என் மலர்tooltip icon

    சென்னை

    • வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

    இன்று முதல் 2-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் 4-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?
    • அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அருமை ஊடகங்களே, பத்திரிகை நண்பர்களே,

    பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

    காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் "காவல்துறை அமைச்சர்" மு.க.ஸ்டாலினிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.

    1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?

    2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

    3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட SP ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?

    4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?

    5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல்துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?

    6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித்குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

    7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

    8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட அறிவாலயம் அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?

    9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்! என்று பதிவிட்டுள்ளார். 

    • காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு ‘வாட்டர் பெல்’ அடிக்கப்படும்.
    • பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். அந்த வகையில், மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக 'வாட்டர் பெல்' திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, 'வாட்டர் பெல்' திட்டத்தை உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான ஒலியில் இருந்து மாறுபட்ட ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு 'வாட்டர் பெல்' அடிக்கப்படும். பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம்.

    அதன்படி தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாட்டர் பெல் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, காலை மணிக்கு பெல் அடித்ததும் மாணவர்கள் தண்ணீர் அருந்தினர். 

    • வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
    • மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக் குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டிடங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

    எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகி உள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
    • சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது.

    மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி, நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
    • மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டு அருகில் விளையாடிய மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இருப்பினும் மாணவியை 3 மணி நேரத்துக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் காணாமல் போன மாணவி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று மாணவியை உறவினர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது.

    இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு சப்- இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை அளித்து இருப்பதாக கூறி நேற்று நள்ளிரவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு வீடியோவிலும் அதனை பதிவு செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் உறவினர்கள் சிலரை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்காக தான் நாங்கள் வந்துள்ளோம். எனவே அமைதியாக இருங்கள் என்று மாணவியின் உறவினர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாதிப்புக்குள்ளான மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மாலை 6 மணிக்கு பிறகு எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நான் மயக்கமாகி விட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

    இதனால் மயக்க ஊசி அல்லது மயக்க மருந்து செலுத்தி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சப்-இன்ஸ்பெக்டர் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் அளித்துள்ள புகாரின் உண்மை தன்மையை பொறுத்து சப்-இன்ஸ்பெக்டர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

    இதன் காரணமாக போலீஸ் விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது கைது நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நமது முதலீட்டாளர்கள் வேறு இடத்திற்கு செல்கிறார்கள்.
    • இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு தலைமை தாங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    சென்னை:

    தமிழக தொழில்துறை தோல்வியடைந்துவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டிச் செல்லத் தவறியதால், நமது தொழில்துறை இயந்திரம் செயலிழந்து போயுள்ளது. நமது தொழில்முனைவோர் காத்திருக்கிறார்கள். நமது இளைஞர்கள் இடம்பெயர்கிறார்கள். நமது முதலீட்டாளர்கள் வேறு இடத்திற்கு செல்கிறார்கள்.

    இதை மாற்ற அதிமுக உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு தலைமை தாங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதுவே சரியான நேரம் என்று கூறியுள்ளார். 



    • இந்த பஸ்களில் பாதுகாப்பு கருதி 7 சி.சி.டி.வி. கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • ரூ.47.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையையும் திறந்து வைத்தார்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இதுவரை டீசலில் இயங்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இப்போது முதல் முறையாக மின்சார பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக 1225 தாழ்தள மின்சார பஸ்களை உலக வங்கி உதவியுடன் வாங்க முடிவு செய்யப்பட்டது.

    ரூ.697 கோடி மதிப்பீட்டில் அதில் முதல் கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தம் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டது.

    இதில் 400 ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவதற்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டையில் உள்ள பணிமனைகளை புதுப்பித்து அங்கு பஸ்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான சாதனங்களும் அமைக்கப்பட்டு வந்தது.

    இப்போது வியாசர்பாடி பணிமனையில் ரூ.200.40 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களை இயக்குவதற்கான பராமரிப்பு கூடம், புதிய மின் மாற்றிகள் பொருத்துதல், அலுவலக நிர்வாக கட்டிடம், பணியாளர் அறை ஆகியவை புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    போக்குவரத்து துறை அமைச்சர் சா.கி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடிக்கு நேரில் சென்று 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்த பஸ்சில் ஏறி அதில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார். முன்னதாக அங்கு ரூ.47.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையையும் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 120 புதிய மின்சார பஸ்கள் 11 வழித்தடங்களில் முதலில் இயக்கப்பட உள்ளது.

    இந்த பஸ்களில் பாதுகாப்பு கருதி 7 சி.சி.டி.வி. கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக இருக்கைகள் உள்ளது. எதிர் எதிரே அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள், லக்கேஜ் வைப்பதற்கான இடம், அடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்புகள் வெளியிடுவதற்கான ஒலி பெருக்கிகள், அவசர காலங்களில் அலாரம் ஒலிக்கக்கூடிய பொத்தான்கள், ஒவ்வொரு இருக்கையின்கீழ் சீட் பெல்டுகள், செல்போன்களுக்கான சார்ஜர் பாயிண்டுகள், எல்.இ.டி. விளக்குகள்.

