என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்புள்ளதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
    • வீட்டைசீல் வைக்க எங்கிருந்து அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    சென்னை:

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, மே 16-ம் தேதி திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன்பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

    அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் இருவரிடமும் எதன் அடிப்படையில் விசாரணை நடத்த முடிவுசெய்யப்பட்டது என்ற விபரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார்.

    அதை ஆய்வுசெய்த நீதிபதிகள், 'எங்கள் முன் தாக்கல் செய்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்து, முறைகேடில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

    வீட்டைசீல் வைக்க எங்கிருந்து அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதிகள் பார்த்தனர்.

    அதன்பின், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. வாதத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மதிய உண்வுக்கு மேல் ஒத்திவைத்தனர்.

    • நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தருமபுரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி நில வரப்படி நீர்வரத்து 7 ஆயி ரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நேற்று ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனைப் போல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவர் கடந்த 2019-ம் ஆண்டு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த மே மாதம் 31-ந் தேதி திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.

    இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பாமக எம்.எம்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
    • பாமக கௌரவத் தலைவரும் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ளட்ளார். இந்த நிலையில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பாமக தலைவர் அன்புமணி நாளை நாளை சேலம் மற்றும் தருமபுரி செல்ல இருக்கும் நிலையில் இரு தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை தீர்த்து வைக்க ஜி.கே. மணி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. களம் காண்கிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க. நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அந்தக் கட்சி விரும்புகிறது. குறிப்பாக அ.தி.மு.க. கூட்டணியில் 50 தொகுதிகளை பெறுவதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    இந்த 50 இடங்களில் சுமார் 40 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மீதமுள்ள 10 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு என பிரித்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த 50 இடங்கள் போக மீதமுள்ள 174 இடங்களிலும் அ.தி.மு.க. களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான அண்ணாமலை கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அண்ணாமலையே மறுத்துள்ளார்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக நான் எந்தவிதமான கடிதத்தையும் டெல்லி தலைமைக்கு அனுப்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியோடு உள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பெறும் 50 இடங்களில் கச்சிதமான தொகுதிகளில் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதும் அவர்களின் இலக்காக உள்ளது.

    அப்போதுதான் கூட்டணி ஆட்சி என்கிற கோஷத்தை தமிழகத்தில் முன்னெடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இதனை அ.தி.மு.க. நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆட்சி தான் எப்போதுமே நடந்துள்ளது.

    அ.தி.மு.க.வும் கூட்டணி ஆட்சிக்கு எக்காலத்திலும் சம்மதிக்காது என்று அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது.
    • வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள்.

    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்காக வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. எங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் தலைவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்து வருகின்றனர்.

    மேலும் சங்கம் சார்பாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான நீதிமன்ற புறக்கணிப்புகள் சட்டத்திற்கு புறம்பானது. சிலர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிரட்டும் நோக்கில் இது போன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் சிலர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகள் ஈடுபடும் போது நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இது போன்று 90 சதவீத நீதிமன்ற புறக்கணிப்புகள் நியாயமற்றவையாகவே உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் இதுபோன்று சட்டவிரோத பணி புறக்கணிப்புகளுக்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

    எனவே இதுபோன்று நியாயமற்ற கோரிக்கைகளுக்காக சட்டவிரோதமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

    வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் அதுவே சரியான முறையாகும். சட்டத் தொழில் ஒரு உன்னதமான தொழில். மேலும் வழக்கறிஞர்கள் சாதாரண ஊழியர்கள் கிடையாது.

    வழக்கறிஞர்கள் வழக்குரைஞர்களின் நலனையும் நீதிமன்றங்களின் மகத்துவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே, அற்பமான காரணங்களுக்காக அல்லது எந்தவொரு வழக்கறிஞரின் சில தனிப்பட்ட குறைகளின் அடிப்படையில் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

    ஏதேனும் பொதுவான காரணம் ஏற்பட்டால் மட்டுமே, வழக்கறிஞர் பார் கவுன்சிலையோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை தவிர்த்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள். அவர்கள் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நீதி வழங்கும் அமைப்பில் நீதிமன்றத்திற்கு அவர்களின் உதவி மிக முக்கியமானது.

    இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பெயர், முகவரியை கொண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் கொடுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • சகோதரி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், ரூ.17 கோடி பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
    • கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தனது மனைவி அனுஷா உடன் கூட்டு சேர்ந்து தனது சொந்த சகோதரி பொன்னரசியின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், ரூ.17 கோடி பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

    கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சொந்த சகோதரியிடமே ரூ.17 கோடி மோசடி செய்த ராஜா அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • திருமாவளவனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார்.
    • தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது.

    கன்னியாகுமரி:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெகு காலமாக ஒன்றிணைந்து பயணிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இப்போது முருகனை கையில் எடுத்து உள்ளோம். அடுத்து தமிழகத்தை கையில் எடுப்போம் என்று கூறி உள்ளார்.

    தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது. அது எக்காரணத்தைக் கொண்டும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கன்னியாகுமரி வந்த கனிமொழி எம்.பி.யை, அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு ஆணைய தலைவருமான சுரேஷ் ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    • கீழடி அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வை தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றி வருகிறது.

