என் மலர்
சென்னை
- சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.
- மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.
சென்னை எழும்பூரில், மதிமுக சார்பில் அதன் தலைவர் வைகோ தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை நான் கேட்கவே இல்லையே. பொய்களை பரப்புவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.
கூட்டத்தின்போது அந்த ஒன்றரை மணி நேரத்தில் இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.
அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது ஜெயிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 12 தொகுதிகள் கேட்கலாம். ஆனால், அதுகூட என்னுடைய முடிவு அல்ல. தலைமைக் கழகம்தான் தீர்மாணிக்கும் என்று முதன்மைச் செயலாளர் பதில் அளித்தார்.
ஆனால், இரட்டை இலக்க மட்டும் எடுத்துக்கொண்டு செய்தியாளர்கள் மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.
8 தொகுதியில் ஜெயிச்சா தான் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அதைவிட கூடுதலாக கேட்போம் என்று பொதுக்குழுவில் கூறினோம். ஆனால், அதுகுறித்து எதுவும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
- அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.
திருபுவனம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது.
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தம்பி அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
காவல்துறை விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர்துடைப்பா?
திருட்டு புகாருக்காக தம்பி அஜித் அவர்களைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு காவல்துறை, தம்பி அஜித் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?
திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.
சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, தம்பி அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த தம்பி அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதோடு, தம்பி அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும்.
- 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.
மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் அனைவருக்கும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
மாங்காடு காமாட்சி அம்மன், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், பழனி தண்டாயுதபாணி, பெரியபாளையம் பவானி அம்மன், திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஆகிய 5 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக 2 கோவில்களில் இருந்த திட்டத்தை 13 கோவில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 3 கோடியே 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளார்கள். 19 கோவிலுக்கு ரூ.1200 கோடியில் புனரமைக்கும் பணி பெருந்திட்ட வரைவு நடந்து வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு 95 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. பக்தர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் கடவுள் முருகன் மகிழ்ச்சி பெரும் வகையில் இந்த கும்பாபிஷேகம் நடைபெறும். திருச்செந்தூர் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நாங்கள் நடத்துவோம் என்று தெரிந்துதான் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.
சீமானுக்கு மறதி அதிகம். ஏற்கனவே பழனி, மருதமலை கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளோம். சீமான் போன்றோர் உபதேசத்தால் இந்த ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது.
- நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எனக்கு தெரியாது. மேலும் எனது குடும்பத்தில் இருக்கிறவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது என கூறி இருந்தேன். ஆனால் அதையும் மீறி எனது மருமகள் அரசியலுக்கு வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை என பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை ராமதாஸ், அன்புமணி மீது வைத்தார் .
இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் பா.ம.க. சமூக ஊடகப்பேரவை ஆலோசனைக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது .அப்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது டாக்டர் ராமதாசிற்கு தெரிந்தே வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஏன் இதுபோல் பேசினார் என்று தெரியவில்லை.
கடந்த 5 வருடங்களாக அவர் அவராக இல்லை. குழந்தை போல் மாறிவிட்டார். அவரை 3 பேர் இயக்குகின்றனர். வீட்டிற்கு வந்த மருமகளை பற்றி பொது வெளியில் என்ன பேசவேண்டும் என்று ராமதாசிற்கு தெரியவில்லை என அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டை வைத்தார்.
இந்த நிலையில் இன்று பா.ம.க.சமூக ஊடகப்பேரவை ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் சமூக வலைதளங்களில் கருத்துக்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும் போது சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது. நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம். சமூக வலைதளங்களில் நளினமாகவும், நயமாகவும் பதிவிட்டு நம்மை பற்றி விமர்சனம் செய்பவர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்றார்.
ராமதாஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய அன்புமணி குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் நிலையில் நிர்வாகிகளுக்கு ராமதாஸ் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
- மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
- இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அஐமச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலில் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர், இன்று மீனவ கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன், IND-TN-10 MM 773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப்படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உடுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.
வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நமது மீனவர்கள் வாழ்வாதனம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மீன்பிடி தொடர்பான பிரச்சனைகளையும் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பரம் புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 1, 2-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 4, 5-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
- தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டபோது,''பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின் கட்டண உயர்வு தொடர்பான எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை.
- 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும்.
தமிழகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " சமூக வலைத்தளங்களில் மின் கட்டணம் தொடர்பாக வதந்தி பரவி வருகிறது.
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை.
மின் கட்டண உயர்வு தொடர்பான எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை.
100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் தொடரும்" என்றார்.
- காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
- உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
- முதலமைச்சர் உடனடியாக இவ்விஷயத்தில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.
கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
தி.மு.க. ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 27-ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.






