என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்றார். பின்னர் மாடுகளை விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் மண்டபம் அருகே வந்தபோது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி முனையில் மிரட்டி வெங்கட முனியை காரில் கடத்தினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் கடத்தல் கும்பல் வெங்கடமுனியை காரில் கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டு வெங்கடமுனி தராததால் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்று இருப்பதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து வேலூர் பகுதிக்கு வந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் விரட்டிச்சென்று காரில் கடத்தப்பட்ட வெங்கடமுனியை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கடத்தப்பட்ட வெங்கட முனியை 12 மணிநேரத்தில் போலீசார் மீட்டு உள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
- எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் 6 பிளாட்பாரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு நாள்தோறும் 2100 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும்.
இந்த நிலையில் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் நவீன முறையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் 30-ந்தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் ஏற்கெனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டன. இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்து கழக பஸ்களில் 80 சதவீத பஸ்கள் நேற்று முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டன. மீதமுள்ள 20 சதவீத பஸ்கள் மாதவரம் புறநகர் பஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டன.
மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஏற்கெனவே ஆந்திராவுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி, கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி ஆகிய இடங்களுக்கு தினமும் 160 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஊர்களுக்கு செல்லும் மற்ற 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு 710 பஸ்கள் செல்கின்றன.
இதையடுத்து பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்.இ.டி.சி மற்றும் டி.என்.எஸ்.டி.சி பஸ்கள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே தற்போது கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பகல் நேரத்தில் மிகவும் குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் பயணம் மேற்கொள்வதை காண முடிகிறது. இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்த பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டு கிடக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காக்காப்பாளையம்:
இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் அமைத்தனர்.
இந்நிலையில் மயானத்தின் எதிர்ப்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 4 ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு நிலத்தை சமன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டது.
இந்த பகுதியில் ஏற்கனவே மின் மயானம், குப்பை கிடங்கு ஆகியன உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அருள் ஆகிய 2 பேரும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் மேலும் பாதிப்படையும் எனவே மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறி கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 ஊராட்சிகள், பேரூராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும்போது வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட பணிகள் பாதிக்கப்படும். எனவே ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைக்க கூடாது என்று கூறினார்கள்.
இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமைச்சரை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
இந்த நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியிருந்தார். இருப்பினும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் லீபுரம், கோவளம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், குலசேகரபுரம், நல்லூர், ராமபுரம், இரவிப்புதூர் உள்பட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.
பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயக்குமாரி லீன், ஸ்டெனி சேவியர், சிந்து செந்தில், தங்கமலர் சிவபெருமான், தேவி, சுடலையாண்டி நிலா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
2-ந்தேதி தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் வள்ளங்கள் சீரமைக்க கோரிக்கை.
- மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு, உட்பட்ட ஜோசப் தெரு, அந்தோணியார் தெரு மற்றும் சகாயமாதா தெரு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையில் மீன்பிடி வள்ளங்கள் கரையில் நமது அலுவலக ஜே.சி.பி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
- ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், 'புகார்தாரரை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை. அவரை குடும்பத்தில் ஒருவராக கருதி அவருக்கு தனி படுக்கை அறை ஒதுக்கி உரிய பாதுகாப்பு வழங்கினோம். மேல்படிப்புக்கும் ஏற்பாடு செய்தோம். நாங்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. நாங்கள் அப்பாவி. எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, காவல் துறை மற்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இளம்பெண் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சம்மனுடன் போலீசார் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.
- மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
- மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை:
மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தலின்போது வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மாணவர்கள் வகுப்புகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையத்திற்கு மருத்துவ கல்லூரி டீன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
மேலும் மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு உரிய முடிவு எடுத்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.
- மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது மழையூர் கிராமம். இங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது அங்கு வந்த 6 பேர் அந்த மாணவனை கடத்தி சென்று சரமாரியாக தாக்கினர்.
இதில் அந்த மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திரண்டனர்.
மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கரம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.
தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே மாணவரை தாக்கியவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 6 கல்லூரி மாணவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
- கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
- பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்பு.
சென்னை தலைமை செயலகத்தில், 2024- 2025ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தின்போது, விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
- கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
- 1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் தொழில் உரிமம் பெறாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் துப்பரவு ஆய்வாளர்கள் கிரி, ரமேஷ், துப்பரவு மேற்பார்வையாளர் கவுரிசங்கர் மற்றும் பணியாளர்கள், ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள 2 பிரியாணி கடைகள் மற்றும் ஒரு பேக்கரி என தொழில் உரிமம் பெறாமல் நடத்தி வந்த 3 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர், அந்த கடை உரிமையாளர்கள் தொழில் உரிமத்துக்கு ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பித்ததை தொடர்ந்து, மாலையில் அந்த கடைகளில் சீல் அகற்றப்பட்டது.
இதுவரை மாநகராட்சி மூலம் 6,963 வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கியதில், இதுவரை 1,896 வணிக நிறுவனங்கள் மட்டுமே தொழில் உரிமம் பெற விண்ணப்பித்து, 1,219 வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறப்பட்டுள்ளது.
328 வணிக நிறுவனங்கள் மாநகராட்சியிடம் விண்ணப்பித்தும், கேட்புத் தொகையினை இதுவரை ஆன்லைன் மூலம் செலுத்தவில்லை.
எனவே மாநகராட்சி தொழில் உரிமம் பெற கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் உடனடியாக, இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து தொழில் உரிமம் பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில், தொழில் உரிமம் பெறாத கடைகள், தொழில் நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.
சென்னை:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, பிப்ரவரி 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