    மதுரை:

    இந்திய வரலாற்றை கீழடியில் இருந்து தொடங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில், கீழடியில் தமிழர்களின் தொன்மை மற்றும் வரலாற்றை மறைக்கின்ற வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மத்திய அரசு தமிழர்களின் பெருமையை சொல்லுகின்ற வகையில் கீழடி அகழாய்வில் தமிழர்களின் தொன்மை, தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் எழுத்து வடிவம் போன்றவைகளை முதல் மூன்று கட்ட ஆய்வில் கண்டுபிடித்தது. ஆனால் மத்திய தொல்லியல் துறை இன்னும் அதனை வெளியிடாமல் வைத்திருக்கிறது.

    நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடுத்தபோது, ஆறு வார காலத்துக்குள் வெளியிடுகிறோம் என்று உறுதி அளித்து 16 மாதங்கள் கடந்தும் வெளியிடாமல் இருக்கிறது. கீழடி ஆய்வில் முதல் அறிவியல் கண்டு பிடிப்பாம் இரும்பின் தொன்மையை கீழடி அடைந்திருக்கிறது. அதன் மூலம் இரும்பு கால ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வினை முறைப்படி அங்கீகரிக்க வேண்டிய மத்திய அரசு அங்கீகரிக்க மறுத்து காலம் தாழ்த்தி வருகிறது.

    இதனை கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் நாளை (18-ந்தேதி) 10 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெறுகின்ற வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    மேலும் இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து போராடி அறிவியல் துணை கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை. மதுரை விரகனூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம். அவர்களை திருத்துவோம் என்று கூறியிருந்தார்.

    அதன்படி மதுரையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் விரகனூர் ரிங் ரோட்டில் திரண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி அமைப்பாளர் ராஜீவ் காந்தி தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவரும், துணைப் பொதுச் செயலாளருமான திருச்சி சிவா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளபதி, தமிழரசி, மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தி.மு.க. சார்பு அணியான இளைஞரணி, மகளிரணி என அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், கீழடி அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. ஒன்று முதல் பலகட்ட ஆய்வுகள் அடிப்படையில் பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு அது காட்சிப்படுத்தப்பட்டதுடன், அருங்காட்சியகத்தையும் தி.மு.க. அரசு அமைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வை தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றி வருகிறது. கீழடி அகழாய்வின் மூலம் தமிழர்கள்தான் பூர்வகுடிகள் என்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    இதில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்று முகக்கவசங்களை அணிந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 

    • உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
    • 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த 2014 -ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து, தெளிவான உத்தரவுகளுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. இதில், மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஒப்புகை அளிக்க வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குள் மனுக்களை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

    மேலும், 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அலுவலக கையேட்டில் திருத்தம் செய்து, மனுக்களை ஒரு மாதத்தில் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

    இதனால், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், நீர்வழிகள் தவறாக பயன்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல், பொது நல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன.

    எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. சுப்ரமணியம், ஆகஸ்ட் 19 மற்றும் 21 தேதிகளில் அளித்த மனுக்களை ஆட்சியர் மற்றும் ஆர்.கே. பேட்டை தாசில்தார் ஆகியோர் பரிசீலிக்காததால், இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டிற்கு வந்தது.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்க நேரிடும். 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொதுநல வழக்குகள் அதிகரித்துள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

    • வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
    • உண்ணாவிரத போராட்டம், துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட 'மா' விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக தீர்த்துவைக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட கழகத்தின் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    இந்த உண்ணாவிரத போராட்டம், துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் கே.அசோக்குமார், டி.எம்.தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மின்னல் வேகத்தில் பஸ்சை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார்.
    • டிரைவரின் சமயோசித செயலும், துரித முடிவும், மூதாட்டிக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க உதவியது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 70). இவர் நெல்லை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் அவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாளை கே.டி.சி. நகர் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று லேசாக மோதியது.

    இதில் நிலை தடுமாறிய செல்லம்மாள் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

    பொதுவாக இதுபோன்ற சூழல்களில் 108 ஆம்புலன்சை வரவழைத்து உதவி பெறுவது வழக்கம். ஆனால், ஆம்புலன்ஸ் வர ஆகும் நேரத்தையும், மூதாட்டியின் உடல் நிலையையும் கருத்தில் கொண்ட பஸ் டிரைவரான சுரேஷ்குமார், துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார்.

    உடனடியாக, தான் ஓட்டி வந்த பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை தற்காலிக ஆம்புலன்சாக மாற்றினார். எந்தவித தாமதமும் இன்றி, மயங்கி விழுந்த மூதாட்டி செல்லம்மாளை சுரேஷ் குமார், கண்டக்டர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் ஏற்றினர்.

    பின்னர், மின்னல் வேகத்தில் பஸ்சை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். 108 ஆம்புலன்ஸ் போல் மருத்துவமனை வளாகத்திற்குள் பஸ் விரைந்து சென்றதை அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்டோர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    டிரைவரின் இந்த சமயோசித செயலும், துரித முடிவும், மூதாட்டிக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க உதவியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்லம்மாளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் உள்ளார்.

    இக்கட்டான சூழ்நிலையில் ஒரு உயிரை காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சி, மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக வணிக மேலாளர் பூல்ராஜ் கூறுகையில், இந்த விபத்தில் 2 தரப்பு மீதும் தவறு இருக்கிறது. எனினும் சற்றும் தாமதிக்காமல் பஸ்சில் அந்த மூதாட்டியை ஏற்றி சென்ற சம்பவத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அந்த பஸ்சில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.

    ×