என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
- திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென அறிவிப்பு.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
திமுக மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டுமென பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை.
- தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
"வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.
இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.
ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!
புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
இந்த நிலையில் தங்களுக்கு தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது என அன்புமணி தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என டாக்டர் ராமதாஸ் தரப்பினர் கூறிவரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் தரப்பினர் இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தை அணுகினர்.
இன்னும் 2, 3 நாட்களில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மறுநாள் (புதன்கிழமை) வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்தி, சேலம் எம்.எல்.ஏ., அருள், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார் என்றும் எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு அணிகளிலும் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
- அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.
- தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.
சேலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மழையின் காரணமாக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர். பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன்.
* எடப்பாடி பழனிசாமி உடன் அரசியல் எதுவும் பேசவில்லை.
* அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக காலம் வரும்போது சொல்கிறேன்.
* அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.
* தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி.
* விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது.
* கூட்டம் வருவதை வைத்து தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என விஜய் சொல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.
- 'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூஆர் கோடு பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னைப் பெருநகரப் பகுதிக்கான (5.904 சதுர கி.மீ.) விரிவான போக்குவரத்து திட்டம் 2023-2048. 'மக்களும் பொருட்களும் தங்கு தடையின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த, நிலையான, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்துதல்' என்ற தொலைநோக்குப் பார்வையுடன், நகர்ப்புற போக்குவரத்து முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த புதிய செயலி அமைகிறது.
இதன் மூலம் விரிவான போக்குவரத்து திட்டம் மூலம் பயண நேரத்தை மற்றும் பயண செலவைக் குறைத்தல், நம்பகமான, விரைவான பொதுப் போக்குவரத்தை வழங்குதல், பல்வகை பொதுபோக்குவரத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல், குறைந்த போக்குவரத்து உமிழ்வு மற்றும் பயணத்தேவை மேலாண்மையை ஊக்குவித்தல் போன்றவை கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன் மொபைல் செயலியை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.
இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும். யூபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும். ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
'சென்னை ஒன் செயலி' பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
- மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில் உள்ள வயல்வெளி அருகே மின்கம்பத்தில் டிரான்ஸ் பார்மர் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பு துண்டித்து மின்கம்பத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரை தனியாக கழற்றி திருடி சென்றனர்.
சிறிது தூரத்தில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியை வீசிவிட்டு அதில் இருந்த செம்புகம்பிகள் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர்.
இன்று காலை அப்பகுதி மக்கள் வந்தபோது டிரான்ஸ்பார்மர் திருடு போய் இருந்ததும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.
அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டிரான்பார்மர் திருடு சம்பந்தபமாக மின்வாரிய அதிகாரிகள் திருவள்ளூர் தாலுக்காபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.
- விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார்.
த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பிரசாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
* ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களை சந்திக்கலாம். மக்களிடத்திலே அவர்கள் ஆதரவை கேட்கலாம்.
* தி.மு.க.விற்கும், த.வெ.க.விற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார்.
* விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். அது அவருடைய நம்பிக்கை.
* விஜய் பரீட்சை எழுதட்டும், அவர் என்ன மதிப்பெண் எடுக்கிறார் என்று பார்த்துவிட்டு பிறகு அதைப்பற்றி விவாதிக்கலாம்.
* விஜய் இப்போதுதான் படித்துக்கொண்டு இருக்கிறார். பரீட்சை எழுதி மதிப்பெண் பெறட்டும்.
* ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் மாணவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பது மதிப்பெண் வந்தால்தான் நமக்கு தெரியும்.
* மாணவராக இருந்து விஜய் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சி, மாநிலக்கட்சி என அவரவர்களுக்கு உரிய பதில்களை சொல்கிறார்கள்.
* அ.தி.மு.க. தான் தி.மு.க.வை வீழ்த்துகிற சக்தியும், ஆற்றலும், வலிமையும், அனுபவமும், கிளைக்கழகமும், தொண்டர்களும், மக்கள் செல்வாக்கும் கொண்ட கட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தி.மு.க.வை வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
- காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர்:
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உள்ளது.
அதன்படி இன்று மகாளய அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சையில் கல்லணை கால்வாய் படித்துறையிலும் திரளான பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கும்பகோணம் மகாமகக்குள கரையிலும் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலிலும், கோடியக்கரை ஆதிசேது கடலிலும், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மணிக்கர்ணிகை தீர்த்தத்திலும் புனித நீராடி வழிபட்டனர்.
பச்சரிசி, எள், காய்கறிகள், அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களை வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மணிக்கர்ணிகையை தீர்த்தத்தில் இருந்து மோட்டார் மூலம் பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. அமாவாசையை ஒட்டி வேதாரண்யம் காவல்துறையினர், கடலோர காவல் நிலைய காவலர்கள், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் வேதாரணயம் கோடிக்கரைக்கு பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
- ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
- அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.
ராமேசுவரம்:
புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.62 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணையில் 91.28 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 9 ஆயிரத்து 731 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 11 ஆயிரத்து 397 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.28 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை.
- நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுளால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 75 லட்சம் பேர் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 3 ஆயிரத்து 937 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக 15. 52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். ஆனால் இந்த தேர்வு சரியாக நடத்தப்படவில்லை.
தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. கேள்வித்தாள் அவுட் ஆகியுள்ளது. இதற்கு காரணமான தேர்வு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை கண்டித்து தான் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
ஆங்கில வழியில் எழுதியவர்களுக்கு எளிமையான கேள்விகளும், தமிழிலில் எழுதியவர்களுக்கு ஏன் கடினமான கேள்விகளையும் கேட்க வேண்டும். 6 முதல் 10ம் வகுப்பு வரை கேள்வி கேட்கப்படும் என்று கூறிவிட்டு, அதற்கு மேற்பட்ட கல்வி பாடத்தில் இருந்து கடினமான கேள்வி ஏன் கேட்க வேண்டும்.
தமிழ்நாடு தேர்வு ஆணையத்தின் இந்த முறைகேட்டால் தற்போது பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த மாநில அரசு என்ன பதில் கூறப்போகிறது. அதே நேரம் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும் , தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை, மின்துறை போன்ற பலதுறைகளில் ரூ7 லட்சம் முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கி கொண்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேட்டிற்கு யார் காரணம். 58 வயதில் ஓய்வு பெற வேண்டியவர்களை ஓய்வூதியம் கொடுக்க வழியில்லாமல் 60 வயது வரை வேலை பாருங்கள் என்கின்றனர். அப்படியானால் 2 ஆண்டுகள் தேர்வு எழுதாமல் காத்திருப்பவர்களின் நிலை என்னவாகும். முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும். கருணை அடிப்படையில் மீண்டும் பணி புரிவதற்கு ஏன் கொடுக்க வேண்டும். இதை யார் தட்டி கேட்பது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி முறைகேடு நடைபெறக்கூடாது என்பதை பொதுக்கூட்டம் மூலம் அரசிற்கு முன் வைக்கிறோம். தேர்வில் தோல்வி அடைந்த பலர் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். அதனால் இந்த பெரம்பலூரை தேர்வு செய்தேன்.
நான் தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டே தான் இருக்கிறேன். நான் எழுதி வைத்து படிக்கிறவன் இல்லை. இதயத்துல இருந்து பேசுறேன். தனக்கு ஒரு பிரச்சனை வரும்போது தான் வீதிக்கு வர்றாங்களே தவிர, பொதுவான மக்களின் பிரச்சனைக்கு கற்ற பிள்ளைகள், கற்றறிந்தவர்கள் வந்து களத்துல நின்று அதை தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறது இல்லை.
அதனால அது, இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு நமக்கான சரியான தலைமையை தேர்வு செய்து, சரியான அதிகாரத்தை நிறுவ வேண்டும். இல்லையென்றால் அடுத்த தலைமுறையும் இதே மாதிரி வீதியில் நின்று போராடி கொண்டு இருக்க வேண்டும். தற்போது நடைபெறும் பொதுக்கூட்டம் தி.மு.க.வுக்கு எதிராக தான் நடத்தப்படுகிறது.
விஜய் பா.ஜ.க. கொள்கை எதிரி, தி.மு.க. அரசியல் எதிரி என்கிறார். கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடுன்னு கேட்டா விளக்கம் சொல்ல விஜய்க்கு தெரியணும். இல்லையென்றால் பேசக்கூடாது. விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்க்காதீங்க, கூட்டம் எல்லாருக்கும் வரும்.
நடிகை நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடைக்கு திறப்பு விழாவுக்காக வந்தபோது 60 ஆயிரம் பேர் கூடினர். அதே நேரம் பக்கத்தில் வெறும் 40 விவசாயிகள் போராடி கொண்டிருந்தார்கள். வடிவேலுக்கு வராத கூட்டமா. இல்ல விஜயகாந்திற்கு வராத கூட்டமா. கூட்டம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க கூட்டம் வரும். அந்த படம் நல்லா இருந்தா அடுத்த காட்சியில் அதே கூட்டம் இருக்கும்.
ரொம்ப நல்லா இருந்தா அதற்கு அடுத்த காட்சியிலும் அதே கூட்டம் இருக்கும். இல்லைன்னா அடுத்த கட்டத்தில் திரையரங்கு ஈ ஆட்டிடும். விஜய்யை பார்க்க கூடுவார்கள். அவர் பேசுறதை கேட்க கூட மாட்டார்கள். என்னை பார்க்க வரமாட்டார்கள். நான் என்ன பேசுறான்னு கேட்க கூடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று கோவையில் உள்ள மாலில் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது.
- இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.
நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசிக்கொண்டிருக்கும்போதே பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் மேடையில் ஏறி தனுஷை கட்டிபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது 'ஒரே ஒரு ஃபோட்டோ..' என ரசிகர் வைத்த கோரிக்கையை ஏற்று தனுஷ்அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . பின்னர், பவுன்சர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் நிகழ்ச்சியில் சிறுதிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.






