என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓரணியில் தமிழ்நாடு"

    • “என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா!
    • “தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!" என்றார் பேரறிஞர் அண்ணா!

    புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், "தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க" என்று வளர்ந்திருக்கிறோம்!

    #ஓரணியில்_தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.
    • ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.

    அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி+ குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!' என உறுதி ஏற்கிறோம்!

    * நான், தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், 'பெண்கள்- விவசாயிகள் - மீனவர்கள்- நெசவாளர்கள்- தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.



    • திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர முதலமைச்சர் அழைப்பு .
    • ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு என தகவல்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்தபடியே ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், அப்போலோ மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    2026 சட்டமன்றத் தேர்தல் களப் பணிகள் குறித்து முதலமைச்சர் அறிவுரைகளை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.
    • தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் நேற்று தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் மானாமதுரை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வினோத் சார்பில் வக்கீல் லஜபதிராய் என்பவரும், தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆகியோர் நீதிபதிகள் முன்பாக ஆஜராகி, பொதுமக்களிடம் தி.மு.க.வினர் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பேரில் ஆதார் விபரங்கள் பெறப்படவில்லை.

    அ.தி.மு.க. தரப்பில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓ.டி.பி. பெறுவதாக தவறான தகவலை இந்த கோர்ட்டில் தெரிவித்து தடை உத்தரவு பெற்று இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.

    உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறுவதற்காகவே ஓ.டி.பி. பெறப்பட்டது. வேறு எந்த ஆவணத்தையும் யாரிடமும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து, வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

    அதற்கு நீதிபதிகள், நேற்று விசாரிக்கப்பட்ட பிரதான வழக்கில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
    • வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.

    மதுரை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

    அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் வாக்கா ளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். கடந்த 1-ந்தேதி இந்த திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர். அப்போது வாக்காளர்களின் தொலைபேசி எண் மூலம் ஓ.டி.பி. பெறப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக தி.மு.க.வினர் வீடு, வீடாக செல்கின்றனர். அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு தொல்லை செய்கின்றனர்.

    எங்கள் வீட்டிற்கு தி.மு.க.வினர் 10 பேர் வந்து, அனுமதி இல்லாமல் தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை வீட்டில் ஒட்டினர்.

    பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் உள்பட அடையாள அட்டைகளை கேட்டனர். அதனை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை நிறுத்தி விடுவோம் என மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்கி, தி.மு.க.வில் சேர்த்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். அரசியல் பிரசாரத்துக்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது. இது, அரசியலமைப்பு வழங்கும் சுதந்திரம் மற்றும் தனியுரிமையை மீறுவதாகும். எனவே இந்த நடவடிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

    பொதுமக்களிடம் தி.மு.க.வினர் சட்ட விரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கே.ஆர்.பாரதி கண்ணன், ஆயிரம் செல்வகுமார், மகேந்திரன் ஆகியோர் ஆஜராகி, அது தொடர்பான வீடியோவும் சமர்ப்பித்தனர்.

    அதையடுத்து நீதிபதிகள், ஓ.டி.பி. எண்ணை எதற்காக கேட்கிறார்கள்? ஓ.டி.பி. விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படும்போது, எதற்காக ஓ.டி.பி.யை கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசுத்தரப்பில், தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரசாரம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீங்கள் அரசு வழக்கறிஞரா? அல்லது தி.மு.க. வழக்கறிஞரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்திற்கு இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறு தான் கையாளப்படுவார்களா?

    தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.

    இது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி, ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது. தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

    வாக்காளர்களின் தனி நபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். அந்த விஷயங்கள் வெளிநாட்டுக்கு விற்கப்பட்டு விட்டால் என்ன செய்வது?

    ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி.யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி. விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாக அறிவித்தனர். டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும், வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக் கினை நீதிபதிகள் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    • திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!
    • திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, 'ஓரணியில் தமிழ்நாடு' மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!

    இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!

    தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54 ஆயிரத்து 310 புதிய உறுப்பினர்களையும் 30 ஆயிரத்து 975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதல் இடத்தில் முந்தி இருக்கிறது.

    திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

    திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். தொடர்ந்து, திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து ரோடு-ஷோவாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, ரெயில்வே மேம்பாலம் அருகில் நிறுவப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், இரவு சன்னதி தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார்.

