என் மலர்
செய்திகள்

நாகையில் ஓய்வுபெற்ற ரெயில்வே போலீஸ்காரரை அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்
நாகை:
நாகை கொத்தான்குளம் கீழ்கரையை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 76). ஓய்வுபெற்ற ரெயில்வே போலீஸ்காரர்.
நாகை அலிமரைக்காயர் தெருவை சேர்ந்தவர் அமீர் அலி (50), ஆட்டோ டிரைவர்.
நேற்று துரைராஜ் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் அமீர் அலி வந்தார். திடீரென ஆட்டோ துரைராஜ் மீது மோதுவது போல் ஓட்டி சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துரைராஜ், அமீர் அலியிடம் ஆட்டோவை மெதுவாக ஓட்டி செல்ல வேண்டியது தானே? என்று கூறினார். இதில் கோபம் அடைந்த அமீர் அலி, ஆட்டோவை விட்டு இறங்கி துரைராஜை தாக்கினார். அப்போது அவர் திடீரென அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் அமீர் அலியை கைது செய்தனர்.






