என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
    • கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

    கோவை:

    சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.

    ஈஷா ஆதியோகி வளாகத்தில் 17 ஆவது ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப்போட்டிகள் நேற்று (21/09/25) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுத்தொகையையும் வழங்கினர்.

     

     

    இவ்விழாவில் பேசிய அமைச்சர் "இந்த விழாவை பார்க்கும் போது, இதன் பின்பு இருக்கும் சத்குருவின் தொலைநோக்கு பார்வையை உணர முடிகிறது. ஈஷா கிராமோத்சவம் மூலம் சத்குருவின் முயற்சிகள், கிராமங்களில் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் நம் தேசத்தை சுயசார்பு மற்றும் விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு ஆகும்.

    கிராமப்புறங்களில் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்க சத்குரு உதவ வேண்டும். எங்களுக்கு இதில் வழிகாட்ட ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். பாரதத்தின் உண்மையான திறமைகள் கிராமங்களில் தான் இருக்கிறது. அதே போன்று போதை ஒழிப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளிலும் ஈஷா உதவ வேண்டும்" எனக் கூறினார்.

    விழாவில் சத்குரு பேசுகையில், "நம் மக்கள் உற்சாகமான, வலிமையான, துடிப்பான, திறமையான, ஊக்கமுள்ளவர்களாக இருந்தால், நாம் இந்த பூமியிலேயே மிகப்பெரிய அற்புதமான சமூகமாக இருக்கலாம். ஆனால், மக்களை உடல் ரீதியாக பலவீனமான, மனரீதியாக குழப்பமான, கவனக்குறைவான மற்றும் திறமை, தகுதி, திறன்கள் இல்லாத சமூகமாக விட்டுவிட்டால், நாம் பெரிய பேரழிவாக இருப்போம்.

     

    இதுவே சரியான நேரம், நம்மிடம் இருப்பது பெரும் மக்கள்தொகை, நம் மக்களில் 50% இப்போது 30 வயதுக்குக் கீழ் உள்ளனர். அவர்களைத் திறம்படுத்தி, குறிப்பிட்ட உற்சாகத்தை ஏற்படுத்தினால், இந்த நாட்டுடன் எந்த நாடும் போட்டியிட முடியாது. உற்சாகமான மனிதர்களை நீங்கள் உருவாக்கி விட்டால் அவர்களை யாரும் நிறுத்த முடியாது.

    உற்சாகமான மனிதர்கள் மற்றும் இணைந்து செயல்படும் தன்மையை உருவாக்க வேண்டும். விளையாட்டு இதனை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் உருவாக்கும். ஈஷா கிராமோத்சவம் 2028 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 28 மாநிலங்களிலும் நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்" எனக் கூறினார்.

    சாய்னா நேவால் பேசுகையில், "இங்கு இருக்கும் 15, 000-க்கும் மேற்பட்ட மக்களின் உற்சாகம் என்னால் நம்ம முடியவில்லை. பல தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளோம். ஆனால் இது போன்ற உற்சாகமான சூழல் கிரிக்கெட்டில் நடக்கும் அதன் பிறகு இங்கு தான் நடக்கிறது என அமைச்சரிடம் கூற நினைத்தேன். நம் தேசத்தில் விளையாட்டை வளர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஈஷா கிராமோத்சவம் மூலம் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்கும் சத்குருவிற்கு நன்றி" எனக் கூறினார்.

     

    செஸ் கிராண்ட் மாஸ்டர் வைசாலி பேசுகையில், "சத்குருவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி தோல்விகளை கடந்து களத்தில் விளையாடியதே வெற்றி தான். எனக்கு செஸ் விளையாட்டு, வெற்றி தோல்வி என்பதை தாண்டி என்னை வளர்த்துக் கொள்ள உதவியுள்ளது. வெற்றி தோல்விகளை எவ்வாறு சமமாக எடுத்துக்கொள்வது, சவாலான சூழல்களில் அமைதியாக நடந்து கொள்வது போன்றவற்றை விளையாட்டு கற்றுத் தரும்." எனக் கூறினார்.

    17 ஆவது ஈஷா கிராமோத்சவம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.

    ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஆதியோகியில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் இறுதிப் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தமசோழபுரம் அணி வென்றது. கர்நாடகாவை ஹெகதிஹள்ளி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த படகணுரூ கிராம அணி முதல் வென்றது. கோவையை சேர்ந்த தேவராயபுரம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாரா வாலிபால் போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதல் இடத்தையும், கன்னியாகுமரி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

    வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகளில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு முறையே ₹5,00,000, ₹3,00,000, ₹1,00,000, ₹50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. மொத்த பரிசுத்தொகையாக ₹67 லட்சம் வழங்கப்பட்டது.

    இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.

