என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவிட வேண்டாம்- நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு
- சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது.
- நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிருபர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
குறிப்பாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எனக்கு தெரியாது. மேலும் எனது குடும்பத்தில் இருக்கிறவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது என கூறி இருந்தேன். ஆனால் அதையும் மீறி எனது மருமகள் அரசியலுக்கு வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை என பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளை ராமதாஸ், அன்புமணி மீது வைத்தார் .
இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் பா.ம.க. சமூக ஊடகப்பேரவை ஆலோசனைக் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது .அப்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது டாக்டர் ராமதாசிற்கு தெரிந்தே வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஏன் இதுபோல் பேசினார் என்று தெரியவில்லை.
கடந்த 5 வருடங்களாக அவர் அவராக இல்லை. குழந்தை போல் மாறிவிட்டார். அவரை 3 பேர் இயக்குகின்றனர். வீட்டிற்கு வந்த மருமகளை பற்றி பொது வெளியில் என்ன பேசவேண்டும் என்று ராமதாசிற்கு தெரியவில்லை என அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டை வைத்தார்.
இந்த நிலையில் இன்று பா.ம.க.சமூக ஊடகப்பேரவை ஆலோசனை கூட்டம் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் சமூக வலைதளங்களில் கருத்துக்களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும் போது சமூக ஊடகங்களில் யாரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யக்கூடாது. நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம். சமூக வலைதளங்களில் நளினமாகவும், நயமாகவும் பதிவிட்டு நம்மை பற்றி விமர்சனம் செய்பவர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்றார்.
ராமதாஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய அன்புமணி குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் நிலையில் நிர்வாகிகளுக்கு ராமதாஸ் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.






