என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    • கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

    • குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது.
    • பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.

    பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

    குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி.

    பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?

    ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    #TNPSCAspirants குரலாக அ.தி.மு.க. என்றும் ஒலிக்கும்! என்று கூறியுள்ளார். 

    • அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தனுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
    • நேற்றைய தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    நேற்று காலை 10.40 மணியளவில் அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில் தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு காலை 9.30 மணிக்கு திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர். அவரை அரசு அதிகாரிகளும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் 3 நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

    மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22-ந்தேதி) அவர் அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தனுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    கடந்த 15-ந்தேதி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார்.

    நேற்றைய தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு உள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்துக்கும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

    மேலும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது.
    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா?

    தி.மு.க.விற்கு எதிரான அணிகள் ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.விற்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல, தி.மு.க.வை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான்.

    * நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம்.

    * தீமையை வைத்து தீமையை அழிக்க முடியாது.

    * தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதற்காக தேவை என்பதை யாராவது சொல்வார்களா?

    * தமிழ் மொழி வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் உறுதுணையாக நிற்குமா?

    * எந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை தி.மு.க. எதிர்க்கிறது.

    * இந்திய நிலப்பரப்பில் 81% நிலக்கரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. இங்கு நிலத்தின் அடியில் உள்ள வளத்தை எடுக்க அனுமதிக்கக்கூடாது.

    * போர் நடந்த இடத்தில் கூட மீள்குடியேற்றம் செய்துவிட முடியும். ஆனால் நிலத்தின் வளத்தை எடுத்து விட்டால் அது சுடுகாடாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • EPS கடை விரித்தும் யாரும் வரவில்லை.
    • கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பேரணி மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது "திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு தெரிவித்திருந்தார்.

    நேற்று த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "EPS கடை விரித்தும் யாரும் வரவில்லை. கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்" என துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

    234 தொகுதிகளிலும் திமுகவுக்கு Bye, Bye மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு Bye, Bye ஹேஷ்டேக்கை முன்னெடுத்து வருகிறாரே? என்ற கேள்விக்கு "அந்த அளவிற்கு வந்துவிட்டாரா?" என்றார்.

    எடப்பாடி பழனிசாமி அழைப்பை நாம் தமிழர் கட்சி சீமான நிராகரித்துள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.
    • தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் நேற்று தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் மானாமதுரை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வினோத் சார்பில் வக்கீல் லஜபதிராய் என்பவரும், தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆகியோர் நீதிபதிகள் முன்பாக ஆஜராகி, பொதுமக்களிடம் தி.மு.க.வினர் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பேரில் ஆதார் விபரங்கள் பெறப்படவில்லை.

    அ.தி.மு.க. தரப்பில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓ.டி.பி. பெறுவதாக தவறான தகவலை இந்த கோர்ட்டில் தெரிவித்து தடை உத்தரவு பெற்று இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.

    உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறுவதற்காகவே ஓ.டி.பி. பெறப்பட்டது. வேறு எந்த ஆவணத்தையும் யாரிடமும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து, வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

    அதற்கு நீதிபதிகள், நேற்று விசாரிக்கப்பட்ட பிரதான வழக்கில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

    அதன்படி கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திலிருந்து அவர்கள் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், அஜித்குமாரை அடைத்து வைத்து தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த 19-ந்தேதி அஜித்குமார் தாக்கப்பட்டது குறித்து அவரது சகோதரரிடம் செய்து காண்பிக்குமாறு கூறி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய திருப்புவனம் பகுதியில் உள்ள பேக்கரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தில் சாட்சிகளிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தினர். அதன்படி தனிப்படை போலீசாருடன் அஜித்குமாரை வேனில் அழைத்து சென்ற போலீஸ்காரர் ராமச்சந்திரன், அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், கோவில் ஊழியர்கள் பிரவீன் மற்றும் வினோத், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

    இதனை ஏற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பலரிடம் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஒருவரும் 2 சப்- இன்ஸ்பெக்டர்களும் மிரட்டி லட்சக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இவர்கள் 3 பேரும் சேர்ந்து லஞ்சம் பெற்றிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50 லட்சம் வரை பணம் கைமாறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    • விமான நிலைய பகுதியில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில் மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

    மாலத்தீவு சுதந்திர விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி 26-ந்தேதி (சனிக்கிழமை) இரவு அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

    மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக தூத்துக்குடிக்கு வர இருக்கிறார். 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முன்னதாக 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அதில் சற்று மாற்றம் செய்யப்பட்டு ஒருநாள் முன்னதாக 26-ந்தேதியே தமிழகத்துக்கு வருகிறார். அன்று இரவு 8 மணி அளவில் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறார்.

