என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரம்:
தாம்பரம் சேலையூரை அடுத்து அகரம் தென் ஊராட்சியில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. கடந்த வாரம் இந்த குளம் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன் ஏற்பாட்டின் பேரில் தூர் வாரும் பணி தொடங்கியது.
அதில் தி.மு.க எம்.எல். ஏ.க்கள் தா.மோ. அன்பரசன், எஸ். ஆர். ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். தூர்வாரும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடந்தது.
தூர்வாரப்படும் மண்ணை குளக்கரையின் மீது கொட்டி பலப்படுத்த வேண்டும். ஆனால் குளத்தில் 10 அடி ஆழம் தோண்டப்பட்ட மண் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஒரு லாரி மண் ரூ 1000 முதல் ரூ 1500 வரை விற்கப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் இது குறித்து புகார் செய்தனர்.
எனவே, அது பற்றி விசாரணை நடத்த தாசில்தார் குமுதாவை அனுப்பி வைத்தார். உடனே அவர்நல்ல தண்ணீர் குளத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது குளத்தில் மண் அள்ளிக்கொண்டிருந்த ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈக்காட்டுதாங்கல், ஜோதி நகர், 1-வது தெருவில் வசித்து வந்தவர் உதயபாலன். தொழில் அதிபர். கடந்த 5-ந்தேதி அவர் வீட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் பிரபாகரன் கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
உதயபாலனிடம் கடனாக பணம் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவரை மிரட்டி பணத்தை வாங்க முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு சென்றேன். அப்போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் அவரை வெட்டி கொன்றேன். பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை எடுத்து தப்பினேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் பிரபாகரன் மட்டும் இந்த கொலையை செய்திருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வேறு யாரேனும் அவருக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கல்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் பல இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது. கள்ளச்சாராய விற்பனையும் நடக்கிறது.
இதனால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மது விற்பனையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கல்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மது விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் திருக்கழுக்குன்றம் மது விலக்கு இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கல்பாக்கம் பகுதியில் மது விற்ற பாப்பாத்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்கிவால், தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு வாட்வரியின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை மத்திய அரசு தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்துள்ளது.
ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் தான் 18 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விகித முறை கொண்டு வருவதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நல்ல பலனை தரும்.

தற்போதுள்ள தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை கவலையளிப்பதாக உள்ளது. ஆளும் கட்சி எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். சபாநாயகர், முதல்வர் ஆகியோர் எதிர்கட்சிகள் சொல்லும் கோரிக்கைளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களின் கருத்தை சொல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல் எதிர்கட்சிகளும் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்வதை தவிர்த்துவிட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. செயல்தலைவர் பாரதிய ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார். அது முற்றிலும் தவறானது. எண்ணற்ற திட்டங்களை பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. தமிழக அரசு பால் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்தது போல பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இருந்தால் அதை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிட மத்திய அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை.
ஆனால் தாய்போல் வணங்கும் பசுவை விவசாயத்திற்கு என ஏமாற்றி வாங்கி சென்று இறைச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க சந்தைமுறை படுத்துவதற்குத்தான் சட்டம் இயற்றியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்சன்னியாசி (வயது 24). நேற்று மாலை அவர் வேளச்சேரி மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது மர்ம கும்பல் அவரை சுற்றிவளைத்து இரும்பு கம்பி, கத்தி, அரிவாளால் சரமாரியாக தாக்கினர். அதிர்ச்சி அடைந்த பொன்சன்னியாசி உயிர் தப்பிப்பதற்காக ஓட்டம் பிடித்தார். அவர் அருகில் உள்ள கடைக்குள் புகுந்தார். ஆனாலும் விரட்டி வந்த கொலைவெறி கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் 3 கடைகளை அடித்து நொறுக்கினர்.
இதைத் தொடர்ந்து அருகில் உள்ள சுடுகாட்டுக்குள் தப்பி ஓடிய பொன்சன்னியாசியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் பரிதாபமாக இறந் தார். கொலையுண்ட பொன்சன்னியாசி மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. எனவே முன்விரோதத்தில் மர்ம நபர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளிக்கரணை, துளிக்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல் முருகன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஈஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த வேல்முருகன் மனைவியை கண்டித்தார். ஆனால் ஈஸ்வரி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்தார்.
