என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் 8-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்
- இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
- மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டு அருகில் விளையாடிய மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். இருப்பினும் மாணவியை 3 மணி நேரத்துக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் காணாமல் போன மாணவி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று மாணவியை உறவினர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு சப்- இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை அளித்து இருப்பதாக கூறி நேற்று நள்ளிரவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு வீடியோவிலும் அதனை பதிவு செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் உறவினர்கள் சிலரை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்காக தான் நாங்கள் வந்துள்ளோம். எனவே அமைதியாக இருங்கள் என்று மாணவியின் உறவினர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாதிப்புக்குள்ளான மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மாலை 6 மணிக்கு பிறகு எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நான் மயக்கமாகி விட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
இதனால் மயக்க ஊசி அல்லது மயக்க மருந்து செலுத்தி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சப்-இன்ஸ்பெக்டர் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் அளித்துள்ள புகாரின் உண்மை தன்மையை பொறுத்து சப்-இன்ஸ்பெக்டர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இதன் காரணமாக போலீஸ் விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது கைது நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






