என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவலாளி மரணம் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
- ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம்.
- நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை தி.மு.க. சார்பில் இன்றைக்கு நான் தொடங்கி வைத்தேன். இன்று தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடக்கும்.
38 வருவாய் மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அவரவர்கள் அந்தந்த பகுதிகளில் ஊடகங்களை சந்தித்து பேசுவார்கள்.
நாளை தமிழ்நாட்டில் 78 மாவட்டங்கள் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
ஜூலை 7-ந்தேதி முதல் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறோம். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என எல்லோரும் அவரவர்கள் சொந்த வாக்குச்சாவடிகளை சார்ந்த வீடுகளுக்கு நேரில் செல்வார்கள். இதற்காக தி.மு.க. ஐ.டி.விங் சார்பில் தொகுதிக்கு ஒருவர் வீதம் 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நன்கு பயிற்சி பெற்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் உள்ள பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மண், மானம் காக்க மக்கள் எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதுதான் இதன் நோக்கமாகும்.
தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து ஒன்றிய அரசு இழைக்கும் அநீதிகளை, எதிர்த்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதை எதிர்த்து போராட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழ்நாடும் தமிழகமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும் என்று சொல்லி விட்டு பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.
எனவே ஒன்றிய அரசை எதிர்க்க நெஞ்சுரம் உள்ள அரசியல் கட்சி தேவை. அதன் இயக்கமாகதான் ஓரணியில் தமிழ்நாடு என்று இயக்கமாக தொடங்கி உள்ளோம்.
கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு என்பது மூலம் என்ன விஷயங்களை மக்களிடம் சொல்ல போகிறீர்கள்?
பதில்:- ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதை சொல்ல இருக்கிறோம். அதே நேரத்தில் தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்ல இருக்கிறோம்.
எங்கள் சாதனைகள் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் அதை நினைவுப்படுத்தி துண்டு பிரசுரங்களை கொடுக்க இருக்கிறோம். அதே நேரத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியும் இணைந்து நடத்தப்படும்.
கேள்வி:- சிவகங்கை விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்களே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?
பதில்:- தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பானவர்களை கைது செய்து இருக்கிறோம். இன்றைக்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- உறுப்பினர் சேர்க்கையில் எதிர்க்கட்சியை சேர்ந்த குடும்பங்களின் வீடுகளுக்கு செல்வார்களா?
பதில்:- நிச்சயமாக விருப்பம் உள்ளவர்களை சேர்ப்போம்.
கேள்வி:- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும் செல்வார்களா?
பதில்:- அது அங்குள்ள சூழ்நிலையை பொறுத்தது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு செல்வார்கள்?
கேள்வி:- எடப்பாடி பழனிசாமி 7-ந்தேதி முதல் மக்களை சந்திக்க செல்கிறாரே?
பதில்:- அவர் இப்போதுதான் மக்களை சந்திக்க போகிறார்.
கேள்வி:- ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தீங்கு இழைத்து வருகிறது. அதை எதிர்த்து நீங்கள் போராடுவது மக்களுக்கு தெரியுமா?
பதில்:- மக்களுக்கு நன்றாக தெரியும்.
கேள்வி:- தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்கிறதே? இதை தி.மு.க. எப்படி சமாளிக்கும்?
பதில்:- அது தேர்தல் தேதி அறிவித்ததும் நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். அதை பேசி சமாளித்து விடுவோம்.
கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேருமா?
பதில்:- இப்போதுள்ள சூழ்நிலையை பொறுத்தவரை வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பு வரக்கூடிய நேரத்தில் அது எப்படி சேர்ப்பது என்ற நிலையும் வரும். அதை அப்போது முடிவு செய்வோம்.
கேள்வி:- 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மிக 3 முக்கிய திட்டம் என்று எதை சொல்வீர்கள்?
பதில்:- காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் செல்லும் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் என பல திட்டங்களை சொல்லலாம்.
கேள்வி:- உடன் பிறப்பே வா சந்திக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக உள்ளதா? தொடர்ந்து சந்திக்கிறீர்களா?
பதில்:- ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்தேன். ஒரு தொகுதிக்கு 1½ மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவிடுகிறேன். 234 தொகுதி நிர்வாகிகளிடம் அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பேன்.
கேள்வி:- 30 சதவீத வாக்காளர்கள் சேர்க்க இலக்கு வைத்து இருக்கிறீர்கள்? அப்படியானால் இளைஞர்கள், இளம்பெண்களை கவர என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
பதில்:- நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறோம். 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கேள்வி:- ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வாக்காளர்கள் இலக்கு எவ்வளவு?
பதில்:- 30 சதவீத வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் எங்கள் நிர்வாகிகள் 40 சதவீதம் வரை சேர்ப்போம் என்று சொல்லி உள்ளனர்.
கேள்வி:- 2026 தேர்தலில் எவ்வளவு தொகுதிகளை வெல்ல இலக்கு வைத்து உள்ளீர்கள்?
பதில்:- ஏற்கனவே 200 தொகுதிகளை வெல்வோம் என்று சொல்லி உள்ளோம். ஆனால் அதையும் தாண்டி வரும்.
கேள்வி:- தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவேன் என்று அமித்ஷா கூறி இருக்கிறாரே?
பதில்:- அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். பிரதமரும் அடிக்கடி வர வேண்டும். அவர்கள் பொய் பேசி விட்டு செல்கிறார்கள். அது பொய் என்று மக்களுக்கு தெரியும். அது தேர்தல் நேரத்தில் லாபமாக எங்களுக்கு அமையும். அதே போல் கவர்னரையும் மாற்ற வேண்டாம் என்று சொல் கிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உடன் இருந்தனர்.






