என் மலர்tooltip icon

    மதுரை

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பவுர்ணமியை யொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக பக்தர்கள் சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

     நாளை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.35 மணிக்கு வனத்துறையினர். சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்து டன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாக னங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    • மதுரை நகரில் மோடி பயணம் செய்யும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மாநில போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
    • மோடி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினரும் ஓரிரு நாளில் மதுரை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக டெல்லியில் இருந்து 27-ந்தேதி மதியம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    பின்னர் மாலை ஐந்து மணிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரை வருகிறார். மதுரை வீர பாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கும் பிரதமர் மோடி அந்த பள்ளி வளாகத்தில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்டம், கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    மாலை 6.15 மணி அளவில் காரில் புறப்பட்டு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு வரும் மோடி அங்கு இரவு தங்குகிறார். முன்னதாக பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மறுநாள் 28-ந்தேதி காலை 8 .40 மணிக்கு காரில் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் தனியார் பள்ளி மைதானம் மற்றும் இரவு தங்கி ஓய்வு எடுக்கும் பசுமலை நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை நகரில் மோடி பயணம் செய்யும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மாநில போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். மோடி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படையினரும் ஓரிரு நாளில் மதுரை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

    • வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.
    • வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்காக பசும்பொன் சென்றவர்கள், அங்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

    அப்போது பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் என்ற கிராமத்தில் உள்ளே சென்ற வேனை, சிலர் வழி மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் வேன் டிரைவர் சிவக்குமார், வீரமணி மற்றும் மலைகண்ணன் ஆகிய 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் பலர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டனர். தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் சாட்சிகள் கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்வதில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த வழக்கில் பல அரசு தரப்பு சாட்சிகள் சாட்சிகளை ஒழுங்காக பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் கூட குற்றவாளிகளுக்கு பயந்து பிறழ் சாட்சியாக மாறி விட்டனர்.

    எனவே இந்த வழக்குகளின் விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் இருந்து வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை பாதுகாப்பது அரசின் கடமை. மேலும் இந்த வழக்கை அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கும் மாற்ற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ளார்கள்.

    எனவே இந்த கொலை வழக்குகளின் விசாரணையை மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.
    • மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு நிலையான கொள்கையை கடைபிடிக்கவில்லை.

    மதுரை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை புறப்படும் முன்பு மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மதுரையின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மதுரை நெல்பேட்டையில் இருந்து அவனியாபுரம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க வெளியிடப்பட்ட அறிவிப்பு பின்னர் போதிய நிதி ஒதுக்காமல் வாபஸ் பெறப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,296 கோடி மதிப்பீட்டில் முல்லை-பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் தி.மு.க. அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.

    இதேபோல் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். இது ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

    இதேபோல் வைகையாற்றின் கரையோரம் எங்களது ஆட்சியில் தான் காங்கிரீட் தடுப்பு சுவர் அமைத்தோம். வைகையாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகளையும் கட்டி திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மதுரையில் நிறைவேற்றி இருக்கிறோம். மதுரை-நத்தம் பறக்கும் பாலம் திட்டமும் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான். இப்படி நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் புதிய பெயர் வைத்து தி.மு.க. பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:

    கேள்வி:-அ.தி.மு.க. தலைமையில் இன்னும் கூட்டணி அமையவில்லையே?

    பதில்:- தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே விரைவில் எங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தி.மு.க.விலும் இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. அங்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் அங்கு யார்? யார்? இருப்பார்கள் என்பது தெரியவரும். தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் வெளியேறும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும். இந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பிரமாண்ட வெற்றியை தரும்.

    2021 சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் நாங்கள் அமோக வெற்றி பெற்றோம். அதன் அடிப்படையில் பார்த்தால் தற்போது 7 தொகுதிகளில் எங்கள் வெற்றி உறுதியாக இருக்கிறது. நாமக்கல், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகளிலேயே வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

    கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், விலக்கியவர்களையும் ஒன்றாக இணைத்து கட்சியின் சின்னம் முடக்கப்படும் என்று கூறப்படுகிறதே?