    இவ்விளையாட்டு திருவிழாவின் இறுதிப்போட்டி மற்றும் நிறைவு நாளை முன்னிட்டு ஆதியோகி முன்பு மிகப் பிரம்மாண்டமான முறையில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனுடன் காலை முதல் மாலை வரை 6 மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இத்திருவிழாவில் வண்ண கோலப் போட்டி, சிலம்ப போட்டி, கிராமிய சமையல் போட்டி மற்றும் 20-க்கும் மேற்பட்ட வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைப்பெற்றன. வண்ண கோலப்போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு இடங்களை வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புடவை பரிசாக வழங்கப்பட்டது. இதனுடன் 6 மாநில பாரம்பரிய உணவுகளை கொண்ட உணவு அரங்குகளும் இடம்பெற்று இருந்தன.

    இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார்.
    • புது பொருள் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும்.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு' என்ற தீர்மான ஏற்பு கூட்டம் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து அவர் நிற்க வேண்டியதுதானே? புது பொருள் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும்.

    நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் தி.மு.க. விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும்? ஏனென்றால் தி.மு.க.விற்கு அவர் வந்து விடுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 9,500 கனஅடி வந்தது. இன்று 2-வது நாளாக அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நடிகர்கள் நாசர், பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    மறைந்த நடிகர் ஏம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் நடிகர்கள் நாசர், பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் மறைந்த கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்களுடைய மனைவி கீதா ராதா மறைவுக்கு இழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைக் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,360-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 148 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

    18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    17-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 82,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    19-09-2025- ஒரு கிராம் ரூ.143

    18-09-2025- ஒரு கிராம் ரூ.141

    17-09-2025- ஒரு கிராம் ரூ.142

    • காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்பு.
    • வருகிற 25-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

    வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வருகிற 25-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • கல்லூரி பாதை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே. சாலை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஐடி காரிடார்: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மாகாலனி, வெங்கடேஸ்வராநகர், சீவரம், கால்வாய்புரம், பாலமுருகன் தோட்டம், செயலககாலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்ககாலனி, ராஜீவ்காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம்நகர், கந்தன்சாவடி, சந்தோஷ்நகர், பால்ராஜ்நகர், காந்திநகர், வீரமாமுனிவர் தெரு, இளங்கோநகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, கவிந்தன்நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்காரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர்நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சி.எல்.ஆர்.ஐ.நகர், ரூகி காம்ப்ளக்ஸ்.

    சேத்பட்: மெக்நிக்கல்ஸ் சாலை, நௌராஜி சாலை, குருசாமி சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, முத்தையப்பா தெரு, அருணாச்சலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார்கோவில் தெரு, கந்தன் தெரு, அப்பாராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்ராயன் தெரு, யாதவா தெரு, கிழக்கமாடத் தெரு, சபாபதி தெரு, வள்ளலார் தெரு, வி.வி.கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, சாஹிப் தெரு, தெற்கு கசரத் தோட்டம், வடக்கு அரச தோட்டம், வாசு தெரு, ராஜ ரத்தினம் தெரு, சுப்பிரமணியம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியாள் தெரு, டெலிபோன் குவாட்டர்ஸ், போஸ்டல் குவாட்டர்ஸ், ஹைல்ஸ் சாலை, லட்சுமி சாலை, ஆர்பிஐ குவாட்டர்ஸ், திருவீதி அம்மன் தெரு, வீரராகவன் தெரு.

    கல்லூரி சாலை: கல்லூரி பாதை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே. சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2வது தெரு, நவாப் ஹபிபுல்லா 1, 2வது அவென்யூ, பைக்ராஃப்டி கார்டன் தெரு.

    ஆழ்வார்திருநகர்: ஆர்.கே.நகர் பிரதான சாலை, இந்திராகாந்தி சாலை, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, தாகூர் தெரு, சிண்டிகேட் காலனி, பாலாஜிநகர், திருமலைநகர்.

    தில்லைகங்காநகர்: ஆண்டாள்நகர் 1வது பிரதான சாலை, விரிவாக்கம், மற்றும் 1 முதல் 5 வது குறுக்கு தெரு, கிருஷ்ணராஜாநகர் 1 முதல் 4வது தெரு, மற்றும் விரிவாக்கம், பிருந்தாவன்நகர் 1 முதல் 7 வது தெரு மற்றும் விரிவாக்கம், நேதாஜி காலனி 1வது பிரதான சாலை மற்றும் 1, 2வது குறுக்கு தெரு, ரெயில்வே காலனி 5வது லேஅவுட், சதர்ன் செல்டர், நறுமுகை அபார்ட்மெண்ட்.

