என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீர்வரத்து அதிகரிப்பால் 65 அடியை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக மீண்டும் உயர்ந்துள்ளது.
- தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் இன்று 4ம் நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கியதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்து உபரி நீர் திறக்கப்பட்டதுடன் வைகை அணைக்கும் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதன் பின் படிப்படியாக மழை குறைந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதுடன் தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக மீண்டும் உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1976 கன அடி. திறப்பு 1867 கன அடி. இருப்பு 4697 மி.கன அடியாக உள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் 64.47 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடப்படும்.
தற்போது தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஓரிரு நாளில் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 1744 கன அடி. குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4513 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40 அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 60.35 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது.
தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் இன்று 4ம் நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேகமலை அருவியிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆடி அமாவாசை என்பதால் அருவிக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட வருவார்கள். இதனால் அதற்கு முன்பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






