என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    • விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை விரைவில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயரும் என தெரிகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.


    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசுக்கும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது.
    • கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்தார். மேலும் மைலோடு கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவையின் முன்னாள் பொருளாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜெமினி, மைலோடு ஆலய நிர்வாகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவரை, பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சேவியர் குமார், ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்திற்கு சென்றார். அப்போது அங்கு நடந்த தகராறில் சேவியர் குமார் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக ஜெமினி கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, பங்குத்தந்தைகள் ராபின் சன், பெனிட்டோ, பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் ஜஸ்டிஸ் ரோக், வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    சேவியர் குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பணி வழங்க வேண்டும், 2 மகள்களுக்கும் ரூ. 2 கோடி வழங்க வேண்டும், மைலோடு ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஆனால் ஆலய வளாகத்திற்குள் அடக்கம் செய்வதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உறவினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் சேவியர் குமாரின் வீட்டிற்கு விஜய்வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சந்தித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதற்கிடையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பங்குத்தந்தை ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பங்கு பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார். தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் சேவியர் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (26-ந்தேதி) போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி.
    • ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர்.

    திருவிடைமருதூர்:

    தொடர் மழை காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-

    குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி கடந்த 2014-ம் ஆண்டில் மோடி பிரதமர் ஆகுவதற்கு மக்கள் வாய்ப்பு அளித்தனர். இப்போது, 3-வது முறையாக மோடி பிரதமராக தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி. அனைத்து கட்சியினரும் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். தனது வருங்கால சந்ததியினர் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மோடிக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர். மக்களின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன்.

    ராமருக்கும், தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேட்கின்றனர். ஆனால், ராமருக்கும், தமிழகத்துக்கும் ஆண்டாண்டு கால பந்தம் உள்ளது. தமிழகத்தின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ராமர் வழிபட்டுள்ளார்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    • வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.
    • சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

    இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிதாக வீடு ஒன்றை கட்டி இன்று அதிகாலை கிரகபிரவேசம் செய்துள்ளார்.


    சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    • தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் இடையே வருகிற 28-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தைப்பூச விழா (நாளை), குடியரசு தினம் (நாளை மறுதினம்), 27-ந் தேதி (சனிக்கிழமை), 28 (ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னையில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தென்மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

    காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. 'தட்கல்', பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தைப்பூசம், குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 405 சிறப்பு பஸ்களும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 580 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்று 5 ஆயிரத்து 722 பயணிகளும், நாளை 7 ஆயிரத்து 222 பயணிகளும் சென்னையில் இருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அன்று 15 ஆயிரத்து 669 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அப்படியே ஒளிபரப்ப இயலாது.
    • தமிழ்நாடு சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்?

    சென்னை:

    சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி ஜெகதீஷ்வரன் என்பவர் 2012-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவரை தொடர்ந்து இதே கோரிக்கையுடன் தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த் 2015-ம் ஆண்டும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2023-ம் ஆண்டும் பொதுநல வழக்குகளை தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.டி.பாலாஜி, அண்மையில் மனுதாரர் விஜயகாந்த் இறந்து விட்டார். எனவே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த சட்டப்பூர்வமான பிரதிநிதி யார்? என்று கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

    இதையடுத்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப சபாநாயகர் முழு விருப்பத்துடன் உள்ளார். ஆனால், இதை பகுதி பகுதியாகத்தான் அமல்படுத்த முடியும். தற்போது சட்டசபை கேள்வி நேரம், கவனஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், கவர்னர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது'' என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், "ஆனால், சட்டசபை நிகழ்வுகளில் ஆளும் கட்சியினருக்கு பாதகமான காட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான காட்சிகளை எல்லாம் வெட்டி, தணிக்கை செய்து ஒளிபரப்புவதாகத்தான் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டு்கின்றனர். எதிர்க்கட்சியினரின் வாதங்களை காட்டுவதே இல்லை என்கின்றனர். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினர்.

    ''இந்த வழக்கு 2012-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அப்போது அவர்கள் (அ.தி.மு.க.வினர்) நேரடி ஒளிபரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போது நேரடி ஒளிபரப்பு வேண்டும் என்கின்றனர்'' என்ற அட்வகேட் ஜெனரல் கூறினார்.

