என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சாலை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன.
    • வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வ தும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்த சோதனை சாவடி அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

    சாலை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாங்க ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது. கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது பண்ணாரி அம்மன் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.

    • சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.
    • கனமழையை தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாகவும், விட்டு விட்டும் மழை பெய்தவாறு இருந்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டனர். மேலும் இரவில் புழுக்கம் காரணமாக தூக்கத்தை இழந்தனர்.

    இந்த நிலையில், நேற்றும் கடும் வெயில் வீசியது. பின்னர், மாலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதை தொடர்ந்து மாலையில் லேசாக தூற தொடங்கி, சிறிது நேரத்தில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது.

    மேலும், ஓசூர்-பாகலூர் சாலை, ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், ஓசூர் பஸ் நிலையம், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    கனமழையை தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாகவும், விட்டு விட்டும் மழை பெய்தவாறு இருந்தது. பலத்த மழை பெய்ததை அடுத்து இரவில் குளுகுளு காற்று வீசியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்து நிம்மதியாக உறங்கினர். ஓசூரில் நேற்று பெய்த மழையின் அளவு 18 மி.மீ ஆகும்.

    • 3-வது மலைக்கு வந்தபோது, திடீரென விஷ்வா மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
    • வனத்துறையினர் விரைந்து வந்து, மலையில் மயங்கிய நிலையில் கிடந்த விஷ்வாவை டோலி கட்டி தூக்கி கொண்டு கீழே வந்தனர்.

    பேரூர்:

    திண்டுக்கல் மாவட்டம் சிலுவாதுர் கம்பராம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஷ்வா(வயது15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.

    நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் முருகன் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முருகன் தனது மகன் விஷ்வா மற்றும் உறவினர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு புறப்பட்டார்.

    மாலையில் கோவைக்கு வந்த அவர்கள், இரவில் பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு, முருகன், விஷ்வா, அவர்களது உறவினர்கள் வெள்ளியங்கிரி மலையேறினர்.

    7 மலையேறி அங்குள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்தனர். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணியளவில் விஷ்வா, தனது தந்தை முருகனுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    3-வது மலைக்கு வந்தபோது, திடீரென விஷ்வா மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியான முருகன் மற்றும் அவரது உறவினர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    வனத்துறையினர் விரைந்து வந்து, மலையில் மயங்கிய நிலையில் கிடந்த விஷ்வாவை டோலி கட்டி தூக்கி கொண்டு கீழே வந்தனர்.

    அங்கு வைத்து அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதையறிந்த விஷ்வாவின் தந்தை முருகன் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.
    • வெள்ளி விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்ந்து அதிகரித்து, மே 5-ந்தேதி சவரன் ரூ.71 ஆயிரத்து 200-க்கும், மே 6-ந்தேதி சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. மே 8-ந்தேதி, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன்பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 45-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுகிழமை) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது.

    இதற்கிடையே தங்கத்தின் விலை நேற்று மேலும் சரிந்தது. நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.165-ம், ஒரு சவரன் ரூ.1,320-ம் குறைந்து முறையே, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 880-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.

    திடீரென, மாலையிலும் தங்கம் விலை 2-வது முறையாக குறைந்தது. காலை நேர விற்பனையை காட்டிலும் மாலையில் கிராம் ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்தது. நேற்று, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில், கிராமுக்கு ரூ.265-ம், சவரனுக்கு ரூ.2,360-ம் தங்கம் விலை குறைந்தது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,765-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,120-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,000

    11-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    10-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,360

    09-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-05-2025- ஒரு கிராம் ரூ.110

    11-05-2025- ஒரு கிராம் ரூ.110

    10-05-2025- ஒரு கிராம் ரூ.110

    09-05-2025- ஒரு கிராம் ரூ.110

    08-05-2025- ஒரு கிராம் ரூ.110

    • திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சாமிநாதன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சாமிநாதன் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக பலத்த சேதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • வழிகாட்டுதல்கள் தலைமையிலிருந்து தொடர்ந்து வழங்கப்படும்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உலக அமைதிக்கு எதிராகச் செயல்பட்டும் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடாரமாகவும் அடைக்கல பூமியாகவும், தொடர்ந்து ஊக்கமளித்த பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு இறுதி முடிவுகட்டும்வகையில் நம் இந்தியா தேசம் தீவிரத்தாக்குதல் நடத்தியுள்ளது.

