என் மலர்
உள்ளூர் செய்திகள்
- யாகசாலை குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கடற்கரையில் மேடு, பள்ளங்கள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50க்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது.
அதற்கு முன்பாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெகா திட்ட வளாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கோவில் முன்பு சண்முக விலாசத்தில் இருந்து ஏற்றம் காணும் இடங்களில் தரையில் கல் பதிக்கும் வேலை நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. அதே போல் கடற்கரையில் மேடு, பள்ளங்கள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று கலெக்டர் இளம்பகவத் பல்வேறு மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல்துறை உயர் அதிகாரிகள், பக்தர்கள் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கோவில் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
- மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் ரெயில் மூலம் காட்பாடி வந்தார்.
அவருக்கு வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் வேலூர் நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மேயர் சுஜாதா மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காட்பாடி முதல் வேலூர் வரை மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதால் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்றார்.
அங்கு ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லெண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.1.20 கோடி மதிப்பில் சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பிலான திருவலம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.60 லட்சம் மதிப்பில் வேலூர் மாநகராட்சி லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம், ரூ.1.20 கோடி மதிப்பில் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் பேரணாம்பட்டு நகர்ப்புற துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு மகமதுபுரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.7கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன். எஸ்.எம். நாசர், கலெக்டர் சுப்புலெட்சுமி, எம். எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.
- பிரச்சனை முடிய வேண்டும் என்று எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் வந்தார்.
தைலாபுரம் தோட்டத்தில் பா.க.ம. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளலர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது அதற்காக வந்துள்ளேன்.
கேள்வி:-ஆலோசனை கூட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவு அல்லது பொதுக்கூட்டம் எது சம்பந்தமாக முடிவெடுக்க வாய்ப்புள்ளதா?
பதில்:- டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.
கேள்வி:- டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இணைய வலியுறுத்தி உள்ளீர்களா?
பதில்:- தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
கேள்வி:- இணைவதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுகிறார்களே...
பதில்:- அப்படி இல்லை இணைவார்கள். எங்களது ஆசை இணைவது தான்.
பதில்:- அவரை பார்ப்பதும், பேசுவதும் புதியது அல்ல. அன்புமணி ராமதாஸ் எனது அண்ணன்.
கேள்வி:- உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது உங்களை அன்புமணி சந்தித்தாரா?
பதில்:- இல்லை.
கேள்வி:- சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உங்களுக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்தார்களே
பதில்:- கூட்டுப் பிரார்த்தனை என்பதை கலசம் வைத்து தான் பண்ண வேண்டும். நான் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன். கூட்டுப்பிரார்த்தனை என்றால் இறந்தவர்களுக்கு தான் பண்ண வேண்டும்.
கேள்வி:- நீங்கள் சேலத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தை புறக்கணிப்பதற்காக தான் உடல்நிலை சரியில்லை என்று கூறினீர்களா?
பதில்:- யார் சும்மா, சும்மா போய் மருத்துவமனையில் படுப்பார்களா. நான் தனியார் மருத்துவமனையில் படுக்கவில்லை. சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டேன். நீங்கள் அரசு மருத்துவமனையில் சென்று கேளுங்கள். எனக்கு என்னவென்று கேட்டால் கண்டிப்பாக கொடுப்பார்கள். மனம் அழுத்தம் அதனால் தான் மருத்துவமனைக்கு சென்றேன்.
பதில்:- டாக்டர்.ராமதாஸ் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.
கேள்வி:- பிரச்சனைக்கு எப்பொழுது முடிவு வரும்.
பதில்:- பிரச்சனை முடிய வேண்டும் என ஆசை தான். எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான் விரைவில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூமாப்பட்டி தொடர்பான வீடியோக்கள் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
- கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு பலரும் படையெடுத்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
dark_ night_ tn84 என்ற இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இணையத்தில் உருவாகும் பல ட்ரெண்ட்களுக்கு மத்தியில் இதுவும் ஒரு புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.
- தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
- தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.
கோவை:
கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974-ம் வருடம் ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.
எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க.வினர் மத்திய அரசை குறை கூறுகிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது.
கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், எஸ்.ஆர். சேகர், வீர தமிழச்சி சரஸ்வதி, காளப்பட்டி மண்டல தலைவர் உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆகஸ்டு 10-ந்தேதி பூம்புகாரில் பா.ம.க. மகளிர் மாநாடு நடக்கிறது.
- பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தவறு.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
இதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொது செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் பா.ம.க. இணை பொதுச்செயலாளராக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை டாக்டர் ராமதாஸ் நியமித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆகஸ்டு 10-ந் தேதி பூம்புகாரில் பா.ம.க. மகளிர் மாநாடு நடக்கிறது. அதை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்துள்ளோம்.
அருள் எம்.எல்.ஏ. எப்போதும் என்னுடன் தான் இருப்பார். இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்திருக்கிறோம். இன்றைய கூட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர், பொருளாளரை புதிய நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளோம்.
தற்போது வரை பா.ம.க. எந்த கூட்டணியில் போட்டியிடும் என்பதை முடிவு செய்யவில்லை. என்னுடன் இருக்கும் நிர்வாகிகள் தான் பா.ம.க. சார்பில் தேர்தலில் நிற்பார்கள். அவர்களுக்கு தான் சீட் வழங்கப்படும்.
சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். பா.ம.க.வில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் நிறுவனரான எனக்கே உண்டு.
பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது.
- கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது.
குன்னூர்:
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று ராணுவ முகாம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வந்தது.
ஊருக்குள் வந்த கரடி, அந்த பகுதியில் உள்ள சாலையில் சிறிது நேரம் நடந்து சென்றது. சில சமயங்களில் சாலையில் அங்கும் இங்குமாக ஓடியபடி இருந்த கரடி அங்குள்ள நிழற்குடைக்குள் சென்று நின்று கொண்டது.
அந்த சமயம் அவ்வழியாக வாகனங்கள் சென்றன. ஆனால் கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது. கரடி நின்றதை பார்த்த வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் அந்த சாலையை கடந்து சென்றனர்.
நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது. அங்கு ஒரு நுழைவு வாயில் அருகே வந்ததும் நின்று விட்டது. அந்த நுழைவு வாயில் திறந்த நிலையில் கிடந்தது.
அதன் அருகே வந்த கரடி, நுழைவாயில் கதவின் மீது ஏறி, இறங்கி விளையாடி கொண்டிருந்தது.
சிறிது நேரம் கரடி இதுபோன்று செய்து கொண்டிருந்தது. பின்னர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து, அங்கிருந்து நகர்ந்து சென்றது.
குழந்தைகள் போல கரடி கேட்டின் மீது ஏறி, இறங்கி விளையாடியதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து தங்களது செல்போனிலும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை.
- சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
ராணிப்பேட்டை:
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராணிப்பேட்டை அடுத்த ஆற்காடு வழியாக சென்றார்.
அப்போது மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த படியும், பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் வெளியே காத்திருந்ததை பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டார்.
காத்திருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் மின்விசிறி, இருக்கை, குடிநீர் என எதுவும் இல்லை என குற்றம் சாட்டினர். காத்திருக்கும் அறையை கூட திறக்காமல் இருப்பது தெரிந்தது.
அதனை தொடர்ந்து பணியில் இருக்க வேண்டிய 5 டாக்டர்கள் மற்றும் 4 நர்சுகள், 6 ஊழியர்கள் என யாரும் சுகாதார நிலையத்தில் இல்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
பணியில் இருக்க வேண்டிய டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு காலதாமதத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும், அதேபோல் விளக்கம் கொடுத்த பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
- குறைபாடுகளை உடனடியாக தீர்க்குமாறு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வியின் தரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆய்வில், போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது முதல் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வித் தரத்தை பூர்த்தி செய்யாதது வரை பல பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த கற்பித்தல் பணியாளர்கள் பற்றாக்குறை, போதுமான ஆய்வக வசதிகள், காலாவதியான பாடத்திட்டங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) போன்ற அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட அங்கீகாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியது ஆகியவை குறைபாடுகளில் அடங்கும். சில கல்லூரிகளில் காலாவதியான நூலகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாதது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக, தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. கல்லூரிகளில் நிலவும் இந்த குறைபாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த குறைபாடுகளை உடனடியாக தீர்க்குமாறு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
- ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று காட்பாடி செல்ல ரெயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…
AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரெயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது.
- விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.
விஜய் நடித்து வந்த 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். பொதுக்குழு, செயற்குழு, கோவையில் பூத்கமிட்டி மாநாடு ஆகியவை த.வெ.க. சார்பில் அடுத்தடுத்து நடந்து முடிந்தது. கோவை பூத் கமிட்டி மாநாட்டை தொடர்ந்து கோவையில் விஜய் ரோடுஷோ நடத்தினார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அடுத்ததாக மதுரையில் நடந்த ரோடுஷோவிலும் ஏராளமானோர் திரண்டு வந்து விஜய்யை உற்சாகப்படுத்தினர்.
234 தொகுதிகளிலும் அடுத்ததாக 10,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அடுத்த கட்டமாக விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டு உள்ளார்.
சுற்றுப் பயணம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட சுற்றுப் பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் டெல்டா மாவட்டத்தில் இருந்து விஜய் தொடங்க இருக்கிறார். நாகப்பட்டினத்தில் முதல் சுற்றுப் பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் ஏற்கனவே இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவரது அரசியல் சுற்றுப் பயணமும் நாகப்பட்டினத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது. விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரசாரத்தின் போது முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ மூலமும் மக்களை சந்திக்க இருக்கிறார்.
முதற்கட்ட சுற்றுப் பயணம் டெல்டா மாவட்டத்திலும் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்திலும் அதற்கடுத்ததாக தென்மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி பலமாக இருந்து வருகிறது.
இருகட்சிகளும் பணபலத்துடனும், பதவி பலத்துடனும் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிற நிலையில் விஜய் தனது முகத்தை மூலதனமாக கொண்டு மக்களை சந்திக்க இருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
- தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
- மழைப்பொழிவு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றால பகுதிகளில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவும் பெய்த தொடர் மழையால் மற்ற அருவிகளான புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என தற்போது அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் மழை நீடித்து வருவதால் மழைப்பொழிவு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 28-ந்தேதி ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள வெண்ண மடை படகு குழாமில் படகு போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.