    விமான நிலைய பகுதியில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் புதிதாக கட்டப்பட்டு உள்ள விமான பகுதிக்கு செல்கிறார்.

    தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.



    தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 2 விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருக்கு மட்டும் 9 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விமான நிலையம் சர்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் இனிமேல் இரவு நேர விமான சேவையையும் தொடங்க முடியும்.

    இதற்காக விமான நிலையத்தில் இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்து வந்த விமான நிலைய ஓடு பாதை தற்போது 3 ஆயிரம் மீட்டர் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு வேறு சில நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    அங்கு நடக்கும் விழாவில் ரூ.2,357 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழி சாலை, ரூ.200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.99 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மயமாக்கப்பட்ட ரெயில் பாதை மற்றும் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நாகர்கோவில் டவுன்-நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி ரெயில் பாதை இரட்டிப்பு ஆக்குதல் (21 கிலோ மீட்டர் தூரம்) ஆகிய முடிவுற்ற நலத்திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    மேலும் ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய விமான நிலையத்தின் ஆணைய தலைவர் விபின் குமார் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், விமான நிலைய அதிகாரி சுரேஷ், சரத்குமார், அனில்குமார், விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) காட்வின், திட்ட இயக்குனர் பாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் தூத்துக்குடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    பாரதிய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்க தன் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவு 9.30 மணிக்கு பிரதமர் மோடி இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். அன்று இரவு அவர் திருச்சியில் தங்குகிறார்.

    மறுநாள் (27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை அவர் திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார். அங்குள்ள சிவாலயத்தில் ராஜேந்திர சோழ மன்னனின் திருவாதிரை பிறந்த நாள் விழா நடக்கிறது.

    விழாவில் பங்கேற்பதற்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சுமார் 700 மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. ரோடு ஷோ முடிந்ததும் அவர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சாதாரணமான முறையில் சந்தித்து நலம் விசாரிப்பார். இதையடுத்து அவர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பார்.

    விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிறகு இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.

    விழாவில் ஆதீனங்கள், சாதுக்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை முக்கிய விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன் பிறகு அவர் தஞ்சை பகுதிக்கு செல்வாரா? அல்லது டெல்லிக்கு செல்வாரா? என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    • பாகுபாட்டை எதிர்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளின் விவரங்கள் என்ன?
    • எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

    சென்னை:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பல்கலைகழகங்களில் அமைக்கப்படும் சம வாய்ப்பு பிரிவுகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள், 2012-ன் படி அமைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அமைக்கப்பட்டுஉள்ள பிரிவுகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன? அவை இன்னும் முழுமையாக அமைக்கபடாததற்கான காரணங்கள் என்ன?

    கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

    கடந்த 5 ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களின் விவரங்கள், கல்லூரி வாரியாக, பல்கலைக்கழக வாரியாக வெளியிட வேண்டும்.

    பாகுபாட்டை எதிர்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளின் விவரங்கள் என்ன?

    சாதி அடிப்படையிலான பாகுபாட்டால் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் வகுத்துள்ள கூடுதல் வழிமுறைகள் என்ன? என்று வலியுறுத்தி பேசினார்.

    தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், அதில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் சேர்க்கை விவரங்கள் என்ன? ஐடிஐகளில் கிடைக்கும் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பின் தரத்தை அரசாங்கம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? புதிதாக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசாங்கம் நிறுவ முன்மொழிந்துள்ள ஐ.டி.ஐ.களின் விவரங்கள் என்ன? பயிற்சி தரங்களை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.

    அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளான துயர் மிகுந்த சம்பவத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன? பயணிகள் தவிர மற்றவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு எவ்வளவு?

    இதுவரை ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?

    இந்த விபத்திற்கு காரணமாக யாரேனும் தனி நபர் அல்லது ஏதேனும் நிறுவனம் செய்த நாசவேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதா?

    இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு திரும்பினார்.
    • முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நேற்று முழுவதும் அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை அருகில் உள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவரது சகோதரர் மு.க.அழகிரி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். முதலமைச்சரை சந்தித்த மு.க.அழகிரி அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.




    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக மீண்டும் உயர்ந்துள்ளது.
    • தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் இன்று 4ம் நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கியதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்து உபரி நீர் திறக்கப்பட்டதுடன் வைகை அணைக்கும் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    அதன் பின் படிப்படியாக மழை குறைந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதுடன் தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக மீண்டும் உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1976 கன அடி. திறப்பு 1867 கன அடி. இருப்பு 4697 மி.கன அடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் 64.47 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடப்படும்.

    தற்போது தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 1744 கன அடி. குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4513 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 60.35 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது.

    தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் இன்று 4ம் நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேகமலை அருவியிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆடி அமாவாசை என்பதால் அருவிக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட வருவார்கள். இதனால் அதற்கு முன்பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×