    கோழைகளைப் போல ராணுவ உடையில் வந்தது. அப்பாவிப் பொதுமக்களை பஹல்காமில் கொன்ற கொலைகார்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானின் தீவிரவாத பயிற்சிக்கூடங்களுக்கும். பாதுகாப்பு மையங்களுக்கும். நமது ஆயுதப்படைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக பலத்த சேதங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    வீரத்துடனும், விவேகத்துடனும் வித்தகத்துடனும் வேகத்துடனும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய நமது ஆயுதப்படைகளையும் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதியான தலைமையையும் சிறப்பிக்கும் வகையில் அடுத்த சில நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்திட செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த யாத்திரைகள் நாட்டிற்காக நாட்டு மக்களால் நான்கு கட்டங்களாக நடைபெறும்.

    1. மாநிலத் தலைநகரம் சென்னையில் மே 14-ஆம் தேதியும்

    2. இதர முக்கிய நகரங்களில் மே 15ஆம் தேதியும்

    3. மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16 மற்றும் 17-ஆம் தேதியும்

    4. சட்டசபைத் தொகுதிகள் தாலுகாவின் ஊர்கள் பெரிய கிராமங்கள் ஆகிய இடங்களில் மே 18 முதல் 23-ஆம் தேதி வரையும் நம் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான வழிகாட்டுதல்கள் தலைமையிலிருந்து தொடர்ந்து வழங்கப்படும். நம் வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் நம் நாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் தயவுசெய்து பெருந்திரளாக பொதுமக்கள் கூடி நம் நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் பெரிய அளவில் யாத்திரைகளை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். 

    • மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
    • கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது.

    கோவை:

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

    சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திரு நாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

    மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

    அதன்படி இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக அவர்கள் சேலம் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது. கைதானவர்களுக்கு எந்த மாதிரியான தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் இதுவரையிலும் ஜாமின் வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்று நேரில் ஆஜர்படுத்தப்படுவதை ஒட்டி கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது.
    • வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.

    பா.ம.க. சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் சமூகநீதி மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் உருவாக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வெற்றிகரமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது தான் புதிய மைல்கல் ஆகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வானிலிருந்து பார்த்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒருபுறத்தில் ததும்பி வழிந்து கொண்டிருந்த மனிதக்கடலுடன் ஒப்பிட்டால் வங்கக் கடலே சிறுத்துப் போனதைப் போன்று மாநாட்டுத் திடலில் பாட்டாளி சொந்தங்கள் குவிந்திருந்தனர்.

    15 லட்சத்துக்கும் கூடுதலான பாட்டாளி சொந்தங்கள் மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த நிலையில், நெரிசல் காரணமாக மாமல்லபுரத்தை நெருங்க முடியாமல் செங்கல்பட்டுக்கு அப்பாலும் பல்லாயிரக்கணக்கான ஊர்திகள் அணிவகுத்துக் காத்திருந்தன. லட்சக் கணக்கில் தொண்டர்கள் திரண்டிருந்தாலும் கூட எந்தவொரு இடத்திலும் சிறு ஒழுங்குமீறல்கள் கூட நடைபெறவில்லை.

    இராணுவத்தையே விஞ்சும் அளவுக்கு பாட்டாளி சொந்தங்கள் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் மாநாட்டிற்கு வந்து, பத்திரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றிருப்பது மாநாட்டுக்குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கு மிகுந்த பெருமையும், நிம்மதியும் அளிக்கிறது.

    மாமல்லபுரம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும், மாநாட்டுக் குழுத் தலைவராக என்னை நியமித்ததற்காகவும், மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்ததற்காகவும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாட்டாளி சொந்தங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மிகக் கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிராமம் என அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், குறிப்பாக மாவட்ட செயலாளர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    களத்தில் மாநாட்டுப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து, கடந்த 20 நாள்களாக இரவு, பகல் பாராமல் உழைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    அவருக்குத் துணையாக களத்தில் நின்று பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், சேலம் கார்த்தி மற்றும் வைத்தி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை உள்ளிட்ட அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் கொல்லு ரவீந்திரா, வன்னியகுல ஷத்திரிய கார்ப்பரேசனின் தலைவர் சி.ஆர்.இராஜன், கர்நாடகத்திலிருந்து பங்கேற்ற முன்னாள், இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மராட்டியம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்தும், மலேஷியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து பங்கேற்ற அனைத்து சொந்தங்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அலை அலையாய் திரண்டு வந்து மாநாட்டைச் சிறப்பித்த பாட்டாளி சொந்தங்களுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள்.

    மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டின் முதன்மை நோக்கம் சமூகநீதி தான். அதை வலியுறுத்தி தான் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்;

    அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; அதேபோன்று அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 2% உயர்த்த வேண்டும்; இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறையை அகற்ற வேண்டும்;

    மேலும் தனியார் துறை மற்றும் உயர்நீதித் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; அனைத்து சமூகங்களுக்கும் நிதி அதிகாரம் கொண்ட வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்;

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; வளர்ச்சிக் குறியீடுகளில் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

    தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கான முழக்கங்கள் இந்த மாநாட்டில் எழுப்பப்பட்டுள்ளன.

    ஏழரை கோடி மக்களின் இந்த உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொண்டு அதனடிப்படையில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த ஆணையிட வேண்டும்.

    அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதுடன், வன்னியர்களுக்கும், மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

    பட்டியலின மக்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் 2% உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    அதேபோல், கல்வி, வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு மற்றும் கிரீமிலேயரை அகற்றுதல், தனியார்துறை மற்றும் உயர்நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது.
    • விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுகு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்

    அந்த வகையில், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு சுமார் 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை டெண்டர் கோரியுள்ளது.

    டெண்டர் இறுதியானதும் ஜூலை மாத இறுதியில் வேட்டி,சேலை உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    • விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிகிறது.
    • கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.

    இரவில் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் வெளியேறும் யானையால் விவசாயிகளும், மோத்தங்கபுதுார் மக்களும் அச்சத்தில் உள்ளனர். தோட்டப்பகுதிகளில் புகுந்த யானை வாழை, கரும்பு பயிர்களை நாசம் செய்தது. அங்கிருந்த வீட்டை ஒட்டி இருந்த வாழை மரங்களை முறித்து தின்று விவசாயிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு சென்ற சென்னம்பட்டி வனத்துறையினர், யானையை காட்டுக்குள் துரத்தினர். ஆனால் அந்த யானை மீண்டும் மீண்டும் அடுத்த அடுத்த நாட்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனச்சரகர் ராஜா தலைமையில் வனப்பணியாளர்கள் டிரோன் கேமாரவை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை. இதுகுறித்து வனச்சரகர் ராஜா கூறியதாவது;- எண்ணமங்கலம், கோவிலூர், மணல்காடு, மோத்தங்கபுதுார் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்துக்குள் ஒற்றை யானை நடமாட்டம் இருக்கிறது. பலமுறை விரட்டியும் தொடர்ந்து யானை வெளியேறுவதை தடுக்க முடிய வில்லை.

    டிரோன் கேமராவை பயன்படுத்தி யானை நடமாட்டத்தை கண்டறிந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையை விரட்டும் வரை, இரவு நேரத்தில் வனப்பகுதி ஒட்டிய இடங்களிலும், பகலில் வனப் பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னம்பட்டி வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • ஒரத்தநாடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சாக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை 13ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கும்பகோணம் நகரம் தவிர உமாமகேஸ்வரபுரம், கோசிமணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அரியத்திடல், அண்ணலக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி, திருநீலக்குடி, எஸ்.புதூர், அவணியாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ஒரத்தநாடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காைல 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரத்தநாடு, கண்ணந்தன்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிக்காடு, தென்னமநாடு, பருத்திகோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோயிலூர், ஆயங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

    • திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி ராதா, சித்திரை திருவிழாயை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை காண தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். பின்னர் அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது வழியில் ரவி தியேட்டர் எதிரே அமைக்கப்பட்ட அன்னதான கூடத்தில் அன்னதானம் வாங்கினார். அதே சமயம் ராதா கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் நகையை 'மர்ம' நபர்கள் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் நைசாக பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். என்ன நடந்தது என்று நினைவு திரும்புவதற்குள் அவர்கள் மின்னலாய் மறைந்தனர்.

    முன்னதாக சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் பகுதி மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் கும்பல் பக்தர்களோடு பக்தர்களாக கூட்டத்தில் கலந்து நைசாக நகைகளை திருடி சென்று விடுகிறார்கள்.

    அதேபோல் தான் நகையை பறிகொடுத்த ராதா கழுத்து நிறைய நகைகள் அணிந்திருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அன்னதானம் வாங்கும் ஆர்வத்தில் ராதா இருந்தபோது பின்னால் இருந்து நகைகளை பறித்து சென்றுவிட்டனர். நேற்று மாலை முதல் விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி சென்றதால் நகை திருடர்களால் கைவரிசை காட்ட முடியவில்லை. இதனால் இன்று அதிகாலை நேரத்தை பயன்படுத்தி திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து ராதா கூறுகையில், நான் அதிகாலை 5 மணியளவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்த போது ரவி தியேட்டர் எதிரே அன்னதானம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் எப்படி திருடி சென்றார்கள் என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எனவே எனது தங்கச் சங்கிலியை போலீசார் மீட்டு தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    ×