என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிருஷ்ணகிரியில் 20-ந்தேதி அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
- உண்ணாவிரத போராட்டம், துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட 'மா' விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக தீர்த்துவைக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட கழகத்தின் சார்பில் வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரத போராட்டம், துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் கே.அசோக்குமார், டி.எம்.தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