இது தொடர்பாக நேற்று மாலை வேல்முருகன்- ஈஸ்வரி இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த வேல்முருகன் கல்லால் ஈஸ்வரியின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வேல் முருகனை கைது செய்தனர்.
காஞ்சீபுரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
அ.தி.மு.க. ஏற்கனவே 3 அணியாக உள்ளது. இப்போது மன்னார்குடி கோஷ்டியுடன் 4-வது அணியாக பிரிந்துள்ளது.
அ.தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.
தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. ஆந்திர அரசு விதிமுறைகளை மீறி ஆறுகளில் தடுப்பணை கட்டி வருகிறது. இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜஸ்தானில் உரிய ஆவணங்களுடன் மாடுகள் வாங்கச் சென்ற தமிழக அதிகாரிகள் மீது பா.ஜனதா ஆதரவாளர்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
கத்தார், தோகாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஸ்ரீராமுலுவிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் வைத்திருந்த ‘எமர்ஜன்சி’ விளக்கை பிரித்து பார்த்தனர்.
அதன் உள்ளே 10 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்துசுமார் 1 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீராமுலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்கம் கடத்தலுக்கு அதிகாரிகள் யாரேனும் உதவினார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அதில் செல்ல இருந்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த முகமது பைசல் என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது.
இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது குறித்து முகமது பைசலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் வந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர்.
காலை 5 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் நிறுத்தத்தில் பஸ் நின்றது. பயணிகள் இறங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் இருந்து நாவல்பழம் ஏற்றி வந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சின் பின்பகுதியும், லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. பின் இருக்கையில் இருந்த சென்னை ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் மற்றும் லாரியில் இருந்த மதனபள்ளியை சேர்ந்த வெங்கடேஸ்வரலு, கனகராஜ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் லாரி டிரைவர் ஸ்ரீநாத், மற்றும் லாரியின் பின்பக்கத்தில் இருந்த ஏழுமலை, வீரராகவன், ஆறுமுகம், மணி, வெங்கடேசன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 6 பேருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டபோது பஸ்சின் பின்பக்க இருக்கையில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மட்டும் இருந்து உள்ளார். இதனால் பஸ்சில் அவர் மட்டும் பலியாகி விட்டார். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாலை 3 மணியளவில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஊர்வலமாக வந்த எம்பெருமான் காந்திசாலை தேரடி பகுதியில் உள்ள திருத்தேரில் எழுந்தருளினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரில் ஏறி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
பின்னர் காலை 6 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் அமைச்சர்கள் சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ, அதிமுக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ., பழனி, வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திருத்தேரில் ராஜ அலங்காரத்தில் எம்பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். காந்திசாலை, காமராஜர் வீதி, இந்திராகாந்தி சாலை, ராஜவீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக சாமிக்கு தீபாராதனை காட்டி கும்பிட்டனர்.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி தலைமையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை காஞ்சீபுரம் வருகை தந்து காமாட்சியம்மன் கோயில், சங்கரமடம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளார். இதை தொடர்ந்து வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளுர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிகளுக்காக இன்றே போலீசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு தாம்பரம் ஆண்டாள் தெருவில் வசித்து வருபவர் சிவராமகிருஷ்ணன். தொழில் அதிபர். ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் பீரோவில் இருந்த நகையை சரிபார்த்த போது வைரத்தாலான வளையல், கம்மல் உள்ளிட்ட நகைகள் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும்.
இது குறித்து சிவராமகிருஷ்ணன் சேலையூர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் முடிச்சூரை சேர்ந்த சக்கரவர்த்தி நகையை கொள்ளையடித்திருப்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
சிவராமகிருஷ்ணன் வீட்டிற்குள் வந்து சென்ற போது பீரோவில் இருந்த வைர நகைகளை டிரைவர் சக்கரவர்த்தி எடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.
இந்த நகைகளை சீர்காழி, சிதம்பரம் பகுதியில் விற்றதாக கூறினார். போலீசார் நகைகளை பறிமுதல் செய்தனர்.






