என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பலி
    X

    சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பலி

    சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி திருவாலி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள நரசிம்ம விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட்டு வருவதாக கார்த்திக் சென்றார். பின்னர் கோவிலில் பூஜை முடிந்தவுடன் தெற்கு வழி வயல் வழியாக வீட்டுக்கு தனியாக வந்து கொண்டிருந்தார். அப்போது வயல் வெளியில் உள்ள வாய்க்கால் மழை நீரில் நிரம்பி சென்று கொண்டிருந்தது. இது தெரியாமல் கார்த்திக் எதிர்பாராத விதமாக வாய்க்காலில் விழுந்து விட்டார். இதனால் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் கோவிலுக்கு சென்ற மகன் இன்னும் வீடு திரும்ப வில்லை என்று அவனது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வாய்க்காலில் சிறுவன் விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவனது பெற்றோர்களுக்கும், திருவெண்காடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவன் கார்த்திக் உடலை மீட்டனர். சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர்கள் கதறி அழுதனர். உடனே போலீசார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுவன் வாய்க்காலில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×