என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
    X

    தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

    • மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
    • கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது.

    கோவை:

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

    சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திரு நாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

    மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

    அதன்படி இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக அவர்கள் சேலம் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வர உள்ளது. கைதானவர்களுக்கு எந்த மாதிரியான தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் இதுவரையிலும் ஜாமின் வழங்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்று நேரில் ஆஜர்படுத்தப்படுவதை ஒட்டி கோவை கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×