பரமக்குடியில் சித்திரை திருவிழாவை காண சென்ற பெண்ணிடம் 31 பவுன் நகை பறிப்பு

திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
 நகை பறிப்பு சம்பவம் அரங்கேறிய அன்னதானம் நடைபெற்ற பகுதி
நகை பறிப்பு சம்பவம் அரங்கேறிய அன்னதானம் நடைபெற்ற பகுதி
Published on

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி ராதா, சித்திரை திருவிழாயை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை காண தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். பின்னர் அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது வழியில் ரவி தியேட்டர் எதிரே அமைக்கப்பட்ட அன்னதான கூடத்தில் அன்னதானம் வாங்கினார். அதே சமயம் ராதா கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் நகையை 'மர்ம' நபர்கள் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் நைசாக பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். என்ன நடந்தது என்று நினைவு திரும்புவதற்குள் அவர்கள் மின்னலாய் மறைந்தனர்.

முன்னதாக சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் பகுதி மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் கும்பல் பக்தர்களோடு பக்தர்களாக கூட்டத்தில் கலந்து நைசாக நகைகளை திருடி சென்று விடுகிறார்கள்.

அதேபோல் தான் நகையை பறிகொடுத்த ராதா கழுத்து நிறைய நகைகள் அணிந்திருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அன்னதானம் வாங்கும் ஆர்வத்தில் ராதா இருந்தபோது பின்னால் இருந்து நகைகளை பறித்து சென்றுவிட்டனர். நேற்று மாலை முதல் விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி சென்றதால் நகை திருடர்களால் கைவரிசை காட்ட முடியவில்லை. இதனால் இன்று அதிகாலை நேரத்தை பயன்படுத்தி திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து ராதா கூறுகையில், நான் அதிகாலை 5 மணியளவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்த போது ரவி தியேட்டர் எதிரே அன்னதானம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் எப்படி திருடி சென்றார்கள் என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எனவே எனது தங்கச் சங்கிலியை போலீசார் மீட்டு தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com