search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனிநபர் உண்டியல் வைத்து வசூல் செய்தது எப்படி? ஐகோர்ட்டு கேள்வி
    X

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனிநபர் உண்டியல் வைத்து வசூல் செய்தது எப்படி? ஐகோர்ட்டு கேள்வி

    • கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர்.
    • கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன. குறிப்பாக வரதராஜ பெருமாள் கோவில், புஷ்பநாத சுவாமி கோவில், கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில், மகா பலேஸ்வரர் கோவில், வழங்கியம்மன் வாஞ்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

    ஆனால் இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு ஆவணங்களை நேரடி ஆய்வு செய்தபோது அதிகமான பல்வேறு சொத்துகள் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டும் பட்டா வழங்கப்பட்டும் உள்ளது கண்டறியப்பட்டது.

    அதன் பின் இந்த ஆய்வு அறிக்கை திருச்சி இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என இணை ஆணையர் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த கோவில் சொத்துக்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஆகும். இந்நிலையில் கோவில் பராமரிப்புக்கு போதிய நிதி இல்லை என்று கூறி தனி நபர்கள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்குள் உண்டியல் வைத்து வசூல் செய்வது, ஆன்லைனில் பணம் வசூலிப்பது போன்ற சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்தும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து விட்டனர். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோவிலில் தனி நபர்கள் உண்டியல் வைத்து வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட கோவிலில் அன்னதானம் வழங்க உண்டியல் வைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து அவை அகற்றப்பட்டன. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதனைப் பார்த்த நீதிபதி, கோவில்களில் தனி நபர்கள் உண்டியல் வைத்தது சம்பந்தமாக விசாரணை செய்து அது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனி நபர் உண்டியல் வைத்து வசூல் செய்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

    மேலும் கோவில் சொத்துகள் பராமரிப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×