    அதனைத் தொடர்ந்து, இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயத்தமானார். அப்போது திடீரென சன்னதி தெருவில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு நடந்தே சென்ற முதலமைச்சர் மக்களிடம் தி.மு.க. அரசின் சாதனை எடுத்துக்கூறி, பரப்புரையில் ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக திடீரென முதலமைச்சர் தங்களது வீட்டிற்கு வந்ததும் செய்வதறியாத பொதுமக்கள் ஆனந்த பெருக்குடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது மக்களிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர், வீட்டில் கை குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், சில வீடுகளில் முதலமைச்சருக்கு தேனீர், இனிப்பு கொடுத்து மக்கள் வரவேற்றனர். சன்னதி தெரு முழுவதும் நடந்தே சென்று பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா இடத்திற்கு புறப்பட்டார். 

    • தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
    • தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.

    அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ் குமார் அவர்கள், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, "தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்" என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்!

    தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!

    சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்!

    இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - பாராளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    • 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    ஜூலை 3-ந்தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி சென்னையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வீடு அருகே உள்ள குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் செயல்பாடு, மத்திய அரசின் செயல்பாடு குறித்து கேள்விகள் கேட்டு பரப்புரை தொடங்கினார். 5 கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வினர் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கின்றனர்.

    • மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது.
    • மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

    வேலூர்:

    ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் பிரிந்து இருக்கக்கூடியவர்கள், ஒத்த கருத்துடையவர்கள், நம்மை விரும்பக் கூடியவர்கள் யார்? யார் என கண்டறிந்து தி.மு.கவின் கொள்கைகளை அவர்களுக்கு விளக்கி இந்த அணியில் சேர்க்க வேண்டும். இது முதல் பாகம். இதை ஒருநாள் செய்துவிட்டு போய்விடுவதில்லை. ஒரு மாத காலத்திற்கு மேலாக உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெறும். ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏன் பொதுச்செயலாளர் ஆகிய நானே தலைவரின் ஆணையை ஏற்று பணியை செய்வோம்.

    தி.மு.க வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. சமுதாய போராளி கட்சி. இனம், மொழி, மானத்தை கட்டி காத்திடும் கட்சி. யாருக்கும் இரண்டாம் தர மாநிலமாக தமிழ்நாடு போகக்கூடாது என அக்கறை உள்ள கட்சி.

    முன்பெல்லாம் பொதுக்கூட்டம் என்றால் ஆண், பெண் என திரண்டு வந்து மூன்று மணி நேரம் ரசித்து பார்ப்பார்கள். இப்போது அது போன்றைய நிலைமை கிடையாது. முன்பெல்லாம் மைக் வைத்து பேசுவார்கள். இப்போது மக்களை நேரடியாக சென்று சந்திக்க உள்ளோம். வருகின்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் வழிமுறைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.

    இதன் மூலம் அவர்களுக்கு தி.மு.கவின் மேல் அதிக நாட்டம் ஏற்படும். தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத்தினரையும் 'தமிழ்நாடு' என்ற ஒரு குடையின் கீழ் சங்கமிக்க உள்ளோம்.

    மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது. உதாரணமாக கல்விக்கு நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. வெள்ள நிவாரண பணிக்கு ரூ.600 கோடியை கேட்டிருந்தோம். ஆனால் மத்திய அரசு இன்னும் ஒரு பைசா கூட வழங்கவில்லை.

    கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க. இந்தியை எதிர்க்கிறது.மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம்.
    • நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தி.மு.க. சார்பில் இன்றைக்கு நான் தொடங்கி வைத்தேன். இன்று தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.

    38 வருவாய் மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அவரவர்கள் அந்தந்த பகுதிகளில் ஊடகங்களை சந்தித்து பேசுவார்கள்.

    நாளை தமிழ்நாட்டில் 78 மாவட்டங்கள் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    ஜூலை 7-ந்தேதி முதல் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறோம். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என எல்லோரும் அவரவர்கள் சொந்த வாக்குச்சாவடிகளை சார்ந்த வீடுகளுக்கு நேரில் செல்வார்கள். இதற்காக தி.மு.க. ஐ.டி.விங் சார்பில் தொகுதிக்கு ஒருவர் வீதம் 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    நன்கு பயிற்சி பெற்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் மண், மானம் காக்க மக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் நோக்கமாகும்.

    தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசு இழைக்கும் அநீதிகளை, எதிர்த்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதை எதிர்த்து போராட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழ்நாடும் தமிழகமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும் என்று சொல்லி விட்டு பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.

