என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.
- ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் அவரது மனைவி வளர்மதி.
இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகாலட்சுமி என்ற மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற 9 வயது மகனும் உள்ளனர்.
சிறிய அளவிலான விவசாய நிலம், 2 மாடுகளை வளர்த்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்த இந்த குடும்பத்தினருக்கு வளர்மதியின் உடல் நலக்குறைவால் நிலைமை தலைகீழாக மாறியது.
வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் உள்ளூர் மற்றும் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியில் தனது மனைவி வளர்மதியை அழைத்துச் சென்று பெரும் செலவு செய்து சிகிச்சை பார்த்தார்.
பரிசோதனை செய்து பார்த்தபோது அபூர்வ வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் குணமாகும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் கடந்த 1½ ஆண்டு காலமாக இந்த நோய் குணமாகவில்லை.
இதையடுத்து பெங்களூருக்கு சென்று அங்கும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் சிகிச்சை காரணமாக குடும்ப வருமானம் பாதித்தது. மேலும் மருத்துவச் செலவிற்கு வீட்டை அடமானம் வைத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றனர். ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.
தொடர்ந்து சிகிச்சை பெற வழி இல்லாததால் அவர்கள் செய்வது அறியாது வேதனையில் தவித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலை அறிந்து அவரது மகள் மகாலட்சுமி தானே வீட்டு வேலைகளையும் சமையல் வேலைகளையும் செய்து தாயை பராமரித்து விட்டு அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருகிறார்.
அதேபோல சக்திவேலும் மாட்டையும் ஒரு கன்று குட்டியையும் தானே தீவனம் போட்டு பராமரித்து வளர்த்து பணிகளை முடித்து பள்ளிக்கு சென்று வருகிறார்.
மேற்கொண்டு சிகிச்சை பெற வழி இல்லாமல் வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர் தங்களுக்கு உதவ தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும் முன் வரவேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
- பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நாளை நடைப்பெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள,
1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம், 4. அந்திரசன் பள்ளி, 5.பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும் 9.எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10.ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு நாளை மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது.
- மாணவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது.
- சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.
அம்பத்தூர்:
பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது மகன் சூரிய பிரகாஷ் (21). என்ஜினீயரிங் மாணவர். இவர் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காலில் இரும்பு கம்பி கிழித்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சூரியபிரகாஷ் தடுப்பூசி போட சென்றார். அவருக்கு நர்சு ஒருவர் தடுப்பூசியை இடுப்பில் போட்டதாக தெரிகிறது. அப்போது ஊசி உடைந்து உடலுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சூரியபிரகாசை அண்ணா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த உடைந்த ஊசி அகற்றப்பட்டது.
உரிய சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து கொரட்டூர் போலீஸ் நிலையத்திலும், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மாணவரின் தந்தை புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
- பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
சென்னை:
தமிழகத்தில் அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையவும், அவை பொதுமக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மக்களை நாடி, மக்கள் குறைகேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.
(4-வது புதன்கிழமைகளில்) ஒருநாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களை சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும்.
ஆய்வு செய்யப்படும் வட்டத்தில் கலெக்டர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது.

சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஒவ்வொரு வட்டத்தை தேர்வு செய்து இன்று காலை 9 மணி முதல் கிராமங்களில் அதிகாரிகளுடன் முகாமிட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், அரசு விடுதிகள், பூங்கா, சமூக நல மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், போக்குவரத்து சேவை, குடிநீர் வசதி, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து திட்டப்பணிகள், பொது மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்கள் பெற்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர்கள் காஞ்சிபுரம், திருப்போரூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் காலை 9 மணியளவில் வந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் புதிய திட்டம் குறித்தும் அதனை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இ-சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேசன் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய கிடங்கு, பள்ளிகளை பார்வையிட்டார்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களில் இருந்த பொதுமக்களிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுடன் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
பின்னர் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், பஸ் போக்கு வரத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து இரவு தங்குகிறார்.
நாளை காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை மீண்டும் ஆய்வுப் பணி நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், குடிநீர் வசதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். காலை 9 மணி முதல் கச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மம்பாக்கம் கிராமம், மதுரா சீத்தஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், பெருஞ்சேரியில் உள்ள ரேசன் கடை, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊத்துக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடை பெற்றது. பின்னர் பொது மக்களிடம் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்கள் விடுதி, பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மம் பாக்கம் கிராமத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தங்குகிறார். நாளை (1-ந்தேதி) மீண்டும் ஆய்வு பணியை தொடங்கும் கலெக்டர் பிரபுசங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரப்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம், கச்சூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்று உள்ள கலெக்டர் அருண்ராஜ் காலை 9 மணி அளவில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அனைத்து துறை அதிகாரிகளுடன் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், சத்துணவு கூடங்களில் ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து கேளம்பாக்கம், அருங்குன்றம், ஒரகடம், ஆமூர், கீழூர் ஆகிய கிராமங்களில் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற் கொண்டு கிராமமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவளம், கே.ஆர்.குப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்தார். நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.
