என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டவிரோத பணி புறக்கணிப்பு: வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
    X

    சட்டவிரோத பணி புறக்கணிப்பு: வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    • வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது.
    • வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள்.

    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்காக வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. எங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் தலைவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்து வருகின்றனர்.

    மேலும் சங்கம் சார்பாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான நீதிமன்ற புறக்கணிப்புகள் சட்டத்திற்கு புறம்பானது. சிலர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிரட்டும் நோக்கில் இது போன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் சிலர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகள் ஈடுபடும் போது நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இது போன்று 90 சதவீத நீதிமன்ற புறக்கணிப்புகள் நியாயமற்றவையாகவே உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் இதுபோன்று சட்டவிரோத பணி புறக்கணிப்புகளுக்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

    எனவே இதுபோன்று நியாயமற்ற கோரிக்கைகளுக்காக சட்டவிரோதமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

    வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் அதுவே சரியான முறையாகும். சட்டத் தொழில் ஒரு உன்னதமான தொழில். மேலும் வழக்கறிஞர்கள் சாதாரண ஊழியர்கள் கிடையாது.

    வழக்கறிஞர்கள் வழக்குரைஞர்களின் நலனையும் நீதிமன்றங்களின் மகத்துவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே, அற்பமான காரணங்களுக்காக அல்லது எந்தவொரு வழக்கறிஞரின் சில தனிப்பட்ட குறைகளின் அடிப்படையில் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

    ஏதேனும் பொதுவான காரணம் ஏற்பட்டால் மட்டுமே, வழக்கறிஞர் பார் கவுன்சிலையோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை தவிர்த்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள். அவர்கள் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நீதி வழங்கும் அமைப்பில் நீதிமன்றத்திற்கு அவர்களின் உதவி மிக முக்கியமானது.

    இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பெயர், முகவரியை கொண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் கொடுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×