என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 6 முறை நிரம்பியது. இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 35 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 29 ஆயிரத்து 300 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரிடெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் 28 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தமிழ்நாட்டிலும் சில முக்கிய தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
    • தமிழக பா.ஜ.க.வினரிடையே இன்னும் ஒருங்கிணைப்பு இல்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷா நேரடியாக சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தி சென்றார்.

    இந்த கூட்டணி அமைந்த பிறகு அடுத்த கட்டமாக தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி 7 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த முடிவு செய்து உள்ளது. முதல் மாநாடு நெல்லையில் நடந்து முடிந்துள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகிறது.

    தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம் சாட்டி ராகுல் காந்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார். பீகாரில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினும் பங்கேற்றார். தமிழகத்திலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜ.க. அணிக்கு எதிரான அலையை உருவாக்க இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் முதல் கட்டமாக வருகிற 7-ந்தேதி வாக்கு திருட்டுக்கு எதிரான மாநாட்டை காங்கிரஸ் கட்சி நெல்லையில் நடத்துகிறது.

    எனவே தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரங்களை முறியடித்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி? இந்த கூட்டணி வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது எப்படி? என்பதை தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை அறிந்து மேற்கொள்ள டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது.

    இதற்காக ஆலோசனை நடத்த தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு உறுப்பினர்களை அவசரமாக டெல்லிக்கு அழைத்து உள்ளது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், பொன். ராதா கிருஷ்ணன், அண்ணாமலை, எச் ராஜா, கேசவ விநாயகன் ஆகியோர் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்று உள்ளார்கள். இன்று நண்பகலில் தமிழக குழுவினருடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இந்த குழுவில் ஏற்கனவே டெல்லியில் இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகன், அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ஏற்கனவே வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிக்க பா.ஜ.க.வும் அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த காலங்களில் வாக்குத் திருட்டுகளை எப்படி அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது பற்றிய ஆதாரங்களையும் திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இதில் தமிழ்நாட்டிலும் சில முக்கிய தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு தொகுதியில் சுமார் 19000 வாக்குகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் நடத்தியுள்ள முறைகேடுகளையும் ஆதாரத்துடன் வெளியிட்டு அவர்களின் பிரசாரங்களை முறியடிக்கவும் திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றியும் தமிழக குழுவினருடன் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் பா.ஜ.க.-அ.தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் கூட்டணியில் மாற்றம் வரும் என்று பரப்பப்படும் வதந்திகளையும் முறியடிப்பது தொடர்பாக அமித்ஷா ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க.வினரிடையே இன்னும் ஒருங்கிணைப்பு இல்லை. கோஷ்டி பூசல் இருக்கிறது என்ற விபரமும் டெல்லி தலைமைக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அமித்ஷா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென்று தமிழக குழுவினரை டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா பேசு இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை.
    • நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான்.

    நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தெருநாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தீர்வு ரொம்ப சிம்பிள்-ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னன்னு தெரிந்தவர்கள், கழுதை எங்க காணோம் என்று எங்கேயாவது கவலைப்படுகிறார்களா?

    கழுதைகள் எல்லாம் காணாமல் போய்டுச்சு? நமக்காக எவ்வளவு பொதி சுமைந்திருக்கு? இப்ப பார்க்கிறதே இல்லையே... கழுதைய காப்பத்தணும்னு யாராவது பேசுறாங்களா?. எல்லா உயிர்களையும் காப்பத்தணும்னு, எவ்வளவு முடியுமோ காப்பத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்றார்.

    மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதை பா.ஜ.க. விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கமல்ஹாசன், ஒருத்தர் நல்லது செய்யும்போது எந்தக்கட்சி என்று நான் பார்த்ததில்லை. நாட்டுக்கு நல்லது நடக்குது என்றால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியது தான். நாளைக்கு அவர்கள் நல்லது செய்தால் சொல்லத்தான் போகிறோம் என்றார். 

    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி சசிகலாவை சந்தித்துள்ளார்.
    • செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

    இதனால் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும்பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க.வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் செங்கோட்டையன் அடிக்கடி அவரை சந்தித்துள்ளார். செங்கோட்டையனுடனான சந்திப்புக்கு பின்னரே சசிகலா காட்டமான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியுள்ள செங்கோட்டையன், சந்திப்பின்போது அணிகள் இணைப்பு பற்றியே பேச வாய்ப்பு உள்ளது.

    சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.விற்குள் கொண்டுவர செங்கோட்டையன் காய் நகர்த்துவதாகவும், சசிகலாவுடனான செங்கோட்டையனின் நெருக்கமே இ.பி.எஸ். கோபத்திற்கு காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

    சசிகலா - செங்கோட்டையன் சந்திப்பை அறிந்தே இ.பி.எஸ். புறக்கணித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
    • ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.

    திருச்சி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.

    மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை தந்த அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விருந்தளித்து உபசரித்தார்.

    பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

    அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதையை அளிக்கப்படுகிறது.

    அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோவிலுக்குள் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். தொட ர்ந்து அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கிறார். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களையும் அவர் பார்வையிடுகிறார்.

    தரிசனம் முடிந்த உடன் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    • பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பற்றி பேசினார்.
    • எதிர்க்கட்சியினர் பிரதமர் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியது முற்றிலும் தவறானது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை, அனைத்து துறைகளில் வளர்ச்சி தேக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசினார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சியினர் பிரதமர் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியது முற்றிலும் தவறானது. இந்தப் பிரச்சனையில் எதிர்க்கட்சியினரின் அநாகரிகமான போக்கை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே காணப்படுகிறார்க்ள்.

    இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவீத நோயாளிகளுக்கு இன்புளூயன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.
    • ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது.

    இந்தியாவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 2-ந் தேதி நள்ளிரவு சூரசம்காரம் நடக்கிறது.

    4-ந் தேதி தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருவதுடன், தசரா திருவிழாவில் கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 21, 11 நாட்கள் என தங்களுக்கு ஏற்றவாறு என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து பின்பு கழுத்தில் அணிந்து கொள்வர்.

    தசரா திருவிழாவையொட்டி பாசி மாலை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதியில் தங்கி உள்ளனர். ரூ.30 முதல் ரூ.350 வரை வண்ண பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கபட்டுள்ளது. சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர்.

    தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து இதனை வாங்கிசெல்வதால் பாசி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. மேலும் தற்போது கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள் தினசரி குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    தருமபுரி:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தற்போது குறைந்தது.

    இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 108 கனஅடியாக வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரத்து 805 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    கபினி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 993 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 317 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 33 ஆயிரத்து 122 கனஅடி நீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தொடர்ந்து 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.
    • தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்று சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,800-க்கு விற்பனையானது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் வரலாற்றில் புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,805-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்துள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-09-2025- ஒரு கிராம் ரூ.137

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    29-08-2025- ஒரு கிராம் ரூ.131

    • நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
    • முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த முனியப்பன் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 28-ந்தேதி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யா ராஜா என்பவர் தனது பகுதியில் நடந்த பணிகளுக்கான நிதி சம்பந்தமான கோப்பினை கேட்டுள்ளார்.

    அப்போது இளநிலை உதவியாளர் முனியப்பன் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரம்யா ராஜா அவரிடம் ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் இல்லாதபோது அவரது அறைக்கு முனியப்பனை வரவழைத்து, அங்கிருந்த நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் முனியப்பனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

    முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

    மன்னிப்பு கேட்டால் போதுமா? என்று கேட்டதால் முனியப்பன் தானாகவே சென்று ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பிட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பா.ம.க.வின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு உள்ளது.
    • இதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படங்களுடன் பெயர் இடம் பெற்று இருக்கும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் நாளை(வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பேராசிரியர் தீரன் உள்பட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், தொடர்ந்து கட்சிக்கும், நிறுவனர், தலைவரான டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த, புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி நிருபர்களிடம் கூறுகையில், 2026 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும், தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் எங்களிடம் தெரிவித்தார் என்றார்.

    இதனிடையே தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க.வின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படம், பெயர் இடம்பெறவில்லை.

    இதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படங்களுடன் பெயர் இடம் பெற்று இருக்கும். ஆனால் தற்போது டாக்டர் ராமதாஸ் படம் மற்றும் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் எடுக்க உள்ளார் என்று பலரும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த சூழலில் உறுப்பினர் படிவம் மற்றும் அடையாள அட்டைகளில் அவரது படம் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×