ஆலத்தூர் கிராமத்தில் பயனாளிகளுக்கு பட்டாக்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். பின்னர் மதியம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.
இன்று மாலை தண்டலம் மயிலை, நாவலூர், கீழூர், ஆமூர் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் தெரு விளக்குகளின் செயல்பாடுகள் மற்றும் பூங்காக்கள், பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இரவு திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் கலெக்டர் அருண்ராஜ் தங்குகிறார்.
நாளை காலை செம்பாக்கம், நெல்லிக்குப்பம், கொட்டமேடு, முட்டுக்காடு, கோவளம் வடநெம்மேலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கலெக்டர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் ஆலத்தூர், பையனூர், தண்டலம், மடையத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தை பொது மக்கள் வரவேற்று உள்ளனர். மாவட்ட கலெக்டர் முதல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே வந்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதால் இந்த திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
- எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் பேசியதாவது:-
எனது வார்டில் புயலால் 100-க்கும் மேலான மின் கம்பங்கள் சாய்ந்தன. முருகப்பா நகர் குளத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மேயருக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள்.
எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.
தனியரசு (மண்டல தலைவர்): வட சென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி சி.எம்.டி.ஏ. ஒதுக்கியது. அந்த நிதியில் என்ன பணிகள் செய்யப்படுகிறது. அது என்ன திட்டம், எந்தெந்த பணிகளுக்கு அதில் இருந்து நிதி ஒதுக்குகிறீர்கள்.
மகேஷ்குமார் (துணை மேயர்): 30 தொகுதிகளுக்கு அந்த திட்டத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்கள். அது என்ன வேலை என்று தெரியவில்லை.
ராதாகிருஷ்ணன்: மாநில அரசு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சி.எம்.டி.ஏ. மூலம் வளர்ச்சி நிதி தரப்படுகிறது. இது பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படும். எந்தெந்த பணிகளுக்கு இந்த பணம் ஒதுக்கப்படும் என்ற தகவலை இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் நான் உறுப்பினர்களுக்கு தருகிறேன்.
டில்லிபாபு: (காங்கிரஸ்) கொடுங்கையூரில் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டப்படி குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இடம் மீட்கப்படும் என மன்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு கூறினீர்கள். ஆனால் இதுரையில் எந்த பணியும் அங்கு நடைபெறவில்லை. அந்த திட்டம் என்ன ஆனது?
மேலும் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு சுடுகாடு அமைத்து தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்து சுடுகாடு பணிகள் மட்டும் மெதுவாக நடைபெறுகிறது. மற்ற சுடுகாடு பணிகள் நடைபெறவில்லை.
மேயர் பிரியா:- வெகு விரைவில் குப்பை கிடங்கு பயோமைனிங் திட்டம் தொடங்கப்படும். 2 வருடத்தில் முடிக்கப்படும்.
பரிதி இளம் சுருதி: பேரிடர் காலத்தில் வார்டுகளில் பணிகள் செய்யும் போது ஒரு பகுதி பாதிக்கிறது. அதனால் ஒரு வார்டுக்கு 2 உதவி பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்.
சுகன்யா செல்வம் (காங்கிரஸ்): சூளைமேடு பகுதியில் மழைக்கு பிறகு சாலைகள் புதிதாக போடப்பட்டது. அந்த சாலைகளை மின்வாரிய ஊழியர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
கமிஷனர் ராதாகிருஷ்ணன்: இது தவறான செயல். அனுமதி இல்லாமல் சாலைகளில் கை வைக்கக்கூடாது. இது தொடர்பாக துறை செயலாளர்களிடம் பேசுகிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.
- அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அட்டை காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார்.
- தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும் மகாலட்சுமி தனது கணவருடன் குடும்பம் நடத்த மனமின்றி விரக்தியில் இருந்து வந்தார்.
இதையடுத்து திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு அறிவுரைகள் கூறியும் மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. மாறாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
இந்த விஷயம் அறிந்த முன்னாள் காதலன் சதீஷ் குமார் மீண்டும் மகாலட்சுமியிடம் காதலை தொடர்ந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயங்களில் மகாலட்சுமி அடிக்கடி சதீஷ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் கடுமையான ஆத்திரம் அடைந்தார். மேலும் சதீஷ்குமாரையும், மகாலட்சுமியும் கண்டித்துள்ளார். ஆனாலும் சதீஷ்குமார் அத்துமீறி மகாலட்சுமியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட எண்ணிய பிரவீன் குமார், சதீஷ்குமாரை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.
இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரவீன்குமார், அக்காவின் முன்னாள் காதலன் சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதனை சற்றும் எதிர்பாராத சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற பிரவீன்குமார், சதீஷ்குமாரை அங்கிருந்த நாடக மேடை அருகே சுற்றி வளைத்து மடக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையை தனியாக துண்டித்து நாடக மேடையின் நடுவில் வைத்தார்.
இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார், அதே கொலை வெறியுடன் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த பிரவீன்குமாரின் தாய் சின்ன பிடாரி வீட்டிற்குள் வந்தார்.
ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றி மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று தடுக்க முயன்றார். ஆனாலும் வெறி அடங்காத பிரவீன் குமார் தாயின் கையையும் வெட்டி துண்டாக்கினார். இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக சதீஷ் குமாரின் தம்பி முத்துக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கூடக்கோவில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்டு கிடந்த சதீஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கை துண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான பிரவீன்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- சரக்கு வேனில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
- சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி:
கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சரக்கு வாகனம், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் அடிக்கடி தமிழகத்திற்கு தருமபுரி வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக தருமபுரி மாவட்ட எல்லை பகுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவின்பேரில் தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், இளமதி ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று காலை 9 மணியளவில் கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையி்ல் புதிய ரவுண்டனா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மைசூருவில் இருந்து வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வேன் டிரைவரை பிடித்து விசாரித்ததில் கர்நாடகா மாநிலம் மைசூரு சி.வி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுல்லா செரிப் (50) என்பவர் மைசூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா பொருட்களை கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சரக்கு வேனில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 2 டன் கிலோ மதிப்பிலான கூலிப், புகையிலை, போதை பாக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பானுசுஜதா, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 2 டன் அளவிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வேனில் கடத்தி வந்த சம்பவம் போலீசாரால் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
- போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்கு வரத்து நிறைந்து இருக்கும்.
இப்பகுதியில் சாலையில் ஒருபுறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் சாலை ஓரத்தில் மாலை நேர டிபன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சல்மான் பாரிஸ் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
உடனே சாலை ஓரத்தில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள போக்குவரத்தை நிறுத்தினர்.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் கடையநல்லூர் தீயணைப்புத்துறையில் இருந்த வண்டி அருகில் உள்ள ஊருக்கு பூக்குழி திருவிழாவிற்கு சென்றதால் அதற்கு பதிலாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அங்கே இருந்த இளைஞர்கள் முகமது காலித், அக்பர், ஹாஜி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிரே இருந்த ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பொது மக்களும், வாலிபர்களும் துரிதமாக செயல்பட்டதால் கடையநல்லூரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
- 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-வைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
- தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,
ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏபி சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே பாராளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது கழகம். 2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர்.
— M.K.Stalin (@mkstalin) January 31, 2024
இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க… https://t.co/fePoodTxQq
- முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம்.
- இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
வேலூர்:
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று ஆய்வு செய்தார்.
முல்லைபெரியாறு விவகாரம் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி பேச்சு வார்த்தை நடத்துவோம். நாங்களும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.

மேகதாது அணை விவகாரத்தில் இன்னும் ஆய்வு மேற்கொள்வது குறித்து கேட்டதற்க்கு, அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆய்வு பண்ணாலும் சரி படம் வரைந்தாலும் சரி, செய்து போட்டோ எடுத்து போட்டாலும் சரி, டி.பி.ஆர் தயாரிக்கும் ரிப்போர்ட்டுக்கு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் வேண்டும், இரண்டாவது மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் ஒத்துக் கொள்ளும் வரை அது நடக்காது.
வெள்ள பாதிப்பில் இன்னும் நிதி வரவில்லை கேட்டிருக்கிறோம்.

"உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தை இப்பதான் தொடங்கி கல்யாணம் பண்ணி இருக்கோம் அதுக்குள்ள குழந்தையை பற்றி கேட்டால் எப்படி தெரியும். எங்களிடம் திட்டங்கள் எந்த அளவுக்கு பயன் தந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும்.
இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் விலகியது ஒரு திருவிளையாடல் தான். இது மாதிரி திடீர் திடீர் செய்திகள் வரும் இதெல்லாம் எதிர்பார்த்துதான் கூட்டணி அமைக்கிறோம். எதிர்பார்த்துதான் தேர்தலை சந்திக்கிறோம். இதெல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல. எங்களுக்கு இது பழசு தான்.
தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தையை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் மட்டும் தான் தற்போதைக்கு பேசிவிட்டு செல்கின்றார்கள்.
சோசியல் மீடியாவில் தவறாக பரவும் தகவலை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் நிலைபாடு மாறிக்கொண்டே இருக்கும். என்றைக்கோ பேசியதை இன்றைக்கு பரப்பக்கூடியது என்பது ஆண்மை இல்லாத தனம்.
இந்தியா கூட்டணி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு வருவார்கள் போவார்கள் கூட்டணி இறுதி ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.
- நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவிலில் ஒரு தரப்பினர் தங்கள் சமூகத்திற்கு மண்டகப்படி வழங்க வேண்டும் என கேட்டு கடந்த 19-ந்தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோவில் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அதன் பிறகு எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாததால் மீண்டும் கடந்த 27-ந்தேதி முதல் கோவில் வளாகத்திலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.
கோட்டாட்சியர், இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் இன்று ஊர்வலமாக புறப்பட்டு சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்கள் பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கையில் கருப்புக் கொடி ஏந்தியும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்களை ஏந்தியபடியும் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.