    டிரைவருக்கு மின்விசிறி வசதி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி என ஏராளமான வசதிகள் இந்த மின்சார பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீட்டர் வரை இயக்கலாம்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு டிக்கெட் வழங்குவார்கள். இந்த பஸ்களை இயக்கும் தனியார் ஒப்பந்ததாரருக்கு கி.மீ. ஒன்றுக்கு ஏ.சி.வசதி இல்லாத பஸ்களுக்கு 77 ரூபாயும், ஏ.சி. பஸ்களுக்கு 80.86 ரூபாயும் வழங்க மாநகர போக்குவரத்து கழகம் நிர்ணயம் செய்து உள்ளது.

    • முதலாமாண்டு மாணவர்கள் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.
    • நடனம், சிலம்பம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 7-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர் .முதல்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வும் நிறைவடைந்தது.

    இதனை தொடர்ந்து முதல் கட்ட கலந்தாய்வின்போது நிரம்பாத இடங்களுக்கான 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.



    இந்த நிலையில், கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.

    மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். நடனம், சிலம்பம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8,915 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    28-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440

    27-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,880

    26-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    25-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-06-2025- ஒரு கிராம் ரூ.119

    28-06-2025- ஒரு கிராம் ரூ.119

    27-06-2025- ஒரு கிராம் ரூ.120

    26-06-2025- ஒரு கிராம் ரூ.120

    25-06-2025- ஒரு கிராம் ரூ.119

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • ராஜகீழ்ப்பாக்கம், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கோமதி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (01.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    செம்பாக்கம் : ராஜகீழ்ப்பாக்கம், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கோமதி நகர், காவேரி தெரு, கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, வைகை தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு, நேதாஜி தெரு மற்றும் ஐயப்பன் நகர் 1 முதல் 7-வது தெரு வரை.

    முடிச்சூர் : சண்முகா நகர், EB காலணி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், ஏஎல்எஸ் கிரீன் லேண்ட், நேதாஜி நகர், பெரியார் நகர், லட்சுமி நகர், கும்மி அம்மன் நகர் மற்றும் கக்கன் தெரு.

    மாடம்பாக்கம் : நூதன்சேரி பிரதான சாலை, மாமூர்த்தி அம்மன் கோவில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜோ நகர், ராஜ்பரீஸ் ஆதித்யா நகர், நூத்தேன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிநாதபுரம்.

    குரோம்பேட்டை : பெரியார் நகர், பால்சன் நிறுவனம், அண்ணாசாலை, கண்ணாயிரம் தேரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, எம்ஜி ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு.

    • அஜித் அவர்களின் வீட்டிற்கு வந்து நகை இருக்கிறதா என்று சோதனை செய்து அவரது தம்பி நவீனையும் காவல்நிலையத்திற்கு சென்று அவரையும் அடித்துள்ளனர்.
    • இனிமேல் இதுபோன்ற லாக்கப் மரணங்கள் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் வெளியிட்டுள் அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் அந்த இளைஞரை கடுமையாக அடித்தே கொன்றுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அஜித்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளிகோவிலுக்கு நேற்று முன்தினம் சிவகாமி என்பவர் தனது மகளுடன் கோவிலுக்கு காரில் வந்துள்ளார், காரை கோவிலின் தற்காலிக பணியாளரான அஜித் அவர்களிடம் பார்க்கிங் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு கார் ஓட்டத் தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்ததாகவும் கோவிலுக்குச் சென்று திரும்பிய சிவகாமியும் அவரது மகளும் திரும்பவும் காரை எடுத்த போது காரில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை என்று அஜித் அவர்களிடம் கேட்டதாகவும் அதற்கு அஜித் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன் அவர்கள் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிகிறது.

    புகாரின் பேரில் காளிகோவிலின் தற்காலிக ஊழியர் அஜித் அவர்களை தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச்சென்று காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு, தங்களது வாகனத்தில் வைத்தே சுற்றியுள்ளனர். நகை மற்றும் பணத்தை தான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் சரமாரியாக ஆறு காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர். பிறகு, காளிகோவிலுக்கு பின்புறம் ஆட்டோவில் அழைத்துச்சென்று அங்கேயும் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆட்டோவிலேயே அஜித் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அஜித்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று, பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அஜித் அவர்களின் வீட்டிற்கு வந்து நகை இருக்கிறதா என்று சோதனை செய்து அவரது தம்பி நவீனையும் காவல்நிலையத்திற்கு சென்று அவரையும் அடித்துள்ளனர்.

    தற்போது அஜித் குடும்பத்தினரும், பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அஜித் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அஜித் மரணத்திற்கு காரணமாக இருந்த காவலர்கள் அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அஜித் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அஜித்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இனிமேல் இதுபோன்ற லாக்கப் மரணங்கள் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    ×