என் மலர்tooltip icon

    மதுரை

    • வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்காக இன்று நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமான மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கதுறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படுகொலை செய்த மர்ம கும்பல் உடனடியாக அங்கிருந்து தாங்கள் வந்த வாகனங்களில் தப்பி விட்டனர்.
    • கொலையுண்ட சக்திவேல் உடலை பார்க்க அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உள்ளனர்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகரை அடுத்த வண்டியூர் தேவர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34). மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் மதுரை சிந்தாமணி பகுதியில் ரைஸ்மில் நடத்தி வருவதோடு, பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, வீடு திரும்பிய சக்திவேல் தூங்க சென்றார். இதில் அதிகாலை எழுந்த அவர் குளித்துவிட்டு சங்கு நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ரைஸ்மில் குடோனுக்கு மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார். அவர் வண்டியூர் டோல்கேட் அருகே வந்தபோது திடீ ரென்று மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை முந்திச்சென்று வழிமறித்தது. இதனை சற்றும் எதிர்பாராத சக்திவேல் அதிர்ச்சியில் உறைந்தார்.

    அந்த கும்பலிடம் நீங்கள் யார், உங்களுக்கு என்ன வேண்டும் என்று சக்திவேல் கேட்டார். ஆனால் பதில் எதுவும் கூறாத அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை வெளியில் எடுத்தனர். இதனால் பதட்டம் அடைந்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் விடாமல் சில மீட்டர் தூரம் வரை ஓட ஓட விரட்டிய அவர்கள் ஒரு கட்டத்தில் அவர் தப்பாதவாறு சுற்றி வளைத்தனர்.

    பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சக்திவேலை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரை படுகொலை செய்த மர்ம கும்பல் உடனடியாக அங்கிருந்து தாங்கள் வந்த வாகனங்களில் தப்பி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து உடனடியாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. ஓ.பி.அணி அணி மாவட்ட செயலாளர் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சக்திவேலை கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கும்பல் யார்? அவர்கள் எந்த வழியாக தப்பினர்? என்பது குறித்து முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சக்திவேல் நடத்தி வந்த ரைஸ்மில் தொடர்பாக கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தொழில் போட்டியில் சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா?

    அதேபோல் சமீபத்தில் சரக்கு வாகனம் ஒன்று விற்பனை தொடர்பாக இவருக்கும், ஒரு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது பைனான்ஸ் தொழிலில் பணம் கொடுக்கல், வாங்கலில் கொலை அரங்கேறியுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட சக்திவேல் உடலை பார்க்க அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அங்கும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மதுரையில் பரபரப்பும், பதட்டமும் அதிகரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பு கல்வி ஆண்டில் மதுரை மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும் வங்கி நிர்வாகமும், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.125 கோடி என்ற இலக்கைத் தாண்டி, இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,627. இவர்களில் 2,078 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

    • வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
    • உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்த படியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவின் போது ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 681 காளைகளும், 480 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

    வாடிவாசல் முன்பு காளைகள் மற்றும் வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்காக தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தது. இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டி ருந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் போட்டி தொடங்கியது.

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் ஆக்ரோசமாக களத்தில் நின்று விளையாடின. வீரர்களும் அதற்கு நிகராக காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்க முயன்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பல சுற்றுகளாக மாலை வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைகளுக்கும் டாடா ஏசி வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மின்விசிறி, அண்டா, பீரோ, தங்க காசு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

    உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
    • மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

    • அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
    • தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு தொழி ல்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகளவில் மனு வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வருகை தந்தும் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்காக நிவாரண நிதி 1 ரூபாய் கூட தரவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.

    மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலம் ராமேசுவரம்.
    • தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாகவும், உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கும் ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

    இதில் ஆண்டுதோறும் வரக்கூடிய முக்கிய அமாவாசை நாட்களான தை, ஆடி, புரட்டாசி ஆகிய அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது. அந்த வகையில் நாளை மறுநாள் (9-ந்தேதி, வெள்ளிக்கிழமை) தை அமாவாசை வருவதால் அந்நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியானது கோவில் நிர்வாகம் சார்பில் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க மூங்கில் கம்புகள் வைத்து வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும், கூட்டம் இருக்கும் என்பதால் நீண்டநேரம் வரிசையில் நின்று செல்வதற்கு வசதியாக தற்காலிக நிழற்குடை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கோவில் நான்கு ரத வீதிகளிலும் தை அமாவாசை வரையிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது..

    தை அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்படு கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான கால பூஜைகள் நடைபெறும். காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கரைக்கு எழுந் தருளி தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.

    அதனைதொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருக்கும். மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதணை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று “முதலமைச்சரின் சிறப்பு விருது” வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.
    • தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் வழங்கினார்.

    மதுரை:

    மதுரை கிழக்கு ஒன்றியம், யா.கொடிக்குளம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் அம்மாள். இவர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது மகள் ஜனனியின் நினைவாக யா.கொடிக்குளம் பகுதி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் உயரிய நோக்கில் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ.7 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார். அவரது சேவையை பாராட்டி, பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று "முதலமைச்சரின் சிறப்பு விருது" வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    கடந்த வாரம் மதுரையில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் அதே பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட மேலும் 91 சென்ட் நிலத்தை அவர் தானமாக வழங்கி உள்ளார்.

    இதற்கான தான பத்திரத்தை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஆயி என்ற பூரணம் அம்மாள் நேற்று வழங்கினார். அப்போது, அவர் தனது மகள் ஜனனியின் படத்தை கொண்டு வந்திருந்தார். அந்த படத்தின் முன்பாக வைத்து, பத்திரத்தை முதன்மை கல்வி அதிகாரியிடம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆயி அம்மாள், கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மக்களும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள்.

    • சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார்.
    • சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சினிமா துறையில் இருந்து வந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவர் தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் சாதித்தவர்.

    31 ஆண்டு காலம் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்து, வரலாறு படைத்தது. சினிமா துறையில் இருந்து வந்த சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்தார். அவர் சினிமாவில் அழுதால் மக்கள் அழுவார்கள். அவர் சிரித்தால் மக்கள் சிரிப்பார்கள். நடிப்பால் அவர் புகழ் பெற்றவர். ஆனால் கட்சி தொடங்கி அவரால் வெற்றி பெற முடியவில்லை.

    அதேபோல் சினிமா துறையில் இருந்து வந்த பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்தார். அடுக்குமொழியில் பேசும் டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பித்தார். போணியாகவில்லை. ரஜினி கட்சி அறிவித்தார். ஆனால் வாபஸ் வாங்கிவிட்டார்.

    ஊழலை ஒழிப்பேன், நீதி கேட்பேன் என கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஒரு தொகுதிக்காக தனது வாயை இப்போது வாடகைக்கு விட்டுவிட்டார்.

    தற்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இளைஞர். நல்ல மனம் படைத்தவர். ஒரு லட்சியத்தோடு வருவதாக சொல்கிறார்.

    ஆனாலும் வருகின்ற 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார்.

    சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இதற்கு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும். கூட்டணி பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கையே எங்களுக்கு பலம். தொண்டர்களின் பலம் எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
    • இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தந்தை, மகன் கொலை வழக்கில் ஒரு சாட்சியிடம் 28 நாட்களுக்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதால், வழக்கு விசாரணை தாமதம் என்று கூறினார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் குறுக்கு விசாரணை என்ற பெயரில் 28 நாள் விசாரணை நடைபெற்றால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா இல்லை தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதைத்தொடர்ந்து ஜாமின் கோரிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
    • மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மதுரை:

    மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    மேலும் மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு உரிய முடிவு எடுத்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.

    ×