    எனவே ஒன்றிய அரசை எதிர்க்க நெஞ்சுரம் உள்ள அரசியல் கட்சி தேவை. அதன் இயக்கமாகதான் ஓரணியில் தமிழ்நாடு என்று இயக்கமாக தொடங்கி உள்ளோம்.

    கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு என்பது மூலம் என்ன விஷயங்களை மக்களிடம் சொல்ல போகிறீர்கள்?

    பதில்:- ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம். அதே நேரத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்ல இருக்கிறோம்.

    எங்கள் சாதனைகள் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் அதை நினைவுப்படுத்தி துண்டு பிரசுரங்களை கொடுக்க இருக்கிறோம். அதே நேரத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியும் இணைந்து நடத்தப்படும்.

    கேள்வி:- சிவகங்கை விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்களே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?

    பதில்:- தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பானவர்களை கைது செய்து இருக்கிறோம். இன்றைக்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- உறுப்பினர் சேர்க்கையில் எதிர்க்கட்சியை சேர்ந்த குடும்பங்களின் வீடுகளுக்கு செல்வார்களா?

    பதில்:- நிச்சயமாக விருப்பம் உள்ளவர்களை சேர்ப்போம்.

    கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் செல்வார்களா?

    பதில்:- அது அங்குள்ள சூழ்நிலையை பொறுத்தது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு செல்வார்கள்?

    கேள்வி:- எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி முதல் மக்களை சந்திக்க செல்கிறாரே?

    பதில்:- அவர் இப்போதுதான் மக்களை சந்திக்க போகிறார்.

    கேள்வி:- ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தீங்கு இழைத்து வருகிறது. அதை எதிர்த்து நீங்கள் போராடுவது மக்களுக்கு தெரியுமா?

    பதில்:- மக்களுக்கு நன்றாக தெரியும்.

    கேள்வி:- தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கிறதே? இதை தி.மு.க. எப்படி சமாளிக்கும்?

    பதில்:- அது தேர்தல் தேதி அறிவித்ததும் நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதை பேசி சமாளித்து விடுவோம்.

    கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேருமா?

    பதில்:- இப்போதுள்ள சூழ்நிலையை பொறுத்தவரை வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பு வரக்கூடிய நேரத்தில் அது எப்படி சேர்ப்பது என்ற நிலையும் வரும். அதை அப்போது முடிவு செய்வோம்.

    கேள்வி:- 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மிக 3 முக்கிய திட்டம் என்று எதை சொல்வீர்கள்?

    பதில்:- காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் செல்லும் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் என பல திட்டங்களை சொல்லலாம்.

    கேள்வி:- உடன் பிறப்பே வா சந்திக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக உள்ளதா? தொடர்ந்து சந்திக்கிறீர்களா?

    பதில்:- ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்தேன். ஒரு தொகுதிக்கு 1½ மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவிடுகிறேன். 234 தொகுதி நிர்வாகிகளிடம் அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பேன்.

    கேள்வி:- 30 சதவீத வாக்காளர்கள் சேர்க்க இலக்கு வைத்து இருக்கிறீர்கள்? அப்படியானால் இளைஞர்கள், இளம்பெண்களை கவர என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

    பதில்:- நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம். 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வாக்காளர்கள் இலக்கு எவ்வளவு?

    பதில்:- 30 சதவீத வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் எங்கள் நிர்வாகிகள் 40 சதவீதம் வரை சேர்ப்போம் என்று சொல்லி உள்ளனர்.

    கேள்வி:- 2026 தேர்தலில் எவ்வளவு தொகுதிகளை வெல்ல இலக்கு வைத்து உள்ளீர்கள்?

    பதில்:- ஏற்கனவே 200 தொகுதிகளை வெல்வோம் என்று சொல்லி உள்ளோம். ஆனால் அதையும் தாண்டி வரும்.

    கேள்வி:- தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவேன் என்று அமித்ஷா கூறி இருக்கிறாரே?

    பதில்:- அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பிரதமரும் அடிக்கடி வர வேண்டும். அவர்கள் பொய் பேசி விட்டு செல்கிறார்கள். அது பொய் என்று மக்களுக்கு தெரியும். அது தேர்தல் நேரத்தில் லாபமாக எங்களுக்கு அமையும். அதே போல் கவர்னரையும் மாற்ற வேண்டாம் என்று சொல் கிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.

    ×