என் மலர்
உள்ளூர் செய்திகள்

பந்தலூர் அருகே யானை மிதித்து மூதாட்டி பலி
- பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.
- காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெல்லியாளம் டேன்டே குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் இன்று அதிகாலை நேரத்தில் தண்ணீர் எடுப்பதற்காக குடத்துடன் வீட்டுக்கு வெளியே வந்தார்.
அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென டேன்டீ குடியிருப்புக்கு வந்தது. இதனை பார்த்து லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
இருந்தபோதிலும் மூதாட்டி லட்சுமியை சுற்றி வளைத்த யானை தும்பிக்கையால் பிடித்து கீழே தள்ளியது. பின்னர் அவரை சரமாரியாக மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பெரிதாக சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
பொதுமக்களை திரண்டு வந்ததை பார்த்த யானை அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்து மீண்டும் வனத்துக்குள் சென்று விட்டது.
நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் காட்டு யானை மிதித்து மூதாட்டி பலியான சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் தடயங்களை ஆய்வு செய்தனர். பின்னர் மூதாட்டியை கொன்றுவிட்டு தப்பி சென்ற யானையை கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனத்துக்குள் உணவு பற்றாக்குறை காரணமாக காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கின்றன. எனவே மலைஅடிவார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உளளனர்.
நெல்லியாளம் டேன்டீ குடியிருப்பு பகுதியில் மனித-விலங்கு மோதலை தடுக்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