    மேலும், "சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அப்படியே ஒளிபரப்ப இயலாது. ஏன் என்றால் உறுப்பினர்கள் ஏதாவது அவதூறாக பேசினால் அது அப்படியே ஒளிபரப்பாகிவிடும். அதை சமூக வலைத்தளங்கள் எடுத்து மறு ஒளிபரப்பு செய்து வைரலாக்கி விடுவர். அந்த பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கினால், அது பயனற்றதாகி விடும்'' என்றார்.

    மனுதாரர் ஜெகதீஷ்வரன் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கார்த்திக் சேஷாத்திரி, எலிசபெத் சேஷாத்திரி ஆகியோர், "அதுபோன்ற விவாதங்கள் நேரடி ஒளிபரப்பில் வந்தாலும், எதிர்காலத்தில் அந்த காட்சியை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடலாம். பாராளுமன்றம் மற்றும் மக்களவையில் நேரடியாகத்தான் ஒளிபரப்பு செய்யப்படுகிறது'' என்றனர்.

    அதற்கு நீதிபதிகள், பாராளுமன்றத்தில் மட்டும் எப்படி நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர்? அவர்கள் செய்யும்போது, தமிழ்நாடு சட்டசபையில் நேரடி ஒளிபரப்பு செய்வதால் என்ன பிரச்சனை ஏற்படும்? சட்டசபை விவாதங்கள் அனைத்தும் அவைகுறிப்பாக புத்தகமாக வெளியிடும்போது, நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன? தேவையில்லாத சம்பவம் நடக்கும்போது, அதுபோன்ற காட்சிகளை நீக்கி விட்டு சிறிது நேரம் கழித்து ஒளிபரப்பலாமே? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், பாராளுமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு குறித்து எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், இதுகுறித்து அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன்'' என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். 

    இந்நிலையில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை, காவல் துறை, தீயணைப்பு துறையும் அணிவகுப்பில் பங்கேற்றனர். 

    கவர்னர், முதலமைச்சர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடைபெற்றது.

    குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு பழனி.
    • இன்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நடந்து வருகிறது.

    6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வருவதால் பழனி நகரின் அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

    • தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்.
    • ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் கோயம்பேட்டில் இருந்து இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை புறநகரில் இருந்து இயக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைமம் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் (ஆம்னி பேருந்துகள்) மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில்தான் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். மாநகர பகுதிகளுக்குள் வரக்கூடாது என ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரும் அறிவுறுத்தி இருந்தார்.

    அதேவேளையில் பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளதால் பயணம் தடைப்படாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குத்தான் வருகிறது.

    நாளை தைப்பூசம், அதனைத் தொடர்ந்து குடியரசு நாள் என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட வாய்ப்புள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

    • மைதானத்தின் மொத்த பரப்பளவு 66.80 ஏக்கர் ஆகும்.
    • ஏறுதழுவுதல் அரங்கம் மட்டும் 16 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. 4500 பேர் பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைப்பு.

    தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

    அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவுதல் அரங்கம்- 16 ஏக்கர், அரங்க கட்டிட பரப்பளவு - 77683 சதுர அடி, பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் - 4,500 என பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மைதானத்திற்கு செல்வதற்கு வசதியாக புதிதாக சாலைகள் போடப்பட்டு உள்ளன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்தவுடன் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திறப்பு விழா இன்று நடக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.

    500 காளைகள் சீறிப்பாய, 300 வீரர்கள் பிடிக்க உள்ளனர்.

    • இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவானது.
    • தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. இன்று வெளியிட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது.

    இந்த ஆலோசனையில் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவுசெய்யப்பட்டது. அந்தப் பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

    தூத்துக்குடியில் பிப்ரவரி 5, கன்னியாகுமரியில் பிப்ரவரி 6, மதுரை பிப்ரவரி 7, தஞ்சாவூர் பிப்ரவரி 8, சேலம் பிப்ரவரி 9, கோயம்புத்தூர் பிப்ரவரி 10, திருப்பூர் பிப்ரவரி 11, ஓசூர் பிப்ரவரி 16, வேலூர் 17, ஆரணி பிப்ரவரி 18, விழுப்புரம் பிப்ரவரி 20 மற்றும் சென்னையில் பிப்ரவரி 21, 22 ,23 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

    ×