    பதில்:- எங்களுக்கான அங்கீகாரத்தை சுப்ரீம் கோர்ட்டே உறுதி செய்துவிட்டது. தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க.வை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தையும் வழங்கியுள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. சின்னத்தை முடக்க நினைப்பவர்களுக்கு அது பகல் கனவாகவே உள்ளது.

    கேள்வி:- ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு முதலில் ஆதரவு தெரிவித்தீர்கள். தற்போது எதிர்க்க காரணம் என்ன?

    பதில்:- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை கோட்பாட்டில் சில திருத்தங்களை கொண்டு வரவே நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் பட்சத்தில் இந்த திட்டத்தை நாங்கள் ஆதரிப்போம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்க தேவையில்லை. ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

    கேள்வி:- மேகதாது அணை விவகாரம் பற்றி...

    பதில்:- மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு நிலையான கொள்கையை கடைபிடிக்கவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காவிரி நீரை பெற கடுமையாக போராடினோம். ஆனால் இந்த அரசு மேகதாது அணை விவகாரத்தில் கையாண்டு வரும் ஓட்டெடுப்பு முறை தவறானது. மேலும் அந்த பிரச்சனையில் இருந்து தி.மு.க. அரசு பின்வாங்கி விட்டது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும். எனவே தி.மு.க. அரசு மீண்டும் வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர்.
    • கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன. குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவில், புஷ்பநாத சுவாமி கோவில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில், மகா பலேஸ்வரர் கோவில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

    ஆனால் இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆவணங்களை நேரடி ஆய்வு செய்தபோது அதிகமான பல்வேறு சொத்துகள் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டும் பட்டா வழங்கப்பட்டும் உள்ளது கண்டறியப்பட்டது.

    அதன் பின் இந்த ஆய்வு அறிக்கை திருச்சி இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என இணை ஆணையர் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த கோவில் சொத்துக்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆகும். இந்நிலையில் கோவில் பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை என்று கூறி தனி நபர்கள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்குள் உண்டியல் வைத்து வசூல் செய்வது, ஆன்லைனில் பணம் வசூலிப்பது போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்தும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோவிலில் தனி நபர்கள் உண்டியல் வைத்து வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட கோவிலில் அன்னதானம் வழங்க உண்டியல் வைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து அவை அகற்றப்பட்டன. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதி, கோவில்களில் தனி நபர்கள் உண்டியல் வைத்தது சம்பந்தமாக விசாரணை செய்து அது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனி நபர் உண்டியல் வைத்து வசூல் செய்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

    மேலும் கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.
    • அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது.

    * ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.

    * கட்சி ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பது தான் நோக்கம்.

    * தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    * அதிமுக சுயமாக முடிவு எடுத்து செயல்பட தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

    * தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது.

    * அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.

    * அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.

    • அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
    • சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த வாசுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    தமிழ்நாடு அரசின் முறையான அனுமதி பெற்று, கிராம மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரையூர் அருகே உள்ள சூலப்புரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறேன்.

    இந்நிலையில் சிலர் எனது இ-சேவை மையத்தின் முன்பு கட்டிடத்தை மறைக்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனையடுத்து நாங்கள் பிளக்ஸ் போர்டை சிறிது தூரம் தள்ளி வைத்தோம். இதற்காக தேவையற்ற பிரச்சனையை எழுப்பி என் மீதும் எனது குடும்பத்தினர் மீது டி.கல்லுப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து மீண்டும் இ-சேவை மையத்தை மறைக்கும் வகையில் எதிர்தரப்பினர் பிளக்ஸ் போர்டை மாற்றி வைத்தனர். இதுகுறித்து மீண்டும் எனது குடும்பத்தினர் கேள்வி எழுப்பிய போது, எனது மாமியார் மற்றும் மாமனாரை கடுமையாக தாக்கி இழிவான வார்த்தைகளால் திட்டினர். ஏற்கனவே அனுமதி பெறாமல் வைத்த பிளக்ஸ் பேனர்களை அகற்றும்படி ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சமூக ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் பயன்படுத்தும் இ-சேவை மையத்தை மறைத்து அனுமதியின்றி சட்டவிரோதமாக குறிப்பிட்ட சாதி சமூகத்தினர் வைத்துள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வேண்டும். கொலைமிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட இடத்தில் பல ஆண்டுகளாக பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேனர் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், இந்த விவகாரத்தில் போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.
    • எனக்கு ஜாமின் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒரு வழக்கு சம்பந்தமாக அவருக்கு சாதகமான நடவடிக்கை எடுக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

