என் மலர்
கடலூர்
- ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான்.
- இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும்.
சிதம்பரம்:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சிதம்பரம் தொகுதியில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இது பிரசார கூட்டம் போல தெரியவில்லை. இது நன்றி அறிவிப்பு விழா போலவும், வெற்றி விழா போலவும் தெரிகிறது. அந்த அளவுக்கு உங்களுடைய எழுச்சி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் உறுதியாகி விட்டது. ஒன்றிய பா.ஜனதா அரசு தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் கேட்ட சின்னத்தை உடனே கொடுத்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன சின்னம் கேட்டாலும் கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக வேறு சின்னம் தான் கொடுப்போம் என்று அலைக்கழித்தது. ஆனால் திருமாவளவன் மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி பானை சின்னத்தை வாங்கி விட்டார்.
பானை சின்னத்தை வாங்கியதிலேயே நாம் பாதி வெற்றி பெற்றுவிட்டோம். இன்னும் நாம் பாதி வேலைதான் செய்யவேண்டும். அந்த வேலையை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
கடந்த முறை நரேந்திர மோடியை ஓட ஓட விரட்டியடித்தது போல, இந்த முறை அதைவிட அதிகமாக ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.
கடந்த முறை திருமாவளவன் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏனென்றால் கடைசி நிமிடத்தில் தான் பானை சின்னத்தை ஒதுக்கினார்கள். இந்த முறை நாம் கேட்டவுடன் பானை சின்னம் ஒதுக்கியிருந்தால் ஒரே நாள் செய்தியில் முடிந்திருக்கும். ஆனால் இந்த முறை சட்டப்போராட்டம் நடத்தியதால் இந்த பானை சின்னம் தேசிய அளவில் பிரபலமாகி விட்டது. எனவே இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது இங்கு பிரசாரத்துக்கு வந்திருந்தேன். அப்போது நமது கூட்டணி கட்சி வேட்பாளர் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இனிமேல் அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.
டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் அங்கு சென்று விட்டார். அதை நேற்று இரவு அவர் என்னிடம் சொன்னார். எனவே அவரது தம்பியாக நான் இங்கு பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இந்த முறை 2 தொகுதிகள் கொடுத்தால் திருமாவளவன் நமது கூட்டணியை விட்டு பிரிந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்று விடுவார், பா.ஜ.க.வுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அரசியல் விஞ்ஞானிகள் நிறைய பேர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் திருமாவளவன் மன உறுதியோடு இருந்து அ.தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி அது கொள்ளை கூட்டணி, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற கூட்டணி, தி.மு.க. கூட்டணிதான் கொள்கை கூட்டணி, சமூக நீதிக்காக போராடுகிற கூட்டணி என்று கூறி நமது கூட்டணியில் உள்ளார். தி.மு.க. 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க.வின் வெற்றியை விட நான் மிக மிக முக்கியமான வெற்றியாக கருதுவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியைத்தான்.
இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ்தான். அதன் உரிமையாளர்கள் பெண்கள் தான். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் சேமிக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த 3 வருடத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பயனாளியாவது இருப்பார்கள்.
ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான். நமது கழகத்தலைவர் தான் மெயின் பிக்சர். அவர் வருகிற 6-ந்தேதி வருகிறார். அவர் தனது சாதனைகளை, திட்டங்களை எல்லாம் சொல்வார். உங்களிடம் அதிகமாக கேள்விகளை கேட்பார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பற்றி கேள்விகள் கேட்பார். பின்னர் அவர் அடுத்த தொகுதிக்கு சென்று விடுவார்.

எனவே நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு தேர்தல் வரை பிரசாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி 10 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஏதாவது செய்தாரா? 2016-ம் ஆண்டு திடீரென்று நடு ராத்திரியில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். ஏ.டி.எம்.மில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் நின்று இறந்து போனார்கள்.
