என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் குடிபோதையில் வாலிபரை வெட்டி கொன்ற நண்பர்கள் 4 பேர் கைது
    X

    நாகையில் குடிபோதையில் வாலிபரை வெட்டி கொன்ற நண்பர்கள் 4 பேர் கைது

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டி கொன்ற நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    கீழ்வேளூர்:

    நாகை பாரதி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு பக்கிரி மகன் மதியழகன் (வயது24). நாகை காடம்பாடி சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (26), தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த விஜய் என்ற அப்துல்காதர் (23), அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் (26), பாப்பாகோவில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சிவா (24), ஜெயராமன். இவர்கள் 6 பேரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் சரண்ராஜ், விஜய் என்ற அப்துல்காதர், மாரியப்பன், சிவா, ஜெயராமன் ஆகிய 5 பேரும் கடந்த மாதம் 31-ந்தேதி இரவு நாகை பாப்பான் சுடுகாடு பகுதியில் மது அருந்தினர்.

    அப்போது அங்கு வந்த மதியழகன், என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் மது அருந்துகிறீர்களா? என்று கேட்டார். இதில் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ஜெயராமனை குத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து அவர்கள் வைத்திருந்த அரிவாளால் மதியழகனை வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் மதியழகனின் தலையை தனியாக வெட்டி எடுத்து உடலையும், தலையையும் அருகில் சாக்கடை ஓரத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதற்கிடையே மதியழகனின் தாய் மலர், மகன் காணாமல் போனதால் இதுபற்றி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே மதியழகனை கொலை செய்தது குறித்து 5 பேரும் மற்ற நண்பர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் மதியழகன் கொலை பற்றிய தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சரண்ராஜ், விஜய் என்ற அப்துல்காதர், மாரியப்பன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மதியழகனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து மதியழகனை புதைத்த இடத்திற்கு 4 பேரையும் போலீசார் அழைத்து சென்று உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதியழகனின் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    மேலும், தலைமறைவாக உள்ள ஜெயராமனை வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×