என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெள்ளியங்கிரி மலையேறிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
    X

    உயிரிழந்த மாணவர் விஷ்வா.

    வெள்ளியங்கிரி மலையேறிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    • 3-வது மலைக்கு வந்தபோது, திடீரென விஷ்வா மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
    • வனத்துறையினர் விரைந்து வந்து, மலையில் மயங்கிய நிலையில் கிடந்த விஷ்வாவை டோலி கட்டி தூக்கி கொண்டு கீழே வந்தனர்.

    பேரூர்:

    திண்டுக்கல் மாவட்டம் சிலுவாதுர் கம்பராம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஷ்வா(வயது15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.

    நேற்று சித்ரா பவுர்ணமி என்பதால் முருகன் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முருகன் தனது மகன் விஷ்வா மற்றும் உறவினர்களுடன் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு புறப்பட்டார்.

    மாலையில் கோவைக்கு வந்த அவர்கள், இரவில் பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு, முருகன், விஷ்வா, அவர்களது உறவினர்கள் வெள்ளியங்கிரி மலையேறினர்.

    7 மலையேறி அங்குள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்தனர். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணியளவில் விஷ்வா, தனது தந்தை முருகனுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    3-வது மலைக்கு வந்தபோது, திடீரென விஷ்வா மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியான முருகன் மற்றும் அவரது உறவினர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    வனத்துறையினர் விரைந்து வந்து, மலையில் மயங்கிய நிலையில் கிடந்த விஷ்வாவை டோலி கட்டி தூக்கி கொண்டு கீழே வந்தனர்.

    அங்கு வைத்து அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதையறிந்த விஷ்வாவின் தந்தை முருகன் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×