பிரதமருக்கு நாம் வைத்திருக்கக்கூடிய புது பெயர் 29 பைசா. இது செல்லாக்காசு தான். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடியும் செல்லாக்காசாகி விடுவார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும். கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கு கொடுப்போம். ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய்க்கு கொடுப்போம். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
- அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமரால் தேர்வு செய்யப்பட்டவர் கார்த்தியாயினி.
சிதம்பரம்:
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை அனைவரும் சேர்ந்து தோற்கடிக்க செய்யவேண்டும். அதனால்தான் நாம் எல்லோரும் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.
யாராக இருந்தாலும் தனது அதிகார பலத்தை வைத்து முடக்கிவிடலாம் என்று நினைக்கக்கூடிய தொல். திருமாவளவனை சிதம்பரம் தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை தோற்கடித்து பாடம் புகட்டவேண்டும்.
விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அது விழுப்புரம் சிதம்பரம் கட்சி என்று.
திருமாவளவன் அதிக தொகுதிகளை கேட்டாரு. பொது தொகுதியை கேட்டாரு. கூட்டணி மாறிவிடலாம் என்றுகூட யோசிச்சாரு. ஆனால் தி.மு.க. தலைமை இறங்கி வரவில்லை. திருமாவளவன் மீது திமுக வைத்திருக்கும் மரியாதை அவ்வளவுதான்.
பா.ஜ.க. வேட்பாளர் அக்கா கார்த்தியாயினியை வெற்றிபெற செய்யவேண்டும். அக்கா கார்த்தியாயினி அரசியல் தெரிந்தவர். நிர்வாகத் திறன் மிக்கவர். மேயராக பணியாற்றியவர். அடித்தட்டில் இருந்து மேலே வந்த கார்த்தியாயினி, அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்டவர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என் தெரிவித்தார்.
- தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
- டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
அகில இந்திய அளவில் மோடி வழங்கக்கூடிய வாக்குறுதிகள், தமிழ்நாடு சம்பந்தமான வாக்குறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் வருகிறது. பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடக்கூடிய தொகுதிக்கு தனி வாக்குறுதி வழங்கப்படும்.
கேள்வி:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என கடும் விமர்சனம் எழுப்பி உள்ளார். ஆனால் தமிழகத்தில் பா.ம.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை எழுப்புகிறது.
பதில்-டாக்டர் சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழலுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து உள்ளார். மேலும் கட்சிக்கு வந்தவுடன் சீட்டு வாங்கவில்லை. தனி அங்கீகாரத்துடன் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதில் எப்படி தவறு சொல்ல முடியும். மேலும் பா.ம.க.வில் தனி திறமை உள்ள வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.
மேலும் சிதம்பரம் தொகுதியில் முன்னாள் மேயரான பட்டியலின பெண் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவரை வெற்றி பெற செய்து உயர் பதவிக்கு கொண்டுவர போட்டியிட வைத்துள்ளோம். ஆனால் தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
கடலூரில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. இதுதான் சாதனையாகும். இதன் காரணமாக தான் கடலூர் பாராளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தி.மு.க. தள்ளிவிட்டு உள்ளனர். ஆகையால் தங்கர் பச்சானுக்கு போட்டி யாரும் இல்லை.
கே-பா.ஜ.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிக்கு அவர்கள் விருப்பப்படும் சின்னம் வழங்கப்பட உள்ளதா குற்றச்சாட்டு உள்ளதே?
ப:-தேர்தல் ஆணையத்திற்கு தனியாக விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சின்னம் கிடைப்பதற்கு முன்னதாகவே பதிவு செய்யவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் யார் முன்னதாக சின்னம் கேட்டு பதிவு செய்கின்றார்களோ அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முதலில் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் தொடர்பாக கேட்டுள்ளனர். மேலும் இவர்கள் கேட்பதற்கு முன்பாக யாரும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளனர். மேலும் ஒரு இடத்தில் நிற்கக்கூடிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவாகும். தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றங்கள் தெளிவான விளக்கம் மற்றும் உத்தரவு வழங்கி உள்ளனர்.
தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் புது புது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்து விட்டால் களத்தில் உறவினர்கள், அண்ணன், தம்பி என்று பார்க்கக்கூடாது. இங்கு நிற்கக்கூடிய தங்கர் பச்சான் பலமான வேட்பாளராக உள்ளார். மேலும் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிற்க வைத்துள்ளனர். நான் ஐ.பி.எஸ். ஆக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கினேன். தற்போது அதனுடைய மதிப்பு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது. நான் தேர்தலில் நிற்பது நல்ல அரசியலுக்காகவும், மாற்றத்திற்காகவும் நிற்கின்றேன். மேலும் கோயம்புத்தூரில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கிடையாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளேன். அங்குள்ளவர்களிடம் சவால் விட்டு உள்ளேன். ஆனால் மற்ற கட்சியினர் இதனை சொல்ல தயாராக உள்ளனரா? நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும்.
- மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. கூட்டணி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து கடலூர் முதுநகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் செய்துள்ள வேலைகள் தற்போது குறிப்பிடுகிறேன். இதில் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.1507 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பிரதமர் வீடு கட்டு திட்டம் மூலம் 5803 குடும்பம், 3 லட்சத்து 7 ஆயிரம் கழிப்பறை, 2 லட்சத்து 40 ஆயிரத்து 800 மக்களுக்கு சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு மூலம் 2 லட்சத்து 88 ஆயிரம், 2 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை . ஆனால் தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெற செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.
விவசாய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆனால் தி.மு.க . ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி 3 முறை பெட்ரோல் விலை குறைத்துள்ளார்.
ஆகையால் தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானை அதிக வாக்கு வித்தியாசத்தில் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது. மேலும் செல்லும் இடங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வருவதால் பா.ஜ.க. வெற்றி பயணத்தை நோக்கி செல்கின்றது. 10 ஆண்டு மோடி ஆட்சி மக்களின் ஆதரவுடன் இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.
- தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதிலும், முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 39 மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் களம் காண தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலூரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சிவக்கொழுந்துக்கு ஆதரவாக அதிமுக- தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர்," கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.
அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட உச்சப்பட்ட பதவியில் உட்கார முடியும். அந்த வகையில் நம்மை போன்ற சாதாரண தொண்டரை இன்றைக்கு தேமுதிக பொதுச்செயலாளர், வேட்பாளராக அறிவித்துள்ளார்.
அவருடைய சின்னம் பம்பரம் சின்னம். பம்பரம் சின்னத்திற்கு வாக்கிளியுங்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிர்வாகி ஒருவர், சின்னத்தை தவறாக கூறிவிட்டதாக சி.வி சண்முகம் காதில் எச்சரித்தார்.
தவறை சுதாரித்து கொண்ட சிவி சண்முகம், " மன்னித்துவிடங்கள். சின்னத்தை தவறாக சொல்லிவிட்டேன். டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். நீதிமன்றத்தில் ஒரு கட்சிக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. அந்த ஞாபகத்தில் கூறிவிட்டேன். நம்முடைய வேட்பாளர் முரசு சின்னத்தில் நிற்கிறார்" என்று கூறி சமாளித்தார்.
சி.வி சண்முகம் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.
- போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.
பண்ருட்டி:
பண்ருட்டி ரெயில்வே மேம்பாலத்தில்நேற்றிரவு அரசு பஸ் பழுதடைந்து நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
பண்ருட்டி பகுதி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து இருந்து பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரெனபழுதானது.
இதனை தொடர்ந்து நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் தவித்தனர்.
- கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்.
- டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
விருத்தாசலம்:
கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி கடந்த 24-ந் தேதி இரவு வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர், தனது செல்போனில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பாா்த்தபடி தனியார் பஸ்சை ஓட்டினார். அவரது அலட்சியத்தால் பஸ் விபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்திலேயே பயணிகள் பயணம் செய்தனர்.
