என் மலர்
சென்னை
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
- உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாகை மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நாகை நடத்தக்கூடாது என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தெற்கு ரெயில்வேயில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளை பயன்படுத்தும் வசதி ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, தலையணை-ரூ.30, பெட்ஷீட்-20 பெறலாம் எனவும், ரூ.50 கொடுத்து உறையுடன் கூடிய தலையணை, பெட்ஷீட் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரெயில்வேயில் முதற்கட்டமாக 10 ரெயில்களில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி, மங்களூர், மன்னார்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திருவனந்தபுரம் விரைவு ரெயில்களில் வரும் ஜனவரி 1ம் தேத முதல் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
- விடியா திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கோவையில் செம்மொழிப் பூங்கா அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவையில் அவசர கதியில் வெற்று விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா விடியா திமுக-
25.11.2025 அன்று கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட திரு. ஸ்டாலின் காந்திபுரம், சிறைச்சாலை மைதான வளாகத்தில் ரூ.204 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த செம்மொழி பூங்காவை பணிகள் முழுமையாக முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார். சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு சுற்றுச்சுழல் அனுமதி பெறப்படவில்லை.
முடிவடையாத பணிகள் :
* 30ரூ மரங்கள் நடப்படவில்லை.
* செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
* முன் நுழைவு வாயில் முகப்பு
* மாநாட்டு மையம் - தரைத் தளம்
* சுற்றுச் சுவர்
* கட்டண விளையாட்டு மைதானம்
* திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம்
* போதுமான கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.
* விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவில்லை.
* கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் முழுமையடையவில்லை.
கோவை மாநகராட்சியில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை; ஏற்கெனவே இருக்கும் பூங்காக்கள் சரிவர
பராமரிக்கப்படுவதில்லை என்று மக்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தும்; ஏற்கெனவே அளித்த நிர்வாக
அனுமதியைக் காட்டிலும் 40 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டும், முழுமை பெறாத இந்தப் பூங்காவை அவசர
அவசரமாகத் திறந்தது ஏன்? மேலும், பல பணிகள் ஒப்பந்தப் புள்ளி கோரப்படாமல், நாமினேஷன் முறையில் விடியா
திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிய வருகிறது.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் (ஸ்மார்ட் சிட்டி) கோவை மாநகராட்சிப் பகுதியில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட, கோவை மக்களின் பொழுதுபோக்கு இடங்களாகத் திகழ்ந்த; பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த பூங்காக்களான உக்கடம்-
பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம் ஆகியவை தற்போது ஆகாயத் தாமரைகள் படர்ந்து, போதிய பராமரிப்பின்றி கேட்பாரற்று உள்ளது. எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பூங்காக்கள், குளங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் உள்ளது.
விடியா திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கோவை மாவட்ட
மக்களையும், தொழில் துறையினரின் கோரிக்கைகளையும் விடியா திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.
அவற்றில் ஒருசில-
* அத்திக்கடவு–அவிநாசி திட்டம் I-ல் விடுபட்ட பகுதிகளை இணைத்து அம்மாவின் அரசு அறிவித்த அத்திக்கடவு–அவிநாசி திட்டம்-Iஐ பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
* கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 61.62 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 168 கோடி மதிப்பில் 'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்' அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, 50ரூ பணிகள் முடிவடைந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விடியா திமுக அரசு இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது.
* அதேபோன்று, கோவை மாநகராட்சியில் சுமார் 200 உட்புற சாலைகள் உட்பட முக்கிய அடிப்படைக் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டது.
* கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால்
பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
* கோவை மாவட்ட வளர்ச்சிக்கு நாங்கள் திட்டமிட்ட, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை சரியான முறையில்
முன்மொழிவு அனுப்பாத காரணத்தால் இத்திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது.
* அம்மாவின் அரசு கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்தையும் விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
இப்படி விடியா திமுக அரசு, அம்மாவின் அரசு கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்டுவிட்டது. இந்நிலையில்,
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அரசு சக்கரத்தை சுழற்றும் குணம் கொண்ட மு.க. ஸ்டாலின், அரைகுறையாக இந்தப்
பூங்காவை திறந்து வைத்து கோவை மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார்.
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசிற்கு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,
கோவை மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்ய வாய்ப்பு.
- மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.
டிட்வா புயல் காரணமாக அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
16 #SDRF படைகளும் 12 #NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்!
பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தொடங்கியது.
- போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ்.
சாலை வரி பிரச்சனை தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், 18 நாட்களுக்கு பிறகு மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதிமொழியை அடுத்து ஸ்டிரைக் வாபஸ் பெற்றுள்ளதாக ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
- இந்த மாநிலத்தில் தீவிரவாதமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை.
- பா.ஜ.க. நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாதுகாப்பற்ற மாநிலம் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறி வருகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி ஆளுநர் தான்.
இந்த மாநிலத்தில் தீவிரவாதமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை. தீவிரவாதம் வந்துவிடாதா என்று விரும்புகிறார் ஆளுநர் என்று கூறினார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. அரசின் கீழ் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியதற்காக, தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி "தீவிரவாதி" என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.
2022-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த கொடூரமான தற்கொலை குண்டுவெடிப்பை அப்பாவு மறந்துவிட்டாரா?
பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா?
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய தீவிரவாத அமைப்புகளின் மீதான ஒடுக்குமுறை குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) வெளியிட்ட செய்திகளை அவர் எப்போதாவது சரிபார்த்தாரா?
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யத் தவறியதால் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டு வரும் வேளையில், 1998 கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷாவுக்கு, அதிர்ச்சியூட்டும் வகையில் தியாகியைப் போன்ற பிரியாவிடை அளிக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முழுமையாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிட்வா புயலை எதிர்கொள்வதற்காக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
- பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க.வினர் களத்தில் துணையாக நிற்க வேண்டும்.
டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவிடுமாறு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
* டிட்வா புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
* டிட்வா புயலை எதிர்கொள்வதற்காக அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
* தி.மு.க.வினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் உதவிட வேண்டும்.
* டிட்வா புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்.
* பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க.வினர் களத்தில் துணையாக நிற்க வேண்டும்.
* பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கித்தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
- செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர்.
சென்னை:
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புலிக்கு வாலாக இருக்கலாம், எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என செங்கேட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. செங்கோட்டையனுக்கு பிறகு நானும் த.வெ.க.வில் இணைவதாக சொல்கின்றனர். மூச்சு உள்ள வரை அ.தி.மு.க.வில் தான் இருப்பேன் என்று ஜெயக்குமார் கூறினார்.
- கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
- பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?
அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தினமும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே, செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தையும் பார்க்கும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் எழக் கூடிய கேள்வி ஒன்றுதான்,
பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா?
எங்கே இருக்கிறது சட்டம் - ஒழுங்கு?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.
- தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையம் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று விமான நிலைய இயக்குனர் ராஜ கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்ட சேர்மன் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் உட்பட விமான நிலைய அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை விமான நிலையத்திற்குள் தற்பொழுது பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் விமான பயணம் செய்யும் பயணிகள் மிக எளிதாக விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய இருப்பிடங்களுக்கு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் இயக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது உறுதி.
விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலைய முனையம் வருவதற்கு ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஆகிறது என்று பல பயணிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவாதித்தோம். அந்த நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தற்போது மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் உள்ள பகுதியைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பொழிச்சலூர், அனகாபுத்தூர் போன்ற இடங்களை கையகப்படுத்தும் பணி இல்லை. சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுகிறது.
அதற்காக சுமார் 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 2000 ஏக்கர் அரசு நிலம். 3700 ஏக்கர் தனியார் நிலம். தனியார் இடமிருந்து சுமார் 1300 ஏக்கர் தற்பொழுது வாங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது குறித்து கேட்டறிந்தோம். இனிவரும் காலங்களில் தமிழில் முறையாக அறிவிப்பு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.
- சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தற்போது நீதிபதி நியமனத்துக்காக சென்னை உயர்நீதிமன்றக் கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ள பட்டியலில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற கொலேஜியத்தின் பரிசீலனையில் உள்ளவர்களில் ஏழு பேர் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வழக்கறிஞர்களாகவும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
தகுதி அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது சாதி மத அரசியல் சார்பு அடிப்படையிலேயே இருக்கிறது. சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.
தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஆதி திராவிடர் மற்றும் இதுவரை நீதிபதி நியமனங்களில் இடம்பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சமூக நீதிக்கு எதிராகத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனம் செய்வதை கொலேஜியம் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






