என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் - சென்னை ஐகோர்ட்
- உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
- 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2014 -ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து, தெளிவான உத்தரவுகளுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஒரு அரசாணை வெளியிட்டது. இதில், மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் ஒப்புகை அளிக்க வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்குள் மனுக்களை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
மேலும், 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அலுவலக கையேட்டில் திருத்தம் செய்து, மனுக்களை ஒரு மாதத்தில் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவுகளை அரசு அதிகாரிகள் முறையாக பின்பற்றாததால், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
இதனால், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், நீர்வழிகள் தவறாக பயன்படுத்தப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல், பொது நல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் அதிகரித்து வருகின்றன.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. சுப்ரமணியம், ஆகஸ்ட் 19 மற்றும் 21 தேதிகளில் அளித்த மனுக்களை ஆட்சியர் மற்றும் ஆர்.கே. பேட்டை தாசில்தார் ஆகியோர் பரிசீலிக்காததால், இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டிற்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25,000 அபராதம் விதிக்க நேரிடும். 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொதுநல வழக்குகள் அதிகரித்துள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.






