என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது.

    ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில், குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    தடுப்புகளை தாண்டி கொட்டிய தண்ணீரானது, அடிவார பகுதியில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தது. அந்த தண்ணீர் திருமூர்த்தி அணையை அடைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 52 அடி தண்ணீர் உள்ளது.

    அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல இன்று 2-வது நாளாக பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான்.
    • நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான்.

    மதுரை:

    இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, பரமக்குடி செல்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் அவரிடம் நிருபர்கள் எழுப் பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்து?

    ப: சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்னவோ அப்படித்தான் பா.ஜ.க. இயங்கும். ஆர்.எஸ்.எஸ்.ல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்லிவிட போகிறார்களா? அவர்கள் வைத்திருக்கும் கொள்கையை கடைப்பிடிப்பார்கள். தெரியாத வடமாநிலத்தவரை தவிர இவர் தெரிந்தவராக இருக்கிறார். இதை தவிர இதில் பேச எதுவும் இல்லை.

    மரபுப்படி அந்த இடத்திற்கு வருவதற்காக அவருக்கு வாழ்த்துகள். பா.ஜ.க.வின் கொள்கைகளுடன் ஒத்துபோய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தி.மு.க. தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழிதான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித்தன்மை என்ன இருக்கிறது.

    குஜராத் கலவரத்தை தி.மு.க. கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள், இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான்.

    இல.கணேசன் ஐயாவின் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதையை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன.? மூப்பனார் ஐயாவின் மறைவிற்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை. எல்.முருகன் மற்றும் ஆளுநர் ரவியை கூட அனுப்பி இருக்கலாம். இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று என்ன உள்ளது.

    கே: சனிக்கிழமைகளை மட்டும் தேர்ந்தெடுத்து விஜய் பிரசாரம் மேற்கொள்வது குறித்து?

    ப: அது அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது.

    கே: திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து?

    ப: படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன?

    ப: கூட்டத்தை வைத்து கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான். ஊழல் லஞ்சமா, உண்மை நேர்மையா, பிள்ளைகள் வாழ்வதற்கு வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நான் பிள்ளைகள் வாழ நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசுடன் கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60 சதவீதம் கொள்ளை அடித்தால் இவர்கள் 40 சதவீதம் கொள்ளை அடிப்பார்கள் இதுதான் நடக்கப்போகிறது.

    கே: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து?

    ப: 17 ஆண்டுகளுக்கு முன்பாகவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அப்போது நமக்கு தெரியவில்லை. அதைப் போராடி தான் தடுப்போம், தரையில் எடுத்து முடித்துவிட்டு தற்போது கடலுக்குள் செல்கிறார்கள்.

    இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, இதற்கெல்லாம் பயப்படக்கூடாது.

    கே: விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது குறித்து?

    ப: எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ள பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

    கே: திருச்சியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து?

    ப: அது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக அமையும்.

    கே: ஆடு, மாடுகள் மாநாடுகளை தொடர்ந்து அடுத்தகட்ட மாநாடு என்ன?

    ப: ஆடு, மாடு மாநாடுகளை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல், எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார்.
    • சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர். கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.

    அண்மையில் டெல்லி சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசி இருந்தார்.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

    இத்தகைய சூழ்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் அவர் பங்கேற்கிறார்.

    சென்னை வரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. உட்கட்சி பூசல்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    • ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன்.
    • நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரம் எனக் கூறப்பட்ட ஓசூர் விருப்பமான நகரமாக உருவெடுத்தது.

    * கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன.

    * ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

    * 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடியில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது.

    * ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன்.

    * தொழிற்சாலைகள் ஓசூரை நோக்கி சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன.

    * ஓசூர் அறிவுசார் முனையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

    * வளர்ச்சியின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக ஓசூர் இருக்கிறது.

    * நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.
    • நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான்.

    பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ராமதாஸ் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது.

    * அன்புமணி தரப்பு கூட்டிய பா.ம.க. பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    * அன்புமணி பதவிகாலம் நீட்டிக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    * கட்சி விதிகளின் அடிப்படையில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார்.

    * கட்சி விதிகளின் படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரமில்லை.

    * நிர்வாக பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவரான அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம்.

    * பா.ம.க. என்ற ஜனநாயக அமைப்பில் விதிகளின் அடிப்படையில் தான் கட்சியை நடத்த முடியும்.

    * பா.ம.க. தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் இல்லை.

    * பா.ம.க.வின் தலைவர் அன்புமணி என்றே பயன்படுத்த வேண்டும்.

    * உளவு பார்க்கும் எண்ணம் எப்போதும் அன்புமணிக்கு இருந்தது இல்லை.

    * அன்புமணி உளவு பார்த்திருந்தால் கட்சியில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது.

    * வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது.

    * கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துகளை உங்களிடம் கூற வந்துள்ளேன்.

    * நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது ராமதாஸ் தரப்பு தான் என்றார். 

    • தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.
    • 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

    * தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாக ஓசூர் திகழ்கிறது.

    * தமிழ்நாடு தொழில் துறையில் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது.

    * அடுத்து வரக்கூடிய மாதங்களுக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு டார்கெட்.

    * 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என இலக்கு நிர்ணயம்.

    * தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    * கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொழில் வளர்ச்சியை ஓசூர் கண்டு வருகிறது.

    * தி.மு.க. ஆட்சியில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
    • இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

    சேலம், தாரமங்கலம் அருகே உள்ள ஓமலூரைச் சேர்ந்த 32 வயதான சரவணகுமார், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு. சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது.
    • மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.

    மதுரை:

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

    தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் இந்த சமூகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழ் சமூகம் ஒற்றுமையாக வேறுபாடு இன்றி வாழ வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். நாட்டுப்பற்று உள்ள ராணுவ வீரராக இருந்திருக்கிறார். அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை அடைகிறது.

    சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்பதால் நாட்டுக்கு என்ன பெருமை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவர் பதவி ஏற்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை. முன்னாள் துணை ஜனாதிபதி தன்கரை வெளியில் கொண்டு வர வேண்டும்.

    தேசம் முன்னேறுவதற்கு நேரு முதல் சோனியா காந்தி வரை கொண்டு வந்த திட்டங்கள் பின்னடைவை நோக்கி செல்கிறது. ராகுல் காந்தி பீகாரில் வாக்குத் திருட்டை பற்றி பேசியதை போல், குடியரசு துணைத்தலைவர் தேர்தலிலும் இங்கு எதுவும் வாக்கு திருட்டு நடந்திருக்கிறதா என பிரதமர் தான் சொல்ல வேண்டும்.

    அனைத்துக் கட்சிகளும் காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறக் கூடாது. விஜய்க்கு இருக்கும் அளவுகோல் தான் இ.பி.எஸ்.க்கும் இருக்கும் அது தான் எங்களின் வேண்டுகோள்.

    உறவாடி கெடுப்பது பா.ஜ.க.வின் மாடல். ஆமை புகுவதைப் போல பாஜக புகு மாநிலம் சிதைந்து போகும். அதன் பின்பு அதில் மக்கள் அதிகாரத்தில் கைவைத்து, திட்டத்தில் கை வைத்து, மக்களுக்கு சேர வேண்டியதை அம்பானி, அதானியிடம் கொடுப்பார்கள்.

    மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை இ.பி.எஸ். தான் ஆட்சியில் இருந்த போது வைக்காமல் அமைதியாக இருந்தார். அப்போதே அதை செய்திருக்கலாம். அரசியலுக்காக தானே பேசுகிறார். உண்மையிலேயே பற்று இருந்திருந்தால் தேர்தல் வரும் போது ஏன் பேச வேண்டும் முன்பே ஏன் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
    • தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீரின் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம். ஆய்வுப்பணிக்காக உச்சநீதிமன்ற வழிபாட்டுதல்படி 3 பேர் கொண்ட முதல் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்த வந்தனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதி களாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

    கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுக்கு வந்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர்வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக உள்ளது. வரத்து 1156 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5586 மி.கன அடியாக உள்ளது.

    துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்தனர். தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆய்வுக்குழு கூட்டம் முறையாக நடத்தி அறிக்கை அளிக்கப்படுவதில்லை. எனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டு காலமாக வைக்கப்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
    • ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அ.ம.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணி சார்பில் தர்மர் எம்.பி., நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. சார்பில் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், த.வெ.க. சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், மதுரை மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.தங்க பாண்டியன், கல்லணை, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மலர்விழி பாலா, மதன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், 24 எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்பட 8 ஆயிரத்து 400 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவை தவிர 45 பறக்கும் படை வாகனங்கள், நவீன கேமராவுடன் 2 டிரோன்கள் பாதுகாப்பு பணியில் உள்ளன.

    ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 28 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.
    • ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.

    அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி+ குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!' என உறுதி ஏற்கிறோம்!

    * நான், தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

    * நான், 'பெண்கள்- விவசாயிகள் - மீனவர்கள்- நெசவாளர்கள்- தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.



    • மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?
    • அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மறைமுகமாக தாக்கி விமர்சித்து இருந்தார். ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில்,

    பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள்; அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியைத் தரும். மூத்த முன்னோர்கள் இப்படிச் செய்தால், சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்?

    எடப்பாடியை அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மக்கள் மாற்றி விடுவார்கள்.ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

    ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனம் குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், அவருடைய அம்மாவே இறந்து கிடக்கிறார், அதை பார்க்க சொல்லுங்கள் என்றார்.

    இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமாரின் தாய் காலமானது குறித்து பேசியதற்கு மன்னிக்க வேண்டும். தன்னால் நேரில் செல்ல இயலவில்லை. அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்கள் அனைவரின் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார். 

    ×