என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
    X

    வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

    வேளாங்கண்ணி பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஏசு பிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடந்தது.

    நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இது கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணியதலமாகவும், வேளாங்கண்ணி விளங்குகிறது.

    கிறிஸ்தவ ஆலய கட்டிடக்கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். மேலும், வேளாங்கண்ணி பேராலயம் மோர்க்கார சிறுவனுக்கு அன்னை மரியாள் காட்சி தந்த தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசுகிறிஸ்து பிறந்தநாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். இதையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடந்தது.

    Next Story
    ×