட்டுகளில் இருந்து வரும் கண்கவர் பறவைகளை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ×