என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்று நடைபெற உள்ள பேரணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை :
பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெற உள்ள பேரணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றங்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.
* அண்ணா சிலையிலிருந்து வரும் மாநகரப் பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு - ஜிபி சாலை - டவர் கிளாக் - ஜிஆர்எச் பாயிண்ட் -ராயப்பேட்டை நெடுஞ்சாலை - லாயிட்ஸ் சாலை - ஜம்புலிங்கம் தெரு - ஆர்.கே.சாலை - வி.எம்.தெரு, மந்தைவெளி - மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷை அடையலாம்.
* கிரீன்வேஸ் பாயின்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை, டிடிகே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். மேலும், வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
- மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1500 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நாம் ரஷியா-உக்ரைன் போல் எல்லையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை.
- பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.
தூத்துக்குடி:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இன்று, நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களைதான் நாம் அழிக்கின்றோம். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள மக்கள் மீது போர் தொடுத்து நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவை பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம்.
இந்தியாவில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து வரும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான போரை நமது அரசு தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இந்திய அரசுக்கும், எல்லையோர மக்களுக்கும் துணை நிற்க வேண்டும்.
2016-ம் ஆண்டு பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினார்கள். அதனைப் பார்வையிட பாகிஸ்தான் ராணுவத்தினரை அழைத்து வந்தோம். திரும்பிச் சென்றவர்கள் நமது நாட்டை அவமானப்படுத்தினர். அதே ஆண்டு, உரி பகுதியில் ராணுவ முகாமில் 23 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். 2019-ல் புல்வாமா தாக்குதலில் 46 பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
தற்போது 2025-ம் ஆண்டு பஹல்காமில் 25 இந்தியர்கள், ஒரு நேபாளி உட்பட 26 பேரை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். அதில் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று பார்த்து படுகொலை செய்துள்ளனர். ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வந்திருக்கிறது.
நமது நாட்டு கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ராணுவம் இல்லை. ராணுவ கட்டுப்பாட்டில் தான் அந்த அரசு இருக்கிறது. இந்த தாக்குதல் இன்று, நாளை முடிய போவது இல்லை. அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகின்றோம்.
நாம் ரஷியா-உக்ரைன் போல் எல்லையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக நடத்துகின்றோம். நாம் பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறோம். பாகிஸ்தான் நலிவடைந்த நிலையில் இருக்கிறது. 12-க்கு 1 என்ற அளவில் இருந்து வருகிறது.
நாம் நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்க முடியும்.
பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். போர் இன்று, நாளை முடியாது. இதற்கு மேல் நாம் போக தான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும்.
இந்திய அரசுக்கு, ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் பேரணி வரவேற்கத்தக்கது. இதுபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூரின், ராணுவத்திற்கும், இந்திய அரசுக்கும் ஆதரவான பேச்சு மிக மிக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. தமிழக அரசின் 4 ஆண்டு ஆட்சி சாதனை என்பது சாதனையா? வேதனையா? என்பதை பின்னர் பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை அமைத்து விளை பொருட்களான தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளிலும், பொள்ளாச்சி ரோட்டிலும் விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலை யோரங்களில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தையில் வியாபாரம் பாதித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நேற்று காய்கறிகளை தரையில் கொட்டி புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை தாராபுரம் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் நகராட்சி ஊழியர்கள் உழவர்சந்தை அருகே உள்ள சாலையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர காய்கறி கடைகளை அப்புறப்படுத்தினர்.
- இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் தர்ப்பகராஜ் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
- வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இதனிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப்பதற்ற சூழல் நிலவுவதன் காரணமாக, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் 3-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-05-2025- ஒரு கிராம் ரூ.110
08-05-2025- ஒரு கிராம் ரூ.110
07-05-2025- ஒரு கிராம் ரூ.111
06-05-2025- ஒரு கிராம் ரூ.111
05-05-2025- ஒரு கிராம் ரூ.108
- இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.
- தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.
சென்னை:
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.
இந்த பேரணி இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது.
- இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
- சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும்.
திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, நெல்லை நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், " சிறுபான்மையினருக்கு உரிமைகள் தருவதில் திமுக முதலிடம். நானும், திமுகவும் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படுகிறோம்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமின்றி, உரிமைகளை வழங்குவதிலும் முதலிடம் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை காப்போம் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக" என்றார்.
- போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
- புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார்.
அதன்படி, புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய போப்-ஆக தேர்வான 14ம் லியோவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு புனித போப் 14ம் லியோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய அவரது செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
- நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனிடையே நாடு முழுவதும் முக்கிய இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்திட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் அறிவித்தது.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், வட சென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.
இதேபோல், நாளை(சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்தவிதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்து கொள்வதற்கான ஒத்திகை ஆகும்.
மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இயங்கும். இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போர் பதற்றம் நிலவுவதால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ், வி.ஆர். மால், ஸ்பென்சர் பிளாசா, விஜயா மால் உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்ற சூழல் எதிரொலியால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மால்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.
- புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15ம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.






