என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி அமைச்சர் வீட்டு முன்பு போராட விவசாயிகள் முடிவு
    X

    பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி அமைச்சர் வீட்டு முன்பு போராட விவசாயிகள் முடிவு

    பயிர் காப்பீட்டு தொகை வருகிற 12-ந் தேதிக்குள் வழங்காவிட்டால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்தரிபுலம், மருதூர் தெற்கு - வடக்கு, ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், மணக்குடி, துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அந்தந்த இடங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் முன்பு விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதில் விவசாயிகள் துண்டு ஏந்தி பிச்சை எடுத்தும் , மண் சட்டி ஏந்தியும், அரை நிர்வாண போராட்டமும் நடத்தினர். ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    கத்தரிபுலத்தில் விவசாயிகளின் போராட்டம் 24-வது நாளாகவும், ஆயக்காரன் புலத்தில் 15-வது நாளாகவும், மருதூர் தெற்கில் 12-வது நாளாகவும் நடந்து வருகிறது.

    இதற்கிடையே வேதாரண்யம் தாசில்தார் விஜயகுமார், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதனால் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற 12-ந் தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்காவிட்டால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேதாரண்யம் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். #TamilNews
    Next Story
    ×