என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
    • மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்த அன்னையர்.

    சென்னை:

    அன்னையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கூறியுள்ளதாவது:-

    மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார். 



    • அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!
    • தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

    சென்னை:

    அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!

    அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்!

    தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    • தீவிபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீவிபத்து ஏற்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. பல மணி நேரமாக பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    3 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வரும் நிலையில் மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தீவிபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

    • இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
    • புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்சுகளும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதேபோல, மாநாட்டு திடலுக்கு வருபவர்களின் வசதிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் முழு கட்டுப்பாடுடன், போலீசாரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அமைதியான முறையில் வாகனத்தில் வர வேண்டும். அதேபோல், மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் அமைதியான முறையில் ஊர் திரும்ப வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

    இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்படும். பின்னர், மாலை 6.10 மணியளவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டு திடலுக்கு வருகிறார். அப்போது, மேடையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து, வன்னியர் சங்க கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றி வைக்கிறார். பின்னர், டாக்டர் ராமதாஸ் குறித்த வரலாற்று குறும்படமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    மாநாட்டில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மதுவிலக்கு உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்தப்பட இருக்கிறது. பின்னர், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மாநாட்டின் நிறைவாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
    • மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

    சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

    பிறகு கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

    நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

    இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    அதன்படி, கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.
    • சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக அறிவித்தன.

    இதற்கிடையே, இந்தியப் படைகளுக்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றனர்.

    இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது.

    அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவில் ஒற்றை யானை நடமாடி வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை காரணமாகவும், வெயிலின் தாக்கம் காரணமாகவும் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்துவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் அந்தியூர், வெள்ளித் திருப்பூர் அருகே மோத்தங்கல்புதூர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. விவசாயிகள் விரட்ட முயன்றால் துரத்தி தாக்க முயல்கிறது.

    இது தவிர தோட்டத்து பகுதியில் வீட்டை சுற்றி வளர்க்கப்படும் வாழை மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சென்னம்பட்டி வன ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நீண்ட போராட்டத்துக்கு பிறகு பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த 10 நாட்களில் அய்யன் தோட்டத்தை சேர்ந்த ராஜா, சோமு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வாழை, எலுமிச்சை மற்றும் கரும்பை ஒற்றை யானை தின்று சேதப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-, கடந்த 10 நாட்களுக்கு மேலாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை யானை கிராமத்துக்குள் புகுந்து தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை. எலுமிச்சம்பழம் போன்றவற்றை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    நாங்கள் பட்டாசுகளை கொண்டு விரட்டினாலும் வனப்பகுதிக்குள் செல்லும் யானை மீண்டும் சிறிது நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் தூக்கத்தை இழந்தும் நிம்மதியை இழந்தும் தவிக்கின்றனர். எனவே வனத்துறையினர் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
    • பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழலில், இந்தியப் படைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பேரணி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
    • பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

    அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.

    இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை நடைபெறுகிறது.

    இந்தப் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றுள்ளனர்.

    பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன.

    அவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.

    எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

    அனைத்து மாவட்ட கிடங்குகளிலும் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

    இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

    • இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.

    சென்னை:

    சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது 1256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது

    அதன்படி மாதிரி மருத்துவ முகாம் இன்று நடந்தது. அதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார். அதன்பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.

    இந்த மாதம் முதல் ஜனவரி 2026 வரை திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் ஈ.சி.ஜி. இதய சுருள் அறிக்கை, எக்கோகார்டியோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் சோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
    • கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத் துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

    133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ×