என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் தி.மு.க. கொள்கைகளை விளக்கி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் - துரைமுருகன்
    X

    ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் தி.மு.க. கொள்கைகளை விளக்கி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் - துரைமுருகன்

    • மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது.
    • மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

    வேலூர்:

    ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் பிரிந்து இருக்கக்கூடியவர்கள், ஒத்த கருத்துடையவர்கள், நம்மை விரும்பக் கூடியவர்கள் யார்? யார் என கண்டறிந்து தி.மு.கவின் கொள்கைகளை அவர்களுக்கு விளக்கி இந்த அணியில் சேர்க்க வேண்டும். இது முதல் பாகம். இதை ஒருநாள் செய்துவிட்டு போய்விடுவதில்லை. ஒரு மாத காலத்திற்கு மேலாக உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெறும். ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏன் பொதுச்செயலாளர் ஆகிய நானே தலைவரின் ஆணையை ஏற்று பணியை செய்வோம்.

    தி.மு.க வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. சமுதாய போராளி கட்சி. இனம், மொழி, மானத்தை கட்டி காத்திடும் கட்சி. யாருக்கும் இரண்டாம் தர மாநிலமாக தமிழ்நாடு போகக்கூடாது என அக்கறை உள்ள கட்சி.

    முன்பெல்லாம் பொதுக்கூட்டம் என்றால் ஆண், பெண் என திரண்டு வந்து மூன்று மணி நேரம் ரசித்து பார்ப்பார்கள். இப்போது அது போன்றைய நிலைமை கிடையாது. முன்பெல்லாம் மைக் வைத்து பேசுவார்கள். இப்போது மக்களை நேரடியாக சென்று சந்திக்க உள்ளோம். வருகின்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் வழிமுறைகளை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.

    இதன் மூலம் அவர்களுக்கு தி.மு.கவின் மேல் அதிக நாட்டம் ஏற்படும். தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத்தினரையும் 'தமிழ்நாடு' என்ற ஒரு குடையின் கீழ் சங்கமிக்க உள்ளோம்.

    மத்திய அரசு, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது. உதாரணமாக கல்விக்கு நிதியை இன்னும் விடுவிக்கவில்லை. வெள்ள நிவாரண பணிக்கு ரூ.600 கோடியை கேட்டிருந்தோம். ஆனால் மத்திய அரசு இன்னும் ஒரு பைசா கூட வழங்கவில்லை.

    கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. தி.மு.க. இந்தியை எதிர்க்கிறது.மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. மகாராஷ்டிராவில் மும்மொழி கல்வி திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×