டிரைவர் செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியதை சில பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் விருத்தாசலம் அடுத்த சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உரிய அறிவுரை கூறிய அதிகாரிகள், அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மாத காலத்திற்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறுகையில். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, செல்போனில் வேறு ஏதேனும் பார்க்கக்கூடாது என்று ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.
இதையும் மீறி யாரேனும் செல்போன் பார்த்தபடியோ அல்லது செல்போனில் பேசியபடியோ வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
- ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் கிராமம் புதிய மாரியம்மன் கோவில் தெருவை திலீப்குமார் மகன் சதீஷ்குமார் (வயது 20). புதிய காலனியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பழனி (20) புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடேசன் மகன் வெங்கடேசன்( 20).
இவர்கள் 3 பேரும் நண்பர்கள் தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக பாசார் கிராமத்திலிருந்து ராமநத்தம் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பாசார் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாசார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆவட்டி கூட்டு ரோடு பாரத் பெட்ரோலியம் பங்க் எதிரே வந்த போது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே மர்ம பொருள் வெடித்து பசுமாடு வாய் கிழிந்தது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜானகி (வயது55). இவரது 3 பசுமாடுகள் நேற்று மாலை அருகிலுள்ள ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தபோது. அப்பகுதியில் கிடந்த மர்மபொருள் ஒன்றினை மாடுகள் கவ்வியபோது அந்த மர்ம பொருள் வெடித்தது.
இதில் ஒரு பசுமாட்டின் வாய் கிழிந்தது. வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் பசு மாடு வாய் கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காட்டுப்பன்றிகள், மான் போன்ற வனவிலங்குகளை சமூகவிரோதிகள் சிலர் இதுபோல வெடி வைத்து வேட்டையாடுவதாக அப்பகுதிபொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அது வெடித்ததில் பசு மாடு வாய் கிழிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
- வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர்.
- அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.
கடலூர்:
பாராளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.
இதையொட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் நீண்ட நேரமாக வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே காத்திருந்தனர்.
இது மட்டுமின்றி தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாக்குபதிவு எந்திரத்தில் பல்வேறு சங்தேகங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்ட அறையின் பூட்ட திறக்கபட முடியாமல் இருந்து வருவதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.
- மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருத்தாசலம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம்(25), காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31), பிரபு (22) ஆகிய 3 பேரும் வடலூரில் நடைபெறும் கோழி சந்தைக்காக, கோழிகள் மற்றும் வாத்துகளை ஏற்றிக்கொண்டு காங்கேயத்திலிருந்து இரவு புறப்பட்டு வடலூர் நோக்கி மினி லாரியில் வந்து கொண்டிருந்தனர். மினி லாரியை ஞானப்பிரகாசம் ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விருத்தாசலம் அருகே கோமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மீது பலமாக மோதியது.
இதில் மினி லாரியை ஓட்டி வந்த ஞானபிரகாசம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதில் பயணம் செய்த தினேஷ், பிரபு பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தினேஷ் மற்றும் பிரபுவை சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வண்டிக்கார தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி (33) இவரது மனைவி சரண்யா( 31). இவர்கள் இங்கு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சரண்யா திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு சரண்யா இரவு காவலர் பணிக்கு சென்றுள்ளார். இவரது கணவர் மனைவிக்கு இரவு உணவு எடுத்துக்கொண்டு கொடுத்துவிட்டு இரவு மனைவியுடன் அங்கேயே தங்கி உள்ளார்.
இன்று காலை சுமார் 7 மணி அளவில் சத்தியமூர்த்தி தனது வீட்டிற்கு வந்து பார்க்கும்போது முன் பகுதியில் உள்ள பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகிலுள்ள திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த ஐந்தே முக்கால் பவுன் நகை, ,ரூ.40ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது .
அங்கு வைத்திருந்த சூட்கேசில் இருந்த 5 பவுன் நகை திருடர்களிடமிருந்து தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