    இவர் ஏற்கனவே தனக்கு ஜாமின் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை பெஞ்சில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், சட்டத்துக்கு புறம்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீ சார் என்னை கைது செய்து உள்ளனர். தற்போது நான் 70 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். எனக்கு ஜாமின் அளிக்கும்பட்சத்தில் உரிய நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைப்பேன். எனவே எனக்கு ஜாமின் அளித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ஜாமின் மனு குறித்து தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
    • மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவானது.

    இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர். விசாரணை முடிவில் கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி முத்துலட்சுமி பிறப்பித்தார். இதையடுத்து இன்று மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மீதமுள்ள மற்றொரு திருஞானம், கருப்பணன், சோலை, ராமலிங்கம் ஆகிய 4 பேரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலையானதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.
    • சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமங்கலம்:

    தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று இரவு வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 8 மணிக்கு மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கு பயணிகள் ஏறி, இறங்கியதும் 8.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது.

    இந்த ரெயில் அடுத்ததாக விருதுநகரில் மட்டுமே நின்று செல்லும். இதற்கிடையே மதுரையை கடந்த ரெயில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் ரெயில் நிலையத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் சென்ற போது வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று தற்கொலைக்கு முயன்ற அவர் மீது ரெயில் மோதியது.

    ஆனாலும் உடனடியாக வேகத்தை குறைக்க முடியாத சூழலில் அதே வேகத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில் நிற்காமல் அதே வேகத்தில் சென்றது. அந்த சமயம் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ஸ்டேசன் மாஸ்டர் திடீர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் கப்பலூர் அருகே மோதிய வாலிபர் உடல் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்தது.

    கால்கள் துண்டாகி சிதைந்துபோன நிலையில் தலை மற்றும் உடலுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றதால் அதிர்ந்துபோன திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக அடுத்ததாக உள்ள கள்ளிக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் அந்தியோதயா ரெயில் கள்ளிக்குடி வந்தபோது தயார் நிலையில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் போலீசார் ரெயிலை நிறுத்தினர். பின்னர் ரெயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்த வாலிபர் உடலை சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதிய இடமான கப்பலூர் பகுதியில் இருந்து கள்ளிக்குடி வரை சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு பலியான வாலிபர் உடலுடன் ரெயில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்தியோதயா ரெயில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நாகர்கோவிலுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

    பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில், கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரும் காலங்களில் கிரிவல வீதிகளில் ஆக்கிரமிப்பு இல்லாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கிரிவலப் பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    பழனி முருகன் கோயிலிலும் திருப்பதியை போல பக்தர்களை அழைத்துச் செல்ல கிரிவல வீதிகளில் பேட்டரி மற்றும் மின்சார வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    • சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
    • “இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது"

    பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள சூர்யா சிவா, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

    பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென சூர்யா சிவா மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது" என கூறி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து, வாடகை தராமல் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

    பாஜகவில் இணைந்த சூர்யா சிவாவிற்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் சூர்யா சிவா, பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.madurai highcourt dismisses trichy surya siva plea

    இதையடுத்து இருவரும் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். கடந்த நவம்பர் மாதம் மீண்டும் சூர்யா சிவா பாஜகவில் சேர்க்கப்பட்டு, முன்பு அவர் வகித்து வந்த ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக தொடர்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×