என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது.
    • அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பா.ஜ.க.வின் கனவு.

    அரியலூர்:

    போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வதந்தியை நாங்கள் மறுத்து வருகிறோம். பஸ் கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் தற்போதைக்கு இல்லை.

    இப்பொழுதும் அதையே உறுதிப்படுத்துகிறோம். சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    பஸ் கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்ற நிலையில் போக்குவரத்து கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    எனவே பஸ் கட்டண உயர்வு என்பது நிச்சயம் இருக்காது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    அ.தி.மு.க.வை முழுவதும் ஆக்கிரமித்து அந்த இடத்தை நிரப்புவதே பா.ஜ.க.வின் கனவு. எனவே தி.மு.க.வின் வாக்குகளை பிரிக்கலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு புதிய கட்சிகளை பா.ஜ.க. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் களத்தில் இறக்குவது வழக்கம். இப்பொழுதும் அந்த தந்திரத்தை புதுப்புது முயற்சிகளில் எடுத்துள்ளது. அனைத்தையும் முறியடித்து முதலமைச்சர் தலைமையில் தி.மு.க. வெற்றி பெறும்.

    எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு முறையும் ஒன்றை பேசுவார். ஆனால் நடைமுறைக்கு வரும் பொழுது வேறு விதமாக இருக்கும். 2036 வரை பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்க இவர் வாய் கட்டி, வாய்மூடி மவுனியாக அமர்ந்திருந்தார். இப்பொழுது ஒன்றை பேசுகிறார். இன்னும் சில காலம் கழித்து என்ன பேசுவார் என்று காலம் நமக்கு உணர்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது.
    • அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.

    அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?

    பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது.
    • பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நெசவு தொழிலாளர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

    அப்போது. கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமியிடம் நெசவு தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

    இதையடுத்து எடப்படி பழனிசாமி பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்துடன் மணமக்களுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின் ஏழை நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

    * பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழவைக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும்.

    * அன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.
    • தற்போது வரை நாம் தமிழர் கட்சியில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பல கட்சிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. அத்தகைய ஒருமித்த கருத்துடன் இருக்கும் கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும். இது தொடர்பாக இதுவரை நாங்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை.

    தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய், சீமான் வர வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. எனவே உரிய நேரத்தில் சரியான கூட்டணி ஏற்படும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டி என்பதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். தற்போது வரை நாம் தமிழர் கட்சியில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 2 மாதத்திற்குள்ளாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எங்கள் கொள்கை என்பது தனித்து அரசியல்தான். ஏற்கனவே அதிமுக, திமுக கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. எனவே நாங்கள் தனித்து அரசியல் நோக்கி தான் முன்னெடுப்போம். எத்தனை காலம் ஆனாலும் எங்களின் தனித்து அரசியல் என்பது மாறாது என்று தெரிவித்துள்ளார். 

    • விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசாமி கோவிலில் சாமி கும்பிட 5 பேர் ஒரு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்தனர்.

    திருச்செங்கோட்டில் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி அரியமங்கலத்துக்கு புறப்பட்டனர். இரவு 8 மணியளவில் கார் திருச்செங்கோடு உஞ்சனை அருகே சென்றது.

    அப்போது காரை ஓட்டிவந்த யுவராஜன் என்பவர் தூங்கி உள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் பஸ் நிறுத்தம் அருகே இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் மீதும் மோதி இழுத்து சென்றது.

    பின்னர் இந்த பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு கார் வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது வீட்டுக்கு முன்பு அமர்ந்திருந்த முருகேசன் (67) என்பவர் மீது கார் மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே நாற்காலியில் அமர்ந்தபடி முருகேசன் பலியானார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவர் யுவராஜன் மற்றும் காரில் பயணித்த சரவணன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்பக்கம் அமர்ந்திருந்த 3 பேர் காயமின்றி தப்பினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஏற்காட்டில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழையாக பெய்தது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய மழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. பின்னர் இரவு முழுவதும் சாரல் மழையாக பெய்தது . தொடர்ந்து ஏற்காட்டில் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    இதே போல வாழப்பாடி, ஏத்தாப்பூர் , ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 3.2, வாழப்பாடி 16, ஆனைமடுவு 7, ஆத்தூர் 9, கெங்கவல்லி 4, தம்மம்பட்டி 5, ஏத்தாப்பூர் 14, கரியகோவில் 4, வீரகனூர் 2, நத்தக்கரை 7, சஙககிரி 3, எடப்பாடி 5.4, ஓமலூர் 10.5, டேனீஸ்பேட்டை 18 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 129.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், பாறை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
    • கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பாறை சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், பாறை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பாறை சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இரவு நேரத்தில் பாறை உருண்டு விழுந்துள்ளது. சாலை நடுவில் உள்ள பாறையை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு
    • நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளின் பேச்சால் முதலமைச்சருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

    எல்லோருக்கும் வணக்கம். நேற்று கேள்விப்பட்ட ஒரு செய்தியால் மனது சரியில்லை. அது என்னவென்றால் நமது முதல்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கேள்விப்பட்டதும் மனசே சரியில்லை. கூடிய விரைவில் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவார். என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். அதுபோல அண்ணியின் பிரார்த்தனை நமது முதலமைச்சரை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு சென்று விடும்.

    என்னதான் நாம் மருத்துவமனையில் இருந்தாலும், நமக்கு ட்ரீப்ஸ் ஏறினாலும், மருத்துவர் நம்மை பார்த்துக்கொண்டாலும், மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அதைவிட பூரணமாக குணம் அடைந்து வரவேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி இருக்கு. அது என்ன என்று கேட்டால்...

