என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம்
- பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 27-ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் ஒரு தனிப்படை போலீசார், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படை போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.






