என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் தொடரும் சாரல் மழையால் பனி மூட்டம் - கடும் குளிர்
- ஏற்காட்டில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழையாக பெய்தது.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய மழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கன மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .
தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. பின்னர் இரவு முழுவதும் சாரல் மழையாக பெய்தது . தொடர்ந்து ஏற்காட்டில் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதே போல வாழப்பாடி, ஏத்தாப்பூர் , ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 3.2, வாழப்பாடி 16, ஆனைமடுவு 7, ஆத்தூர் 9, கெங்கவல்லி 4, தம்மம்பட்டி 5, ஏத்தாப்பூர் 14, கரியகோவில் 4, வீரகனூர் 2, நத்தக்கரை 7, சஙககிரி 3, எடப்பாடி 5.4, ஓமலூர் 10.5, டேனீஸ்பேட்டை 18 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 129.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.