    முதலமைச்சர் ஒரு நிகழ்வில் பேசும்போது , காலையில் நான் கண்விழித்து எழுந்திருக்கும்போது நம்மவர்கள் யாராவது எதையாவது பண்ணிடக்கூடாது என்று எழுந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போ அவருக்கு எவ்வளவு மனஉளைச்சல் இருக்கு பாருங்க. இதுல கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் செய்கின்ற செயல்கள், நீங்கள் பேசும் வார்த்தைகள் இதையெல்லாம் உங்களை பாதிக்கிறதோ இல்லையோ... தலைவரை போய் பாதிக்கும். முதலமைச்சரை பாதிக்கும். அதுக்காகத்தான் அவர் அந்த வார்த்தை சொல்கிறார். தயவு செய்து இனிமேல் நீங்கள் பேசும் பேச்சிலோ, செயலிலோ கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால்? நம்ம முதலமைச்சரை நாம் தான் பொறுப்பா பார்த்துக்க வேண்டிய கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமா இருக்கு. நான் சொல்றது இந்த கட்சிக்கு மட்டும் இல்லை எல்லா கட்சிக்கும் தான்.

    த.வெ.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய சகோதரி வைஷ்ணவி ஒரு புகார் கொடுத்துள்ளார். தலைவர் அறிக்கை விடுகிறார் என்பதை தாண்டி, ஒரு கட்சியில இருக்கோம், ஒரு புது கட்சி தொடங்கியிருக்கிறது, எந்தவித பாதிப்பும், அவமானமும் நம்ம கட்சிக்கும், தலைமைக்கும், தலைவருக்கும் வரக்கூடாது என்பது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ரொம்ப முக்கியது. அப்படிப்பட்டவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி முடிக்க பார்க்க வேண்டும் என்றார்.


    • பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.
    • காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் டேன்டே குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் இன்று அதிகாலை நேரத்தில் தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் வீட்டுக்கு வெளியே வந்தார்.

    அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென டேன்டீ குடியிருப்புக்கு வந்தது. இதனை பார்த்து லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.

    இருந்தபோதிலும் மூதாட்டி லட்சுமியை சுற்றி வளைத்த யானை தும்பிக்கையால் பிடித்து கீழே தள்ளியது. பின்னர் அவரை சரமாரியாக மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பெரிதாக சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

    பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.

    நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் தடயங்களை ஆய்வு செய்தனர். பின்னர் மூதாட்டியை கொன்றுவிட்டு தப்பி சென்ற யானையை கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனத்துக்குள் உணவு பற்றாக்குறை காரணமாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கின்றன. எனவே மலைஅடிவார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உளளனர்.

    நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் மனித-விலங்கு மோதலை தடுக்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.

    சென்னை:

    தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் சங்கர் ஜிவால், அடுத்த மாதம் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த டி.ஜி.பி.யை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்காக தமிழகத்தின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் தற்போதைய டி.ஜி.பி. ஆகியோர் அடுத்த மாதம் டெல்லி செல்ல உள்ளனர்.

    டெல்லியில் யூ.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.

    இவர்களில் மத்திய அயல் பணியில் டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோரா இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இவரை தவிர்த்து சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

    6 மாதத்திற்குள் ஓய்வு பெறும் அதிகாரிகளை டி. ஜி.பி. பட்டியலில் சேர்க்க முடியாது என்பது யூபிஎஸ்சி விதிகளில் ஒன்றாகும்.

    இதனால் விரைவில் ஓய்வு பெற உள்ள அபய்குமார் சிங்கின் பெயர் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பும் பட்டியலில் இடம்பெறு வதற்கு வாய்ப்பு இல்லை.

    மீதமுள்ள 8 பேரில் 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சீமா அகர்வால், 1992 பேட்ச் அதிகாரிகள் ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் உட்பட 8 அதிகாரிகள் பட்டியல் விரைவில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    இதற்கு முன்பு, 30 ஆண்டுகள் காவல் துறையில் பணி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இந்தப் பட்டியலில் சேர்வதற்குத் தகுதியுடையவர்களாக இருந்தனர். அதன்படி சீனியர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பெற்று வந்தனர்.

    ஆனால் மத்திய உள்துறையின் புதிய விதிகளின் படி, 16-வது ஊதிய குழு அட்டவணையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அனைவருமே டி.ஜி.பி. பணியிடத்திற்கு தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள விதிகளின் படி, மாநில அரசு கொடுக்கும் பட்டியலில், சீனியாரிட்டி அடிப்படையில் 3 அதிகாரிகளை யூ.பி.எஸ்.சி. தேர்ந்தெடுத்து மாநில அரசிடம் வழங்கும். அவர்களில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி.யாக தேர்வு செய்யும்.

    இதன்படி தமிழக புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் சீமா அகர்வால் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன்மூலம் டி.ஜி.பி. அந்தஸ்தை எட்டிப் பிடிக்கும் 2-வது பெண் அதிகாரியாக சீமா அகர்வால் திகழ்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெண் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் ஏற்கனவே பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமண லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மலை மீது பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் மழை பொழிவு குறைந்ததால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வழக்கத்தை விட அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அங்கு கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
    • குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12-ந்தேதி தேர்வு நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர்.

    குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தேர்வில் அளித்த விடை சரியானதா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாக Answer Key வெளியாகியுள்ளது.

    குரூப் 4 தேர்வுக்கான Answer Key தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

    ×