    சின்மையாநகர்: சாய்நகர், காளியம்மன் கோவில் தெரு, மேற்கு நடேசன்நகர், பச்சையம்மன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, இளங்கோநகர், சாய்பாபா காலனி, ரத்னாநகர், தாராசந்த்நகர், எல் மற்றும் டி காலனி, சி.ஆர்.ஆர்.புரம், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திராநகர், ராஜீவ்காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரஹலட்சுமி அபார்ட்மென்ட், சஞ்சய் காந்திநகர், வாயுபுத்ரா தெரு, பாலாம்பால்நகர், தங்கல் தெரு, ரெட்டி தெருவின் ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மெண்ட், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜிநகர், எஸ்பிஐ காலனி, பிஏ. காலனி, மேட்டுக்குப்பம், புவனேஸ்வரிநகர்.

    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
    • வருகிற 27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, வருகிற 27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • இந்திய மக்கள்தொகையில் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
    • உ.பி.யில் சில மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்.

    மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற 'திங்க் இந்தியா' மாநாட்டில் கலந்துகொண்டார்.

    இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கிறது என்று கூறுபவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்.

    கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்(NEP) கீழ் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் அரசியலைத் தவிர்க்க வேண்டும்.

    மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதியை தர முடியும். நிதியுதவி உள்ளிட்ட மத்திய அரசின் முயற்சிகள் மாணவர் நலன் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

    மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். இது சரியானது அல்ல. கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை திணிக்கக் கூடாது.

    நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதைத் தெளிவுபடுத்திவிட்டேன். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம் என பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

    தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர இத்தனை மொழிகள் கற்பிக்கப்படும்போது, மூன்றாவது மொழியால் என்ன பிரச்சனை?  

    நாங்கள் எந்த மொழியையும் யாரையும் மீது திணிக்கவில்லை. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டு மொழிகளும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஒரு மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். மற்ற இரண்டு மொழிகளை மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம்.

    பல மாநிலங்கள் மும்மொழி கொள்கையைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில், மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், மராத்தி அல்லது அவர்கள் விரும்பினால் தமிழைக்கூட தேர்வு செய்யலாம்.

    இந்தியாவில் சுமார் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் தாய்மொழிகள் அல்லது பிராந்திய மொழிகளைப் பேசுகிறார்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மொழியை ஆழமாக நேசிக்கிறார்கள். நான் ஒரு ஒடியா, எனக்கும் என் மொழி மீது அன்பு உண்டு, ஆனால் மற்ற மொழிகளையும் மதிக்கிறேன். மொழியின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயன்றவர்கள் தோல்வியடைந்துவிட்டனர். சமூகம் அதைத் தாண்டி முன்னேறிவிட்டது" என்று தெரிவித்தார்.

    மேலும் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை நிறுத்தி வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதான், "இது ஒரு அரசியல் பிரச்சினை. நான் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் பலமுறை இதைப்பற்றி பேசியுள்ளேன். நாடு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்றுக்கொண்டது. அதை நாம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை.

    மத்திய அரசு பல திட்டங்களுக்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளது. வயது வந்தோர் கல்வித் திட்டங்களுக்கும், பிரதமர் போஷன் (மதிய உணவு) திட்டத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேசஷ் மற்றும் எம்.பி கனிமொழியை நேரில் சந்தித்தபோது RTE நிதி குறித்து மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.

    மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இதில் அரசியல் நலன்களைக் கொண்டு வர வேண்டாம். நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன் " என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.  

    • நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.
    • இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.

    நபிகள் நாயகம் 1500வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    அண்ணாவும், கலைஞரும் சந்தித்துக் கொண்டது மிலாது நபி விழாவில் தான். இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் அந்த சந்திப்பின்போது தான் அமைந்தது.

    இந்த மேடையில் இருப்பவர்கள் அனைவருக்கும் இடையிலான ஒற்றுமை நீடிக்க வேண்டும்.

    நமது நடத்தை அனைவருக்குமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றவர் நபிகள் நாயகம்.

    நபிகள் கூறிய சமத்துவத்தை தான் தந்தை பெரியாரும் முன்மொழிந்தார்.

    காசாவில் அரங்கேறும் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காசாவில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும்.

    மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கும் அரசியல் இயக்கம் திமுக.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக உள்ள இயக்கம் திமுக. பாஜகவிற்கு துணை போகிற இயக்கங்களை புறகணிக்க வேண்டும். 

    • நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார்.

    அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.

    அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    இந்நிலையில், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார்.

    2026 தேர்தலில் திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது" என்றார்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
    • இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசாபாளையம், புதபூஞ்சோலைகுப்பம்

    கடலூர்:

    கடலூர் நல்லாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளைமறுநாள் (23-ந் தேதி) நடக்கிறது.

    இதனால் நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், புதுக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், தூக்கணாம்பாக்கம், ராசாபாளையம், புதபூஞ்சோலைகுப்பம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×